நடிகர் கொத்தமங்கலம் சுப்பு | Actor Kothamangalam Subbu

கொத்தமங்கலம் சுப்பு (Kothamangalam Subbu, 10 நவம்பர் 1910 – 15 பெப்ரவரி 1974) என்பவர் கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர், திரைப்பட இயக்குநர், கதை வசனகர்த்தா, வில்லுப்பாட்டிசைக் கலைஞர் என்று மட்டுமல்லாது பத்திரிக்கையாளர், துணைஆசிரியர், நாடகநடிகர் என்று பன்முகங்கள் கொண்ட அறிஞராக அறியப்பட்டார்.

மிகப் பிரபலமான தில்லானா மோகனாம்பாள் தொடர்கதையை ஆனந்த விகடனில் கலைமணி என்ற புனைபெயரில் எழுதியவர். பத்மசிறீ விருது பெற்றவர்.

ஆரம்ப காலம்

கொத்தமங்கலம் சுப்புவின் இயற்பெயர் சுப்பிரமணியன். இவர் தமிழ்நாடு, காரைக்குடிக்கு அருகில் கன்னாரியேந்தல் என்ற ஊரில் மகாலிங்கம் ஐயருக்கும், கங்கம்மாளுக்கும் பிறந்தார்.

சிறு வயதிலேயே தாயை இழந்த சுப்பு, சிற்றன்னையின் பராமரிப்பில் வளர்ந்தார். 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றார். சொந்தத்திலேயே மீனாட்சி என்ற பெண்ணைத் திருமணம் (பிற்காலத்தில் பிரபலமான நடிகை சுந்தரிபாயைத் திருமணம் செய்தார்.) செய்துகொண்ட சுப்பு கொத்தமங்கலம் என்ற ஊருக்குக் குடிபெயர்ந்து, அங்கே வணிக நிறுவனம் ஒன்றில் எழுத்தராகப் பணியாற்றினார்.

ஆனாலும், அவரது ஆர்வம் நாடகங்களிலும், நடிப்பிலும், பாடல்களிலும் இருந்தது. கவிதைகள் இயற்ற ஆரம்பித்தார். 3,500 பாடல்களில் காந்திமகான் கதையை எழுதினார்.

பல நாட்டுப் பாடல்களை இயற்றியிருக்கிறார். 1930களின் இறுதியில் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இயக்குனர் கே. சுப்பிரமணியம் மூலம் கிட்டியது.

திரையுலகப் பணி

கொத்தமங்கலம் சுப்பு முதன் முதலில் 1935 ஆம் ஆண்டில் கே. சுப்பிரமணியம் இயக்கிய பட்டினத்தார் திரைப்படத்தில் நடித்தார்.

1936 இல் சந்திரமோகனா என்ற திரைப்படத்தில் நடிகர் எம். கே. ராதாவின் நண்பனாக நடித்தார்.

அதன் பின்னர் 1937 இல் மைனர் ராஜாமணி, தொடர்ந்து அனாதைப் பெண், அதிர்ஷ்டம், திருநீலகண்டர், சாந்த சக்குபாய், அடங்காப்பிடாரி, கச்ச தேவயானி, மதனகாமராஜன் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

1944 ஆம் ஆண்டில் வெளிவந்த ஜெமினியின் தாசி அபரஞ்சி இவர் நடித்த ஒரு வெற்றிப் படம் ஆகும். 1945 ஆம் ஆண்டில் கண்ணம்மா என் காதலி படத்தை இயக்கினார்.

இதன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் அனைத்தையும் சுப்புவே எழுதியிருந்தார். இப்படத்தில் மனைவி சுந்தரிபாய் கதாநாயகியாக நடித்திருந்தார்.

1947 இல் மிஸ் மாலினி திரைப்படத்தை இயக்கி, அதில் தானே கதாநாயகனாக நடித்தார். இத்திரைப்படம் பின்னர் மிஸ்டர் சம்பத் என்ற பெயரில் இந்தியில் வெளிவந்தது.

1953 ஆம் ஆண்டில் அவ்வையார் என்ற பிரபலமான திரைப்படத்தை இயக்கினார். கே. பி. சுந்தராம்பாள் போன்ற அன்றைய பிரபலமான நடிகர்கள் இதில் நடித்தனர். இத்திரைப்படத்தில் மனைவி சுந்தரிபாயுடன் சிறு வேடம் ஒன்றில் சுப்பு நடித்தார்.

நடித்த திரைப்படங்கள்

 • பட்டினத்தார் (1935)
 • நவீன சாரங்கதரா (1935)
 • சந்திரமோகனா (1936)
 • மைனர் ராஜாமணி (1937)
 • அனாதைப் பெண் (1938)
 • அதிர்ஷ்டம் (1939)
 • திருநீலகண்டர் (1939)
 • சாந்த சக்குபாய் (1939)
 • பக்த சேதா (1940)
 • சூர்யபுத்ரி (1941)
 • அடங்காப்பிடாரி (1939)
 • கச்ச தேவயானி (1941)
 • மதனகாமராஜன் (1941)
 • தாசி அபரஞ்சி (1944)
 • மிஸ் மாலினி (1947)

இயக்கிய திரைப்படங்கள்

 • கண்ணம்மா என் காதலி (1945)
 • மிஸ் மாலினி (1947)
 • அவ்வையார் (1953)

படைப்புகள்

 • தில்லானா மோகனாம்பாள் (புதினம்)
 • பந்தநல்லூர் பாமா (புதினம்)
 • பொன்னி வனத்துப் பூங்குயில் (வரலாற்றுப் புதினம்)
 • ராவ் பஹதூர் சிங்காரம் (புதினம்)
 • மஞ்சுவிரட்டு (கவிதைத் தொகுப்பு)

150 சிறுகதைகள், 100க்கு மேற்பட்ட நாடகங்கள் எழுதியுள்ளார்.

விருதுகள்

 • பத்மஸ்ரீ விருது (1971)
 • கலாசிகாமணி (1967)

வெளி இணைப்புகள்

நடிகர் கொத்தமங்கலம் சுப்பு – விக்கிப்பீடியா

Actor Kothamangalam Subbu – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.