ஹேமா சவுத்ரி (Hema Chaudhary) (பிறப்பு 1955) ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் ஒரு சில மலையாள மற்றும் தமிழ் படங்களுக்கு மேலதிகமாக கன்னட மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். 1976 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படமான பெல்லி கானி பெல்லி திரைப்படத்தில் முன்னணி நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், 1980 களில் துணை வேடங்களுக்கு மாறினார். கன்னட படங்களான விஜய வாணி, சுபாஷயா, தீபா, காளி மாத்து மற்றும் நீ பரேதா காதம்பரி போன்ற படங்களில் அவர் எதிர்மறையான வேடங்களில் நடித்தார். இவரது தமிழ் படங்களில், கமல்ஹாசனுக்கு ஜோடியாக கே.பாலசந்தர் இயக்கிய மன்மத லீலை (1976) மிகவும் குறிப்பிடத்தக்கது. 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஹேமா, தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான கதாபாத்திர கலைஞர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
ஹேமா சவுத்ரி பிரபல கலைஞர்களான என்.டி.ராமராவ், டாக்டர் ராஜ்குமார், டாக்டர் விஷ்ணுவர்தன், கல்யாண் குமார், ராஜேஷ், சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா, அம்பரிஷ், கமல்ஹாசன், சிரஞ்சீவி, மோகன் பாபு, கிருஷ்ணாமராஜு, அனந்த் நாக், ஷங்கர் நாக், லோகர், ஸ்ரீநாத், மலையாள சூப்பர் ஸ்டார் பிரேம் நசீர், சிவராஜ் குமார், அர்ஜுன் சர்ஜா, ரவிச்சந்திரன் மற்றும் புலி பிரபாகர் . மற்றும் பி.சரோஜா தேவி, அஞ்சலி தேவி, ஜமுனா, ஜெயந்தி, பாரதி விஷ்ணுவர்தன், கல்பனா, சாரதா, ஜெயப்பிரதா, ஜெயசுதா, ஸ்ரீதேவி, கே.ஆர் விஜயா, லட்சுமி, ஜெயமாலா, ஆரத்தி, மஞ்சுளா மற்றும் பத்மபிரியா போன்ற கதாநாயகிகளுடன் இணைந்து நடித்துள்ளார்.
நடிப்பு தவிர, சவுத்ரி ஒரு திறமையான குச்சிபுடி நடனக் கலைஞர் மற்றும் உலகம் முழுவதும் 700 க்கும் மேற்பட்ட குச்சிபுடி நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். இவர் தனது நடன திறமைகளுக்காக பனோரமா விருதைப் பெற்றவர். இவர் தேசிய திரைப்பட விருதுகள் குழுவால் மூன்று ஆண்டுகளாக தீர்ப்பளிக்கும் குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆரம்ப கால வாழ்க்கை
தெலுங்கு படங்களின் பிரபல பெண் டப்பிங் கலைஞரான புருண்டவன் சவுத்ரிக்கு ஆந்திராவில் ஹேமா பிறந்தார். புகழ்பெற்ற கலைஞர்களான என்.டி.ஆர், ஏ.என்.ஆர், எஸ்.வி.ரங்கராவ், சிவாஜி கணேசன் மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரின் நிகழ்ச்சிகளைப் பார்த்து இவர் வளர்ந்தார். இவர் சென்னை திரைப்பட நிறுவனத்தில் பட்டம் பெற்றார்.
தொழில்
நடிப்புப் படிப்பை முடித்த ஹேமா, 1976 ஆம் ஆண்டில் நடிகர் ஸ்ரீதருக்கு ஜோடியாக ஆதிராஜ் ஆனந்த் மோகன் இயக்கிய பெல்லி கானி பெல்லி திரைப்படத்தில் முன்னணி நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பங்காரு மனிஷி (1977), நிஜாம் (1978), கோட்டா அல்லுடு (1979) போன்ற பல வெற்றிகரமான தெலுங்கு படங்களில் பணியாற்றியுள்ளார், மேலும் தமிழ் திரைப்படமான மன்மத லீலை (1976) திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக கதாநாயகிகளில் ஒருவராக இருந்தார். அவரது முதல் கன்னட படம் விஜய வாணி (1976)ஆகும். இதில் இவர் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். காளி மாத்து (1981) திரைப்படத்தில், எதிர்மறை கதாபாத்திரத்தின் தைரியமான சித்தரிப்பு இவருக்கு புகழ் பெற்றுத் தந்தது. அப்போதிருந்து, கன்னட சினிமாவில் கிட்டத்தட்ட அனைத்து பெரிய இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் துணை நடிகையாக 150 க்கும் மேற்பட்ட படங்களில் தோன்றினார்.
ஹேமா தனது ஒவ்வொரு படமும் முடிந்ததும் நாடு முழுவதும் உள்ள இந்து தேவி கோவில்களில் பட்டு சேலை வழங்கும் நடைமுறையைப் பின்பற்றுகிறார்.