லிஸ்சி லட்சுமி (Lissy Lakshmi) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பான்மையாக மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். சில தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரை தமிழ்த் திரைப்படங்களில் அறிமுகம் செய்தது கமல்ஹாசன் ஆவார். இவர் தான் தயாரித்து, நடித்த விக்ரம் (1986 தமிழ் திரைப்படம்) திரைப்படத்தில் லிஸ்சியை அறிமுகம் செய்தார். லிஸ்சி 1990 இல் இயக்குநர் பிரியதர்சனை திருமணம் செய்த பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.
ஆரம்ப வாழ்க்கை
லிஸ்சி பெப்ரவரி 3, 1967 இல் எர்ணாகுளம், கேரளத்தில் பிறந்தார். இவரின் தந்தை நெல்லிக்காட்டில் பாப்பச்சன், தாய் ஏலியம்மா ஆவர். இவர் குழந்தையாக இருந்தபோது இவரின் பெற்றோர் திருமண முறிவு பெற்றனர். அதனால் இவரின் தாயுடன் வாழ்ந்து வந்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்தவர். இவரின் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை புனித தெரசா கல்விநிலையங்களில் படித்தார். பள்ளிக் காலங்களில் சிறந்த மாணவியாகத் திகழ்ந்தார். மேலும் எஸ் எஸ் எல் சியில் அதிக மதிப்பெண்களைப் பெற்றார். தனது பதினாறாம் வயது முதல் நடித்து வருகிறார். திரைப்படத் துறையில் கவனம் செலுத்துவதற்காக தனது கல்லூரிப்படிப்பை இடைநிறுத்தம் செய்தார். துவக்கத்தில் படிப்பை நிறுத்துவதில் இவருக்கு உடன்பாடில்லை.
தொழில் வாழ்க்கை
1980 களின் ஆரம்பத்தில் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கினார். குறுகிய காலகட்டத்திலேயே முதன்மைக் கதாநாயகியானார். அன்றைய காலகட்டத்தில் இருந்த பெரும்பான்மையான முக்கிய நாயகர்களான மோகன்லால், முக்கேஷ் போன்றவர்களுடன் நடித்துள்ளார். முக்கியக் கதாபத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டங்களிலும் , நடிகையின் தோழி கதாப்பாத்திரம், தங்கை கதாப்பாத்திரம் போன்ற துணைக் கதாப்பாத்திரங்களிலும் இவர் நடித்தார்.மலையாளத் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த வேளையிலும் இவர் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்கள் சிலவற்றிலும் நடித்தார். சித்ரம்,தலவட்டோம், ஓடாருதம்மாவா அல்ரியம், முத்தாரம் குன்னு பி, ஓ மற்றும் போயிங் போயிங் ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். மனம் எனும் இதழழுக்கு அளித்த நேர்காணலில் என்னைத் தமிழ்த் திரைப்படங்களில் அறிமுகம் செய்தது கமல்ஹாசன் என்றும், .அவர் தயாரித்து, நடித்த விக்ரம் (1986 தமிழ் திரைப்படம்) திரைப்படத்தில் என்னை அறிமுகம் செய்தார் என தெரிவித்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
லிஸ்சி டிசம்பர் 13, 1990 இல் பிரபல இயக்குநர் பிரியதர்சனை காதலித்து திருமணம் செய்தார். திருமணத்திற்குப் பின் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். பின் சமயம் காரணமாக லிஸ்சி எனும் இவர் பெயரை லட்சுமி என மாற்றிக் கொண்டார். லிஸ்சி டிசம்பர் 1, 2014 இல் சென்னை குடும்ப நல நீதி மன்றத்தில் திருமண முறிவு வேண்டி விண்ணப்பித்தார். இவர்கள் செப்டம்பர் 1,2016 இல் திருமண முறிவு பெற்றனர் .
சாதனைகள்
2013 ஆம் ஆண்டில் கேரளா கலகேந்திரம் இவருக்கு சிறீ ரத்னா விருது வழங்கியது. மேலும் அதே ஆண்டில் ஜாக்குவார் அளித்த 2013 ஆம் ஆண்டின் பெண் சாதனையாளர் விருதினைப் பெற்றார்.
தமிழ்த் திரைப்படங்கள்
1986
1986 இல் விக்ரம் திரைப்படத்தில் நடித்தார். இதனை ராஜசேகர் என்பவர் இயக்கினார். கமல்ஹாசன், சத்யராஜ்,அம்பிகா (நடிகை), சாருஹாசன், சனகராஜ் ஆகியோருடன் லிஸ்சி இணைந்து நடித்திருப்பார்.
1987
1987 ஆம் ஆண்டில் ஆனந்த் ஆராதனை எனும் திரைப்படத்தில் நடித்தார். இதனை தினேஷ் பாபு என்பவர் இயக்கினார். மோகன் (நடிகர்) முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்.