நடிகை விஜயலட்சுமி | Actress Vijayalakshmi Tamil

விஜயலட்சுமி என்பவர் இந்தியாவைச் சேர்ந்த திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் திரைப்பட இயக்குநரான அகத்தியனின் மகளாவார்.விஜயலட்சுமி 2007-ஆம் ஆண்டு சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின் அஞ்சாதே, அதே நேரம் அதே இடம் போன்ற பத்து திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் ஒன்று கன்னடத் திரைப்படமாகும். ஒரு சில படங்களில் முக்கிய வேடங்களில் தோன்றிய பிறகு, அவர் திரைப்பட தயாரிப்பாளராகவும் தொலைக்காட்சி நாடக நடிகையாகவும் மாறினார்.


பணி


விஜயலட்சுமி விஜய் தொலைக்காட்சியில் ஹலோ தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் பொழுதுபோக்கு துறையில் பணியை தொடங்கினார். பிறகு அவரது பால்ய நண்பரான வெங்கட் பிரபுவின் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சென்னை 600028 என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் தடம் பதித்தார். இந்த திரைப்படம் உள்ளூர் துடுப்பாட்ட அணியின் கதையை விவரிக்கும் திரைப்படமாகும். விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இருப்பினும் இவரது நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த அதே நேரம் அதே இடம், 2010 ஆம் ஆண்டின் கற்றது களவு ஆகிய திரைப்படங்கள் வசூலில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.


2008 ஆம்ஆண்டு சூலையில் சவுந்தர்யா ரஜினிகாந்த்தின் இயக்கத்தில் சுல்தான் த வாரியர் திரைப்படத்தில் இலியானா டி குரூஸ் விலகிய பின் அவரது கதாபாத்திரத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமானார். விஜயலட்சுமி மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தின் மூலம் அனிமேஷன் பதிப்பைக் கொண்டிருப்பார் என்றும் கதாபாத்திரத்திற்கான குரல் பதிவை அவரே மேற்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.இந்த திரைப்படம் ஹாரா என்று மறு பெயரிடப்பட்டது. பின்னர் படம் நிறுத்தப்பட்டு 2014 ஆம் ஆண்டு கோச்சடையான் என்ற பெயரில் இந்த திட்டம் மீண்டும் தொடங்கியது. விஜயலட்சுமிக்கு பதிலாக தீபிகா படுகோனே ஒப்பந்தமானார். இவர் சில வெற்றிப்படங்களில் நடித்தாலும் வெற்றி பெற்ற நடிகையாக திகழவில்லை. மேலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திட்டமான இரண்டாவது படம் என்ற திரைப்படம் காலவரையின்றி தாமதமானது. 2013 ஆம் ஆண்டில் கடத்தல்காரன் வீரப்பனின் கதையை சித்தரித்து வெளியிடப்பட்ட இருமொழி திரைப்படமான அட்டாஹாசா என்ற திரைப்படத்தில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி என்பவரின் கதாபாத்திரத்தில் நடித்தார். படம் வெளிவர முன் தணிக்கை வாரியத்தினால் விஜயலட்சுமி நடித்த பல காட்சிகள் துண்டிக்கப்பட்டன.


2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணத்தைத் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதை விட்டு விலகுவதாக அறிவித்தார். மேலும் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட போவதாக தெரிவித்தார். சென்னை 600028 திரைப்படத்தின் இரண்டாவது பகுதியில் நடித்தார். இந்த திரைப்படம் முதல் பகுதியின் கதாபாத்திரங்களின் எட்டு வருட வாழ்க்கையை ஆராய்ந்து எடுக்கப்பட்டது. திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிப் பெற்றது. அதே நேரத்தில் விஜயலட்சுமி அவரது கணவர் பெரோஸ் இயக்கிய பண்டிகை (2017) திரைப்படத்தில் பணியாற்றினார். கிருஷ்ணா, ஆனந்தி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படம் 2017 ஆம் ஆண்டு சூலை மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.


2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நாயகி என்ற தமிழ் தொலைக்காட்சி தொடரில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார். இருப்பினும் தவிர்க்க முடியாத காரணங்களால் 2018 ஆகத்து மாதத்தில் தொலைக்காட்சி தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக வித்யா பிரதீப் ஒப்பந்தமானார். 2018 ஆண்டு ஆகத்து மாதத்தில் பிக்பாஸ் தமிழ் பகுதி இரண்டில் போட்டியாளராக நுழைந்தார்.


தனிப்பட்ட வாழ்க்கை


விஜயலட்சுமி திரைப்பட இயக்குனர் அகத்தியன், ராதா தம்பதியரின் புதல்வி ஆவார். இவருக்கு கார்த்திகா, நிரஞ்சனி என்ற இரண்டு சகோதரிகள் உள்ளனர். கார்த்திகா தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், நிரஞ்சினி ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார்கள். விஜயலட்சுமி 2015 ஆம் ஆண்டு அவரது பள்ளித் தோழரான பெரோஸ் முகமதுவை திருமணம் முடித்தார். இவர்களுக்கு ஒரு புதல்வன் உள்ளார்.

நடித்த திரைப்படங்கள்

2007 சென்னை 600028
2008 அஞ்சாதே
2008 சரோஜா
2009 அதே நேரம் அதே இடம்
2010 கற்றது களவு
2013 வனயுத்தம்
2013 அட்டஹாசா
2013 பிரியாணி
2014 ரெண்டாவது படம்
2014 வெண்ணிலா வீடு
2014 ஆடாம ஜெயிச்சோமடா

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

2018 நாயகி
பிக்பாஸ் தமிழ் பகுதி 2
2019 மிஸ்டர் அன்ட் மிஸிஸ் சின்னத்திரை
2019 டும் டும் டும்

வெளி இணைப்புகள்

நடிகை விஜயலட்சுமி – விக்கிப்பீடியா

Actress Vijayalakshmi Tamil – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *