ஜெ. ஜெயலலிதா (24 பிப்ரவரி 1948 – 5 டிசம்பர் 2016), முன்னாள் தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார். இவர் தமிழக முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார். இவர் 1991 முதல் 1996 வரையும், 2001 ஆம் ஆண்டில் சில மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் இருந்தார். 2015 மே 23 முதல் இறக்கும் வரையில் (5 திசம்பர் 2016) முதலமைச்சராகப் பணி புரிந்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்த இவரை “புரட்சித் தலைவி” எனவும் “அம்மா” எனவும் இவரது ஆதரவாளர்கள் அழைத்தனர்.தனது தொட்டில் குழந்தை திட்டத்துக்காக ஐக்கிய நாடுகள் சபையில் (ஐ.நா சபை) மத்தியில் கைதட்டைப் பெற்ற இந்தியாவை சார்ந்த முதல் பெண் முதலமைச்சர் இவரே ஆவார்.
அரசியலுக்கு நுழைவதற்கு முன்னர் இவர் 120 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னட மொழித் திரைப்படங்களில் முன்னணிப் பாத்திரங்களில் நடித்திருந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
மைசூர் சமஸ்தானம் (தற்போது கர்நாடகா) மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம் -வேதவல்லி இணையரின் மகளாக 24 பிப்ரவரி 1948ஆம் நாள் பிறந்தார். இவரது இயற்பெயர் கோமளவல்லி. இவர் தாத்தா அவ்வூரில் உள்ள கோவில் ஒன்றில் அர்ச்சகராக இருந்தார். எனினும் இவர்களின் மூதாதையர்கள் தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்டவர்கள். ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதான பொழுதே அவர் தந்தை ஜெயராம் காலமானார். அதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க வந்த தாயார் வேதவல்லி தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டார். அவர் பெங்களூரில் இருந்தபோது ஜெயலலிதா பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். சென்னைக்கு வந்த பின்னர், 1958-ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் படித்து மெட்ரிக் தேறினார். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் புகுமுக வகுப்பில் படிக்க அனுமதி கிடைத்த நேரத்தில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே படிப்பைக் கைவிட்டு நடிகையானார். ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.
ஜெயலலிதாவுக்கு ஜெயக்குமார் என்ற அண்ணன் ஒருவர் இருக்கிறார். அவருக்கு தீபக் என்ற மகனும், தீபா என்ற மகளும் உள்ளனர். ஆரம்ப காலத்தில் தாய் சந்தியா இருந்த போது ஜெயக்குமார் குடும்பத்துடன் எல்லோரும் ஒன்றாகவே போயஸ் கார்டனில் இருந்தார்கள். தாய் காலமான பின்னர் ஜெயக்குமார் குடும்பத்துடன் வெளியேறி விட்டார். ஜெயக்குமாரும் அவர் மனைவியும் காலமாகிவிட்டனர். அதன்பின் ஜெயலலிதாவுக்கும் அவர்கள் குடும்பத்துக்குமிடையில் தொடர்பு விட்டுப்போனது.
திரையுலகப் பங்களிப்பு
ஜெயலலிதா 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவற்றுள் எம்.ஜி.ஆருடன் 28 படங்களில் இணைந்து நடித்தார். மேலும் சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், ரவிசந்திரன், சிவகுமார், ஏ. வி. எம். ராஜன், என். டி. ராமராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ், தர்மேந்திரா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். மக்கள் பலரும் ஜெயலலிதாவின் நடிப்பை வெகுவாக ரசித்தார்கள். இவரது நடிப்பை பாராட்டி இவருக்கு ‘கலைச்செல்வி’ என்ற பட்டத்தை அளித்தார்கள். இவர் ம. கோ. இராமச்சந்திரன் உடன் நடித்த அனைத்து திரைப்படங்களும் வெகுவாக பாராட்டப்பட்டது. தன் நடிப்பின் மூலம் பல ரசிகர்களை சம்பாதித்தார்.
அரசியல் பங்களிப்பு
அதிமுக கொள்கைபரப்புச் செயலாளர்
1982 சூன் 4ஆம் நாள் கடலூரில் நடைபெற்ற விழாவில் அ. தி. மு. க. வில் இணைந்து, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார்.
மாநிலங்களவை உறுப்பினர்
அதன் பிறகு 1984 மார்ச் 24ஆம் நாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். நாடாளுமன்றத்தில் தன் ஆங்கில புலமையால் பல தலைவர்களை கவர்ந்தார். தனது கன்னிப்பேச்சிலேயே அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தியைக் கவர்ந்தார். இவருக்கு நாடாளுமன்றத்தில் 185வது இருக்கை அளிக்கப்பட்டது. அந்த இருக்கை 1962 முதல் 1967 வரை தி.மு.க. நிறுவுநரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான கா. ந. அண்ணாதுரை அமர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு முன்னர், அதிமுகவைச் சேர்ந்த மோகனரங்கம் (மேலவை உறுப்பினர்) அவ்விருக்கையில் அமர்ந்திருந்தார்.
அணித்தலைவர்
எம். ஜி. இராமச்சந்திரனின் மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்தது. கட்சியின் மூத்த தலைவர்கள் எம்.ஜி.இராமசந்திரன் மனைவி ஜானகி இராமச்சந்திரன் தலைமையில் ஓர் அணியாகவும் பிறர் ஜெ. ஜெயலலிதாவின் தலைமையில் மற்றோர் அணியாகவும் பிரிந்தனர். 1988 சனவரி 28ஆம் நாள் தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பின்பொழுது அப்பிரிவு மோதலாக வெளிப்பட்டது.
பொதுச்செயலாளர்
1989ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணி சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 27 இடங்களைக் கைப்பற்றியது. ஜானகி தலைமையிலான அதிமுக அணி ஒரேயோர் இடத்தில் மட்டுமே வென்றது. இதனால் ஜானகி அரசியல் களத்திலிருந்து விலகினார். ஜெயலலிதா அ. தி. மு. கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார்.
எதிர்கட்சித்தலைவர்
1989ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். அவர் மீதும் அவருக்குத் துணையாக இருந்த ம. நடராசன் மீதும் தொடக்கப்பட்ட வழக்கு ஒன்றிற்காக நடராசன் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஜெயலலிதாவின் சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகல் கடிதம் கிடைத்தது. அந்நிகழ்விற்குப் பின்னர், 1989 மார்ச் 25ஆம் நாள் நிதிநிலை அறிக்கையை வாசித்த கருணாநிதி தாக்கப்பட்டபொழுது ஏற்பட்ட குழப்பத்தில் ஜெயலலிதாவும் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதனால் ஜெயலலிதா, ‘‘தி.மு.க உறுப்பினர்கள் எனது புடவையை இழுத்தார்கள். இந்தச் சட்டமன்றத்தில் பெண்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. சட்டமன்றாம எப்பொழுது பெண்களுக்குப் பாதுகாப்பானதாக மாறுகிறதோ அப்பொழுதுதான் சட்டமன்றத்துக்குள் வருறவன்” என்று கூறிச்சென்றார்.
முதல்வர்
1991ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக – காங்கிரஸ் கூட்டணி 225 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஜெ. ஜெயலலிதா 1991 சூலை 24ஆம் நாள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அப்பொழுது அவரின் காலில் கே. செங்கோட்டையன் விழுந்தார்; அவரைத் தொடர்ந்து பிறரும் விழுந்தனர். அதிமுகவில் காலில் விழும் கலாச்சாரம் தொடங்கியது. சட்டசபை இவரைப் புகழ்ந்துரைக்கும் இடமாக மாறியது. ஜெயலலிதா தனது முதலமைச்சர் பணிக்காக ஒவ்வொரு மாதமும் ஒரு ரூபாய் மட்டும் ஊதியமாகப் பெற்றார். இவர் மீதும் அமைச்சர்கள் மீதும் எதிர்கட்சிகள் ஊழல் புகார்களை அடுக்கின. இவர் முதல்வராக இருந்த 1991–96 பதவிக் காலத்தில் பல திட்டங்களை தமிழகத்தில் கொண்ட வந்தார். பெண்கள் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறைகொண்டு பல நல்ல திட்டங்களைக் கொண்டுவந்தார்.
அதேவேளையில் 1992 பிப்ரவரி 18ஆம் நாள் இவர் கும்பகோணம் மகாமகக்குளத்தில் சென்று நீராடியபொழுது ஏற்பட்ட கூட்டநெரிசலில் தர்மசாலா என்ற கட்டிடத்தின் சுவர் இடிந்துவிழுந்து 48பேர் இறந்தார்கள்.
ஜெ. ஜெயலலிதா, தன் தோழி சசிகலாவுக்கு அக்கா மகனான சுதாகரன் என்னும் 28 வயது இளைஞரை தன் மகனாகத் தத்தெடுத்தார். அவருக்கு 1995 செப்டம்பரில் ஆடம்பரமாகத் திருமணம் செய்துவைத்தார்.
சிறையில்
1996ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜெ.ஜெயலலிதா பர்கூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அவரது கட்சி ஆட்சியை இழந்தது. அவர் மீதும் அவரது அமைச்சரவையிலிருந்த அமைச்சர்கள் பலர் மீதும் ஊழல் வழக்குகள் தொடக்கப்பட்டன. 1996 திசம்பர் 6ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.சிவப்பா, ஜெயலலிதாவின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார். 1996 திசம்பர் 7ஆம் நாள் ஜெயலலிதா, ஊழல் வழக்கின் மீதான விசாரணைக்காக கைதுசெய்யப்பட்டு சென்னை மத்தியச் சிறையில் 2529ஆம் எண்கைதியாக அடைக்கப்பட்டார். அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 300 கிலோ தங்கம், 500 கிலோ வெள்ளி, 150 விலைமதிப்புமிக்க கைக்கடிகாரங்கள், 10,000 புடவைகள், 250 ஜோடி செருப்புகள் கைப்பற்றப்பட்டன. 28 நாள்களுக்குப் பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்தார். நகை அணிவதைத் தவிர்த்தார். சசிகலாவையும் அவர்தம் உறவினர்களையும் தனது வீட்டிலிருந்து வெளியேற்றினார். ஆனால், ஈராணடு சிறைவாசத்திற்குப் பின்னர் 1999ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியேவந்த சசிகலா மீண்டும் ஜெயலலிதாவின் வீட்டில் குடியேறினார்.
சட்டமன்றப் பொறுப்புகள்
தமிழக முதல்வர்
ஜெயலலிதா தமிழக முதல்வராக கீழ்காணும் காலங்களில் பணியாற்றியிருக்கிறார்.
முதல் | வரை | தேர்தல் | குறிப்பு |
ஜூன் 24, 1991 | மே 11, 1996 | 1991 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் | தமிழகத்தின் 11வது முதல்வர் |
மே 14, 2001 | செப்டம்பர் 21, 2001 | தேர்தலில் போட்டியிடாமல் முதல்வராக பதவி வகித்தார் | இப்பதவி முடக்கப்பட்டது |
மார்ச் 2, 2002 | மே 12, 2006 | 2001 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் | தமிழகத்தின் 14வது முதல்வர் |
மே 16, 2011 | செப்டம்பர் 27, 2014 | 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் | தமிழகத்தின் 16வது முதல்வர் (இப்பதவி முடக்கப்பட்டது) |
மே 23, 2015 | மே 22, 2016 | 2015 ஆர். கே. நகர் இடைத்தேர்தல்[11] | தமிழகத்தின் 18வது முதல்வர் |
மே 23, 2016 | டிசம்பர் 5, 2016 | 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் | தமிழகத்தின் 19வது முதல்வர் (இப்பதவி முடக்கப்பட்டது) |
இவர் மேல் வழக்குகள் இருந்தாலும் 2001, மே அன்று முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டதால் நான்கு மாதம் கழித்து பதவி விலகினார். இவர் மீதான தண்டனை டான்சி வழக்கில் நீக்கப்பட்டதை தொடர்ந்து 2002, மார்ச்சு மாதம் முதல்வராக பதவியேற்றார். 2002இல் ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் போட்டியிட ஏதுவாக தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியிலிருந்து பதவி விலகினார். 2002, பிப்ரவரி 21ல் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்
ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார்.
சட்டமன்ற உறுப்பினர்
ஆண்டு | நிலைமை | இடம் |
1989 | வெற்றி | போடிநாயக்கனூர் |
1991 | வெற்றி | பர்கூர், காங்கேயம் |
1996 | தோல்வி | பர்கூர் |
2002 | வெற்றி | ஆண்டிப்பட்டி |
2006 | வெற்றி | ஆண்டிப்பட்டி |
2011 | வெற்றி | திருவரங்கம் |
2015 | வெற்றி | டாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர் |
2016 | வெற்றி | டாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர் |
2001, ஏப்பிரல் 24. அன்று ஜெயலலிதா 2001, மே 10 அன்று நடைபெற்ற 2001 சட்டமன்றத் தேர்தலுக்கு 4 தொகுதிகளுக்கு ( ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை) வேட்புமனு அளித்திருந்த மனுக்கள் தள்ளுபடி\நிராகரிக்கப்பட்டன. இவையனைத்தும் இரண்டு ஆண்டுகளுக்கோ அதற்கு மேலோ தண்டனைபெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட சட்டம் அனுமதிக்கவில்லை என்பதால் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆண்டிப்பட்டி தேர்தல் அதிகாரி செயா, கிருஷ்ணகிரி தேர்தல் அதிகாரி மதிவாணன் சட்ட உட்கூறு 8(3) கீழ் வேட்புமனுவை தள்ளுபடி செய்தனர். இச்சட்டத்தின் படி ஒருத்தர் இரு தொகுதிகளுக்கு மேல் மனு தாக்கல் செய்திருந்தால் மனுவை தள்ளுபடி செய்யலாம். ஜெயலலிதா டான்சி நில வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றிருந்தார். அவரது மேல் முறையீடு மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா முடிவு செய்தார். 2001ம் ஆண்டு ஆண்டிப்பட்டியில் தங்க. தமிழ்ச்செல்வன் அதிமுக சார்பாக வென்றார்.
2016 தேர்தலில் போட்டி
2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் டாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர் போட்டியிட்டார்.அவரது வேட்புமனுவில் உள்ள சொத்து விவரங்களின்படி, செயலலிதாவுக்கு உள்ள மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.118.58 கோடியாகும், கடன் ரூ.2.04 கோடி. 2006ம் ஆண்டு ஜெயலலிதா சட்டசபை தேர்தலில் போட்டியிட்டபோது அவரின் சொத்து மதிப்பு ரூ.24.7 கோடியாக இருந்தது. 2011 சட்டசபை தேர்தலின்போது அவரின் சொத்து மதிப்பு ரூ.51.40 கோடியாக உயர்ந்தது. ஏப்பிரல் 25, 2016 அன்று வேட்புமனு அளித்தார். அத்தேர்தலில் டாக்டர். ராதாகிருஷ்ணன் நகரில் போட்டியிட்டு 97,218 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
ஜெயலலிதா தலைமையில் அதிமுகவின் சாதனைகள்
- 1991 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 168 இடங்களில் போட்டியிட்டு 164 இடங்களில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சியில் அமர்ந்தது.
- 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் 18 இடங்களில் வெற்றிபெற்று அடல் பிகாரி வாச்பாய் தலைமையில் அமைந்த மத்திய அரசில் அதிமுக அங்கம் வகித்தது.
- 2001 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 132 இடங்களில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சியில் அமர்ந்தது.
- 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 150 இடங்களில் வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார்.
- 2011 ஆம் ஆண்டு செப்டம்பர்/அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், தமிழகத்தில் அப்போது இருந்த 10 (இப்போது 12) மாநகராட்சிகளிலும் வெற்றிபெற்றது.
- 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் ஜெயலலிதாவின் தலைமையில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக, 37இல் வென்று வரலாற்றுச் சாதனை புரிந்தது. மேலும் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையையும் பெற்றது.
- 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அதிமுக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 227இல் நேரடியாகவும், 7இல் அதிமுக கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் அதிமுகவின் இரட்டை இல்லை சின்னத்திலும் போட்டியிட்டு 134 தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது. 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தது 2016இல் தான்.
- 2016 ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் 4 உறுப்பினர்களை அனுப்பியதன் மூலம், நாடாளுமன்றத்தில் அதிமுகவின் பலம் 50 (37 மக்களவை + 13 மாநிலங்களவை) ஆக உயர்ந்தது. இது தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியும் செய்யாத சாதனை.
- 2011 சட்டமன்ற தேர்தல், 2011 உள்ளாட்சித் தேர்தல், 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல் என தொடர்ச்சியாக 4 தேர்தல்களில் பெரும்பாலும் தனித்து நின்று ஜெயலலிதா தலைமையில் அதிமுக வெற்றிவாகை சூடியது.
அதிமுக தோற்றுவிக்கப்பட்ட பிறகு நடந்த தேர்தல்கள்
மேலும் அதிமுக தோற்றுவிக்கப்பட்ட பிறகு இதுவரை நடந்த 10 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 7 முறை அதிமுக ஆட்சியைப்பிடித்து, தமிழகத்தில் அதிக முறை ஆட்சி அமைத்த கட்சி என்ற சாதனையைப் படைத்தது.
சட்டசபை
வருடம் | பொதுத்தேர்தல் | கிடைத்த வாக்குகள் | வெற்றிபெற்ற தொகுதிகள் | தலைவர் |
1977 | 6வது சட்டசபை | 51,94,876 | 131 | எம்.ஜி.ஆர் |
1980 | 7வது சட்டசபை | 73,03,010 | 129 | எம்.ஜி.ஆர் |
1984 | 8வது சட்டசபை | 80,30,809 | 134 | எம்.ஜி.ஆர் |
1989 | 9வது சட்டசபை | 1,48,630 | 27-Feb | ஜெ அணி /ஜா அணி |
1991 | 10வது சட்டசபை | 1,09,40,966 | 164 | ஜெ. ஜெயலலிதா |
1996 | 11வது சட்டசபை | 58,31,383 | 4 | ஜெ. ஜெயலலிதா |
2001 | 12வது சட்டசபை | 88,15,387 | 132 | ஜெ. ஜெயலலிதா |
2006 | 13வது சட்டசபை | 1,07,68,559 | 61 | ஜெ. ஜெயலலிதா |
2011 | 14வது சட்டசபை | 1,41,49,681 | 151 | ஜெ. ஜெயலலிதா |
2016 | 15வது சட்டசபை | 1,76,17,060 | 134 | ஜெ. ஜெயலலிதா |
இதில் நான்கு முறை ஜெயலலிதா தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றியது அதிமுக.
விருதுகளும் சிறப்புகளும்
இவர் கலைப் படைப்புகளுக்காகவும், சமூகப் பணிகளுக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
- கலைமாமணி விருது – தமிழ்நாடு அரசு (1972)
- சிறப்பு முனைவர் பட்டம் – சென்னைப் பல்கலைக்கழகம் (டிசம்பர் 19, 1991)
- தங்க மங்கை விருது – பன்னாட்டு மனித உரிமைகளுக்கான குழு, உக்ரைன்
பிடித்த புத்தகங்கள்
ஜான் மில்டன் எழுதிய ‘பாரடைஸ் லாஸ்ட் (இழந்த சொர்க்கம்)பாரடைஸ் ரீகெய்ன்ட் (மீண்ட சொர்க்கம்)’ போன்ற புத்தகங்களை அடிக்கடி வாசிப்பார்
புனைப் பெயர்கள்
- ‘அம்மு’ என்று அழைக்கப்பட்டார். 1991 தேர்தலில் அஇஅதிமுக வெற்றி பெற்று முதல்வரான பின்னர் மரியாதை கருதி அம்மா என்று தொண்டர்களால் அழைக்கப்பட்டார்.
- புரட்சித்தலைவர் என்றழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ம. கோ. ராமச்சந்திரனின் அரசியல் வாரிசாக கருதப்படுவதால், புரட்சித் தலைவி என்றும் அழைக்கப்பட்டார்.
வழக்குகள்
ஜெயலலிதாவின் மீதான வழக்கு விவரங்கள்:
வண்ணத் தொலைக்காட்சி வழக்கு
- ஊராட்சிகளில் பயன்படுத்த 45,302 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கியதில் 10.16 கோடி ரூபாய் அளவிற்கு கையூட்டுப் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட இவ்வழக்கில் ஜெயலலிதா, சசிகலா நடராசன், சசிகலாவின் உறவினர் பாஸ்கரன், அன்று உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த டி.எம். செல்வகணபதி, தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர், அதிகாரிகள் ஹெச்.எம்.பாண்டே, சத்தியமூர்த்தி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்கள்.
- தீர்ப்பு – அரசுத் தரப்பு சாட்சிகளாக 80 பேரை விசாரித்த நீதிமன்றம் குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் ஜெயலலிதா, சசிகலா, பாஸ்கரன் ஆகியோரை 2000-ஆம் ஆண்டு மே 30 அன்று விடுவித்தார். அதேசமயம் அமைச்சர் செல்வகணபதிக்கும், அதிகாரிகளுக்கும் 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
டான்சி நில வழக்கு
- சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள, அரசு நிறுவனமான டான்சிக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தை ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திற்காக வாங்கியதாகவும் அதை விற்ற வகையில் அரசுக்கு சுமார் 3 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
- தீர்ப்பு – 2000-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் இரண்டு வழக்குகளுக்குமாகச் சேர்த்து ஐந்தாண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை அளித்தது.
- சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது 2000-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் அந்தத் தீர்ப்பிற்குத் தடை விதித்தது. ஆனால் சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை ரத்து செய்யவில்லை. இது 2001-ஆம் ஆண்டு ஒரு சட்ட சிக்கலுக்கு வித்திட்டது. 2001-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா பெரும் வெற்றி பெற்று, முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்க முடியாது, எனவே அவர் பதவியேற்கக் கூடாது என வழக்குகள் தொடரப்பட்டன, இவ்வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து ஜெயலலிதா முதல்வர் பதவியை விட்டு விலகினார். 2003-இல் சென்னை உயர்நீதி மன்றம் அவரை விடுவித்த பின்னர் ஆண்டிப்பட்டித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார்.
- இவ்வழக்கின் காரணமாக அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகி ஓ. பன்னீர்செல்வம் முதல்வரானார்.
பிளசண்ட் ஸ்டே விடுதி வழக்கு
- கொடைக்கானலில் கட்டிட விதிகளை மீறி, ஐந்து மாடிகள் உடைய நட்சத்திர விடுதி கட்டிக்கொள்ள பணம் பெற்றுக்கொண்டு அனுமதி அளித்ததாகக் குற்றச்சாட்டு.
- தீர்ப்பு – சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன், முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதாவிற்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்தார். அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அன்றைய அமைச்சர் செல்வகணபதி, அதிகாரி பாண்டே, விடுதி இயக்குநர் ராகேஷ் மிட்டல், விடுதியின் சேர்மன் பாளை சண்முகம் ஆகியோருக்கு ஒன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்தார். 2000-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் நாள் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது
- 2000-ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவிற்குச் சிறைத் தண்டனை விதித்த செய்தி வெளியானதும் அதிமுகவினர் தமிழகம் முழுவதும் ரகளையில் ஈடுபட்டனர். அச்சமயம் தருமபுரி மாவட்டத்திற்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்த கோவை வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் பயணித்த பேருந்து மறிக்கப்பட்டு பேருந்துக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அந்தச் சம்பவத்தில் காயத்ரி, கோகில வாணி, ஹேமலதா என்ற மூன்று பெண்கள் உயிரோடு எரிக்கப்பட்டு இறந்து போயினர். தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் மூன்று அதிமுகவினருக்கு சேலம் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் சென்னை உயர் நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தன, இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு, ‘கல்லூரி’ என்று ஒரு திரைப்படம் உருவானது.
நிலக்கரி இறக்குமதி வழக்கு
- தமிழக அனல் மின்நிலையங்களில் பயன்படுத்த ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் முறைகேடுகள் நடந்ததாகவும் அதனால் அரசுக்கு 6.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், தலைமைச் செயலாளர் டி.வி. வெங்கட்ராமன், மின்வாரியத் தலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.
- தீர்ப்பு – சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுக்களைத் தள்ளுபடி செய்தது. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
- இந்த வழக்கில் சுப்ரமணியம் சுவாமியும் ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டார். ‘700 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாகப் புகார் அளித்திருந்த சுப்ரமணியம் சுவாமியால், விசாரணையின்போது குற்றச்சாட்டுகளைப் பட்டியலிடவோ, விளக்கவோ முடியவில்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.
டிட்கோ-ஸ்பிக் பங்குகள் வழக்கு
- அரசு -தனியார் கூட்டுறவில் உருவான நிறுவனம் ஸ்பிக். செட்டிநாட்டரசர் குடும்பத்தைச் சேர்ந்த எம்.ஏ. சிதம்பரமும், அவரது மகன் ஏ.சி. முத்தையாவும், தோற்றுவித்த அந்த நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை (26%) தமிழக அரசு நிறுவனமான டிட்கோ வைத்திருந்தது. நிறுவனத்தின் தலைவராக எம்.ஏ.சிதம்பரமும், துணைத்தலைவராக ஏ.சி.முத்தையாவும் இருந்தார்கள். 89-ஆம் ஆண்டு ஏற்பட்ட திமுக ஆட்சியின்போது பெரும்பான்மைப் பங்குகளை தமிழக அரசு வைத்திருப்பதால் தலைமைச் செயலாளர்தான் தலைவராக இருக்க வேண்டும் என்று அரசு முடிவெடுத்தது. :எம்.ஏ.சிதம்பரம் குடும்பத்தினர் தலைவராவதற்கு ஏதுவாக தமிழக அரசு தன்னிடமிருந்த 2 லட்சம் கடன் பத்திரங்களை அவர்களுக்கு மாற்றிக் கொடுத்தது. 12.37 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை 40.66 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டுதான் கொடுத்தது. ஆனால், இதில் ஊழல் நடந்ததாக சுப்ரமணியன் சுவாமி கூறி வந்த குற்றச்சாட்டுக்களையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.
- தீர்ப்பு – 2004-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ஆம் நாள் சிறப்பு நீதிமன்றம் சி.பி.ஐ. குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கவில்லை எனச் சொல்லி வழக்கைத் தள்ளுபடி செய்து, ஜெயலலிதாவை விடுதலை செய்தது. அரசுக்கோ, டிட்கோவிற்கோ நிதி இழப்பு ஏற்படவில்லை என்றும் சொல்லியது.
- செய்தித்தாளில் வந்த ஒரு கட்டுரையின் அடிப்படையில் பொது நல வழக்குத் தொடர்ந்ததாகவும், இந்தப் பங்கு பரிமாற்றம் பற்றித் தனக்குத் தனிப்படத் தெரியாது என்றும் அதுவும் கட்டுரை வெளிவந்து மூன்றரை ஆண்டுகளுக்குப் பின் வழக்குத் தொடர்ந்திருப்பதாலும் பொது நல வழக்குத் தொடர்ந்த சுப்ரமணிய சுவாமியின் சாட்சியத்தை ஏற்க இயலாது என நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.
பிறந்த நாள் பரிசு வழக்கு
- 1992-ஆம் ஆண்டு 57 பேரிடமிருந்து 89 வரைவோலைகள் (இதில் அயல்நாட்டிலிருந்து 3 லட்சம் டாலருக்கான ஒரு வரைவோலையும் அடக்கம்) மூலம் 2 கோடி ரூபாய்க்கு மேல் தனது பிறந்த நாளன்று பரிசாகப் பெற்றதாக சி.பி.ஐ. தனது முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. பின்பு குற்றச்சாட்டுப் பதிவு செய்தபோது 21 பேரிடமிருந்து 1.48 கோடி ரூபாய் என்று அதைக் குறைத்துவிட்டது. இந்த வழக்கில் அன்றைய அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டார்கள்.
- தீர்ப்பு – 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி கே.என். பாஷா, சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த மொத்தக் குற்றசாட்டுக்களையும் தள்ளுபடி செய்து ஆணை பிறப்பித்தார். பத்தாண்டுகளாகியும் சி.பி.ஐ. விசாரணையை முடிக்காமல் காரணமின்றி இழுத்தடிக்கிறது என்று குறிப்பிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட எவரும் புகார் அளித்து, சி.பி.ஐ. இந்த வழக்கைத் தொடரவில்லை என்றும், ஜெயலலிதா அவரது வருமான வரி தாக்கலின் போது பிறந்தநாள் பரிசுகள் குறித்துக் கொடுத்திருந்த தகவலை அடிப்படையாகக்கொண்டே குற்றச்சாட்டு கூறப்படுகிறது. எனவே அவர் எந்தத் தகவலையும் மறைக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது என்று நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கு
- ஜெயலலிதா தமிழக முதல்வராக 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.56 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக 1996 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி சென்னை நீதிமன்றத்தில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கினைத் தொடர்வதற்கான அனுமதியை மாநில ஆளுனரிடமிருந்து சுப்பிரமணியன் சுவாமி பெற்றார்.
- 2001 ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வரானது இந்த வழக்கின் விசாரணையை கர்நாடகத்துக்கு மாற்ற வேண்டும் என தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் மனு அளித்தார். அதை ஏற்று கொண்ட நீதிமன்றம், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றி கடந்த 2003 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
- பெங்களூருவில் உள்ள மாநகர சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் விசாரணை தொடங்கியது.
- இவ்வழக்கில் 252 அரசுத் தரப்பு சாட்சிகளிடமும், 99 எதிர்தரப்பு சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
- குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 313ன் கீழ், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதியுடன் வாதங்கள் நிறைவடைந்தன.
- 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தியதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்தார்.
- பாதுகாப்பு காரணங்களுக்காக தீர்ப்பு கர்நாடக மாநிலத்தின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழங்கப்படும் என என நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்தார்.
- இவர் முதல்வராக இருந்த 1991–96 பதவிக் காலத்தில் வருமானத்துக்கு மீறிய அளவில் ஜெயலலிதா சுமார் 66.65 கோடி சொத்து சேர்த்தார் என்ற வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், செயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.
- இதன் தொடர்ச்சியாக அவர் முதல்வர் பதவியை இழந்தார். அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
- மே 11 ,2015 அன்று சொத்துக்குவிப்பு வழக்கின் வழங்கப்பட்ட தண்டனைக்கெதிராக இவரால் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார்.
- ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல் முறையீடு செய்தது.
- 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் திகதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா, சசிகலா, வி. என். சுதாகரன், ஜெ. இளவரசி ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இந்த நால்வரில், முதல் குற்றவாளியான செயலலிதா இறந்துவிட்டதால், அவருக்கு எதிராக ரூபாய் 100 கோடி அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது. வி. கே. சசிகலா, வி. என். சுதாகரன், ஜெ. இளவரசி ஆகிய மூன்று பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 10 கோடி அபராதமும் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டது.
வருமானவரிக் கணக்கு வழக்கு
ஜெயலலிதா வருமான வரி வழக்கு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது அவர் 1993-1994 ஆம் ஆண்டில் தனது வருமானம் குறித்த கணக்கை வருமான வரித்துறைக்கு சமர்ப்பிக்கவில்லை என வருமான வரித் துறையால் 1996 ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்காகும். 1991-1992, 1992-1993 ஆகிய ஆண்டுகளில் சசி எண்டர்பிரைசசும் அதன் பங்குதாரர்களான ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரும் வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, 1997ல் மேலும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது வருமானவரித் துறை. வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பான வருமானவரி வழக்கு சென்னை கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவந்தது.
இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்யவேண்டுமெனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 2006ல் நிராகரிக்கப்பட்டன. பிறகு, உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் நான்கு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்கும்படி எழும்பூர் பெருநகர நீதிமன்றத்திற்கு கடந்த 30 ஜனவரி 2014ஆம் தேதியன்று உத்தரவிட்டது. பிறகு இந்த கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையில், இந்த விவகாரத்தை சமரசமாகப் பேசித் தீர்ப்பதற்கு கடந்த ஜூன் 25ஆம் தேதியன்று வருமான வரித்துறையிடம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் 17-09-2014ல் நடந்தது. இந்த வழக்கு நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரூபாய் வருமான வரித்துறையினர் விதித்த அபராதத் தொகை இரண்டு கோடியை வருமானவரித் துறைக்கு ஜெயலலிதா மற்றும் சசிகலா அபராதம் செலுத்தியதால், 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி அன்று வருமானவரித் துறையினர் வழக்கை திரும்ப பெற்றதின் மூலம் வருமானவரிக் கணக்கு வழக்கு முடிவுக்கு வந்தது. அனைத்து வழக்குகளிலிருந்தும் இவர் விடுவிக்கப்பட்டமையால் 2015 மே மாதம் 23 ஆம் தேதி அன்று தமிழக முதலமைச்சராகப் ஐந்தாவது முறையாகப் பதவி ஏற்றுக்கொண்டார்.
2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக் குறைவும், மருத்துவ சிகிச்சைகளும்
2016ஆம் ஆண்டின் செப்டம்பர் 22 அன்று உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 75 நாட்களுக்குப் பிறகு உடல்நலம் மிகவும் மோசமாகி உயிரிழந்தார்.
மறைவு
ஜெயலலிதா, 5 டிசம்பர் 2016 அன்று இரவு 11.30 மணிக்கு சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் காலமானார்.
மருத்துவமனையிலிருந்து போயஸ் கார்டனிலுள்ள அவரின் வேத நிலையம் இல்லத்துக்கு ஜெயலலிதாவின் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு, இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. அதன் பிறகு ராஜாஜி அரங்கத்திற்கு அவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்திய சனாதிபதி பிரணப் முகர்ஜியின் இறுதி அஞ்சலிக்குப்பின் முப்படையிடம் ஒப்படைக்கப்பட்டு மாலை 6.10 மணிக்கு ஆளுனரின் மரியாதைக்குப் பின்னர் எம்ஜிஆர் நினைவிடத்திற்குப் பக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்குகளை ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் செய்தனர்.
கட்சித் தொண்டர்கள் உயிரிழப்பு
ஜெயலலிதா உயிரிழந்த செய்தியறிந்து தமிழகத்தில் சுமார் 470 பேர் மாரடைப்பாலும், தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்தனர். மேலும் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.3 இலட்சம் நிதியுதவி வழங்குவதாகவும், அதிர்ச்சியிலிருந்து மீளமுடியா தொண்டர் ஒருவர் தனது சுண்டு விரலை வெட்டிக்கொண்டார். அவருக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்குவதாகவும் அஇஅதிமுக சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.