கே. பி. சுந்தராம்பாள் என அறியப்படும் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் (அக்டோபர் 11, 1908 – செப்டம்பர் 19, 1980) தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர். இவர் கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார்.
இளமைப்பருவம்
ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடியில் பாலாம்பாள் என்ற அம்மையாருக்கு சுந்தராம்பாள் பிறந்தார். இவருக்கு கனகசபாபதி, சுப்பம்மாள் என்ற இரண்டு சகோதரர்கள். இளம்வயதிலேயே தந்தையை இழந்தார். தனது சகோதரர்களின் ஆதரவால், குடும்பத்தை நடத்தி வந்தார் தாயார். ‘கொடுமுடி லண்டன் மிஷன் பள்ளி’யில் கல்வி கற்றார் சுந்தராம்பாள்.
நாடக வாழ்வில்
வேலுநாயர் – ராஜாமணி அம்மாள் நாடகக் குழுவினர் நல்லதங்காள் நாடகம் நடத்த கரூருக்கு வந்திருந்தனர். அந்த நாடகத்தில் நல்லதங்காளின் மூத்த பிள்ளையான ஞானசேகரன் வேடத்தை சுந்தராம்பாள் ஏற்று ஆண் வேடத்தில் நடித்தார். பசிக்குதே! வயிறு பசிக்குதே என்ற பாட்டை மிக அருமையாகப் பாடி ரசிகர்களிடன் ஏகோபித்த பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். சொந்தக் குரலிலேயே பாடி நடித்தார்.
1917−ல் கொழும்பு சென்று நடிக்கத் தொடங்கினார். இலங்கையின் பல ஊர்களிலும் இவர் நடித்த நாடகம் நடைபெற்றது. 1929களில் நாடு திரும்பினார்.
வள்ளி திருமணம், நல்லதங்காள், கோவலன், ஞானசெளந்தரி, பவளக்கொடி போன்ற அக்காலத்தில் புகழ்பெற்ற நாடகங்களில் நடித்தார்.
கிட்டப்பாவுடன் திருமணம்
மீண்டும் கே.பி.எஸ். 1926−ல் கொழும்புக்கு நாடகக் குழுவுடன் சென்றார். கே.பி.எஸ் புகழ் பரவலாக வளர்ந்திருந்தது. அக்காலத்தில் எஸ். ஜி. கிட்டப்பா தனது குரல் வளத்தால் நடிப்பால் பலரது கவனத்தைப் பெற்று புகழுடன் இருந்து வந்தார். கொழும்பில் கேபிஎஸ் உடன் இணைந்து கிட்டப்பா நடிக்க ஆரம்பித்தார்.
1926ஆம் ஆண்டு சுந்தராம்பாள் – கிட்டப்பா நடித்த வள்ளிதிருமணம் அரங்கேறியது. இருவரும் பின்னர் திருமணம் புரிந்து கொண்டனர்.
பல்வேறு இசைத் தட்டுகளில் கேபிஎஸ் பாடல்கள் பதிவு செய்யப்பட்டு எங்கும் ஒலிக்கத் தொடங்கின.
1933−ல் டிசம்பர் 2இல் கிட்டப்பா காலமானார். அப்போது அவருக்கு வயது 28. சுந்தராம்பாளுக்கு வயது 25. அன்றிலிருந்து அவர் வெள்ளை சேலைக் கட்டத்தொடங்கினார். எந்தவொரு ஆண் நடிகருடனும் ஜோடி சேர்ந்து நடிப்பதில்லை என சபதம் மேற்கொண்டார். அதைக் கடைசி வரை காப்பாற்றி வந்தார்.
நீண்டகாலமாக பொதுவாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இருந்த கேபிஎஸ் 1934−ல் நந்தனார் நாடகத்தில் நடித்தார். தொடர்ந்து பல நாடகங்களை நடத்தி வந்தார். அவைகளில் பெரும்பாலும் அவர் ஆண் வேடம் தரித்து பெண் வேடத்துக்கு வேறு பெண் நடிகர்களை அமர்த்தியிருந்தார்.
திரைப்படத் துறையில்
பக்த நந்தனார் என்னும் படத்தில் நந்தனார் வேடம் பூண்டு நடித்தார். பக்த நந்தனாரில் மொத்தம் 41 பாடல்கள். இவற்றில் சுந்தராம்பாள் பாடியவை 19 பாடல்கள். 1935இல் இப்படம் வெளிவந்தது.
அடுத்ததாக மணிமேகலையில் நடித்தார். 1938−ல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு 1940−ல் படம் வெளிவந்தது. இப்படத்தில் 11 பாடல்களை இவர் பாடியிருந்தார்.
தமிழிசை முதல் மாநாட்டு இசையரங்கில் (ஜனவரி 4, 1944) கலந்து கொண்டார்.
தொடர்ந்து ஔவையார் என்ற படத்தில் ஔவையார் வேடமேற்று நடித்தார். இப்படம் 1953−ல் வெளிவந்தது. ‘பொறுமை யென்னும் நகையணிந்து’ , ‘கன்னித் தமிழ்நாட்டிலே – வெண்ணிலவே’ போன்ற பாடல்கள் பிரசித்தமானவை. ஒளவையார் படத்தில் 48 பாடல்கள். இவற்றில் சுந்தராம்பாள் பாடியவை 30.
1964 பூம்புகார் படம் வெளிவந்தது. இப்படத்தில் கவுந்தி அடிகள் பாத்திரத்தை சுந்தராம்பாள் ஏற்று நடித்திருந்தார்.
மகாகவி காளிதாஸ் (1966), திருவிளையாடல் (1965), கந்தன் கருணை (1967), உயிர் மேல் ஆசை (1967), துணைவன் (1969), சக்தி லீலை (1972), காரைக்கால் அம்மையார் (1973), திருமலை தெய்வம் (1973), மணிமேகலை (பாலசன்யாசி) உள்ளிட்ட 12 படங்களில் சுந்தராம்பாள் பாடி நடித்தார்.
அரசியலில்
காங்கிரஸ் பிரச்சாரங்களில் சுந்தராம்பாள் தவறாது ஈடுபட்டு வந்தார். கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய பாடல்களையும் பாடி வந்தார். காமராசர் ஆட்சியின் போது 1958 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விருதுகளும் சிறப்புகளும்
இவர் பாடிய சில திரைப்படப் பாடல்களின் பட்டியல்:
1 | பழம் நீயப்பா… |
---|---|
2 | அரியது அரியது… / என்றும் பாடல் புதியது.. |
3 | துன்பமெல்லாம்… |
4 | அன்று கொல்லும் / நீதியே நீயென்னும்… |
5 | வாழ்க்கை என்னும் / ஒருவனுக்கு ஒருத்தி… |
6 | தப்பித்து வந்தானம்மா… |
7 | கேட்டவரம்… |
8 | ஓடுங்கால் ஓடி… |
9 | ஏழுமலை இருக்க… |
10 | ஞானமும் கல்வியும்… |
11 | பழநி மலை மீதிலே… |
12 | கொண்டாடும் திருச்செந்தூர்… |
13 | சென்று வா மகனே… |
14 | காலத்தால் அழியாத… |