நடிகை ஹெலன் | Actress Helen

ஹெலன் (Helen Ann Richardson) (பிறப்பு 21 நவம்பர் 1938) ஒரு ஆங்கிலோ-பர்மிய இந்திய திரைப்பட நடிகை ஆவார். இந்தியிலும் தமிழிலும் பல திரைப்படங்களில் நடனமாடி நடித்துள்ளார்.


வாழ்க்கைப் பின்னணி


ஜார்ஜ் டெஸ்மியர் (George Desmier) என்ற ஆங்கிலோ இந்திய தந்தைக்கும் பர்மாவைச் (இப்போது மியான்மார்) சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் மகளாக பர்மா ரங்கூனில் பிறந்தார். சகோதரர் பெயர் ரொஜர், சகோதரி பெயர் ஜெனிஃபர் ஆகும். இரண்டாவது உலகப் போர் சமயத்தில் இவர்களது தந்தை இறந்தார். 1943-ஆம் ஆண்டு தாயும் குழந்தைகளும் பம்பாய்க்கு (இப்போது மும்பை) வந்து குடியேறினார்கள்.


1964-ஆம் ஆண்டு ஃபிலிம்ஃபேர் பத்திரிகைக்கு அளித்த செவ்வி ஒன்றில் ஹெலன் பின்வருமாறு கூறியுள்ளார். “நாங்கள் பர்மாவிலிருந்து காடுகளையும் நூற்றுக்கணக்கான கிராமங்களையும் கால்நடையாக கடந்து வந்தோம். எங்களிடம் பணம் இல்லை. கருணையுள்ளம் படைத்தவர்கள் எங்களுக்கு உதவினார்கள். சில இடங்களில் பிரிட்டிஷ் இராணுவத்தினர் எங்களை வண்டிகளில் ஏற்றிச் சென்றதுடன் உணவும் தந்து தேய்ந்த கால்களுக்கும் களைப்புற்ற உடலுக்கும் மருத்துவ உதவியும் செய்து எங்களை அகதி முகாம்களில் விட்டுச் சென்றார்கள். அஸ்சாமிலுள்ள திப்புறுகா என்ற இடத்தை வந்தடைந்த போது எங்கள் குழுவில் பாதிப்பேர் தான் மிஞ்சியிருந்தனர். சிலர் இயலாமையால் இடையில் தங்கிவிட்டனர். இன்னும் சிலர் பசியினாலும் உடல் நலமின்மையாலும் இறந்து விட்டனர். என் தாய்க்கு வழியில் குறைப் பிரசவம் ஆனது. எஞ்சியிருந்தவர்கள் திப்புறுகாவிலிருந்த மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டனர். அம்மாவும் நானும் எலும்புக்கூடுகள் ஆகிவிட்டோம். என் சகோதரன் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. இரண்டு மாதங்கள் மருத்துவ மனையில் இருந்தபின் வெளியேறி கல்கத்தா வந்தடைந்தோம்.” என்று கூறியிருக்கிறார்.


பின்னர் பம்பாய் வந்தார்கள். குடும்ப நிலை காரணமாக ஹெலன் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு நடனக்குழுக்களில் சேர்ந்து நடனமாடி வந்தார். கக்கோ என்ற ஒரு நடிகை இவருக்கு உதவினார். 1957-ஆம் ஆண்டு ஹௌரா பிரிட்ஜ் என்ற படத்தின் மூலம் பிரபலமடைந்தார் ஹெலன். சுமார் 700 திரைப்படங்களுக்கு மேல் நடித்தும் நடனமாடியும் உள்ளார்.


நடித்த அல்லது நடனமாடிய தமிழ் திரைப்படங்கள்


சங்கே முழங்கு (1971)
பாக்தாத் திருடன் (1960)
மர்ம வீரன் (1956)
பக்த ராவணா (தெலுங்கு பூகைலாஸ் தமிழாக்கம்) (1958)
மாய மனிதன் (1958)
உத்தம புத்திரன் (1958)
நான் சொல்லும் ரகசியம் (1959)
ஸ்ரீ வள்ளி (1961)


வெளி இணைப்புகள்

நடிகை ஹெலன் – விக்கிப்பீடியா

Actress Helen – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *