லட்சுமி தமிழ்த் திரைப்பட நடிகையும் தொலைக்காட்சித் தொகுப்பாளரும் ஆவார். இயக்குநர் மல்லியம் ராஜகோபாலால் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டவர்.அவரது முதல் படம் ஜீவனாம்சம் 1968ஆம் ஆண்டு வெளிவந்தது. லட்சுமியின் தந்தை யரகுடிபாடி வரத ராவ் மற்றும் தாய் குமாரி ருக்மணி இருவருமே திரைத்துறையில் பணியாற்றியவர்கள். தந்தை வரத ராவ் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நெல்லூர் நகரைச் சேர்ந்தவர். நடிப்பதோடு சமூகப்பிரச்சினைகளை அலசும் திரைப்படங்களை தயாரிக்கவும் செய்தார். லட்சுமியின் தாய் ருக்மணியும் சிறந்த தமிழ் நடிகையாக விளங்கினார். எனவே திரைப்படங்களில் நடிப்பது அவருக்கு இயல்பாகவே அமைந்தது.
தேசிய விருது
1970-ம் ஆண்டுகளில் நான்கு தென்னிந்திய மொழிப்படங்களிலும் வெற்றிக்கொடி நாட்டினார். அவரது மலையாளப்படம் சட்டக்காரி (1974) அவருக்கு புகழ் தேடித் தந்தது. இத்திரைப்படம் 1975-ம் ஆண்டு ஜூலி என இந்தியிலும் மிஸ் ஜூலி பிரேம கதா என தெலுங்கிலும் எடுக்கப்பட்டன. இந்திப்பட நடிப்பிற்காக பிலிம்ஃபேர் விருதும் வங்காள திரையிதழாளர்கள் விருதும் . கிடைத்தது.
1977-ம் ஆண்டில் வெளிவந்த சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற எழுத்தாளர் செயகாந்தனின் புதினத்தை ஒட்டி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். 1980-களில் முதன்மை பாத்திரங்களில் நடிப்பது குறைந்தபோது துணைநடிகையாக பல படங்களில் நடித்துள்ளார். ஜீன்ஸ் படத்தில் பாட்டியாக நடித்து கவனத்தைக் கவர்ந்தார்.400 படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார்.
சின்னத்திரையிலும் அச்சமில்லை,அச்சமில்லை என்ற அரட்டைக்காட்சியில் தமது முத்திரையைப் பதித்தார். சமூகப்பிரச்சினைகளையும் தனிமனித அவலங்களையும் இத்தொடர் வெளிக்கொணர்ந்தது. தற்போது கன்னட சுவர்ணா தொலைக்காட்சியில் எது கதே அல ஜீவனா எனும் அரட்டைக்காட்சியை நடத்தி வருகிறார்.
குடும்பம்
தனது பதினேழாம் வயதில் பெற்றோர் ஏற்பாடு செய்த பாஸ்கர் என்பவரை மணம் புரிந்து 1971-ம் ஆண்டு ஐஸ்வர்யா என பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதன் பின்னர் பாஸ்கருடன் மணமுறிவு ஏற்பட்டு தனது மகளை தன்னுடன் வளர்க்கும் உரிமை பெற்றார். ஐஸ்வர்யா 1990-களில் இருந்து தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மலையாள படம் சட்டக்காரியில் நடித்த போது நடிகர் மோகனுடன் ஏற்பட்ட உறவும் முறிந்தது. என் உயிர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் நடிக்கையில் உடன் நடிகரும் பட இயக்குநருமாகிய சிவச்சந்திரன் உடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்.