ஷோபா (Shobha, 23 செப்டம்பர் 1962 – 1 மே 1980) தென்னிந்தியத் திரைப்பட நடிகை. தட்டுங்கள் திறக்கப்படும் என்ற தமிழ்த் திரைப்படத்தில் குழந்தை நடிகையாக அறிமுகமான இவர் உத்ராத ராத்திரி என்ற மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவரின் இயற்பெயர் மகாலட்சுமி. இவர் தனது 17வது வயதில் பசி தமிழ்த் திரைப்படத்தில் நடித்தமைக்காக தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.
வாழ்க்கைக் குறிப்பு
சோபா கே. பி. மேனன் என்பவருக்கும், பிரேமா மேனன் என்பவருக்கும் பிறந்தார். தாயார் 1950களில் மலையாளப் படங்களில் பிரபலமான நடிகையாக விளங்கியவர். சோபா 1966 ஆம் ஆண்டில் சந்திரபாபுவின் இயக்கத்தில் வெளியான தட்டுங்கள் திறக்கப்படும் என்ற தமிழ்த் திரைப்படத்தில் பேபி மகாலட்சுமி என்ற பெயரில் குழந்தை நடிகையாக அறிமுகமானார். 1967 இல் பி. வேணுவின் இயக்கத்தில் உத்யோகாஸ்தா என்ற மலையாளத் திரைப்படத்தில் பேபி ஷோபா என்ற பெயரில் நடித்தார். இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்று சோபாவிற்கு சிறந்த குழந்தை நடிகை என்ற அங்கீகாரமும் கிடைத்தது. அதன் பின்னர் இவர் பல மலையாள, தமிழ்த் திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். இயக்குனர் பாலு மகேந்திராவைத் திருமணம் புரிந்தார்.
தற்கொலை
சோபா தனது 17வது அகவையில் தற்கொலை செய்து கொண்டார். இவரது தாயாரும் 1984 இல் தற்கொலை செய்து கொண்டார்.