மிஸ் குமாரி (Miss Kumari) (1932-1969) 1949 -1969 க்குமிடையில் மலையாளத் திரையுலகில் தீவிரமாக செயல்பட்ட ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார்.
ஆரம்ப கால வாழ்க்கை
இவரது உண்மையான பெயர் திரேசியம்மா என்பதாகும். தாமஸ், இளையம்மா ஆகியோருக்கு 1932 சூன் 1 ஆம் தேதி பிரித்தானிய இந்தியாவின் திருவிதாங்கூர், கோட்டயத்திலுள்ள பரங்கனம் என்ற ஊரில் பிறந்தார். இது இப்போது கேரள மாநிலத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சகோதரிகளால் நடத்தப்படும் சிறுமிகளுக்கான பள்ளியான பரங்கனம் தூய இருதய உயர்நிலைப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். பிறகு, அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார்.
தொழில்
மிஸ் குமாரி மலையாளத்தில் 1949 ஆம் ஆண்டு வெளியான வெள்ளிநட்சத்திரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இருப்பினும், இவரது உண்மையான வெற்றி 1950இல் வெளிவந்து வெற்றி பெற்ற நல்ல தங்கா என்ற படத்திலிருந்து வந்தது. நீலக்குயில் (1954) படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின்னர் நடிகர் சத்யனும், இவரும் நட்சத்திரமாக உயர்த்தப்பட்டனர். சுமார் இருபதாண்டுகளாக நீடித்த ஒரு வாழ்க்கையில், 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். “பெற்றவள் கண்ட வாழ்வு” என்ற தமிழ் படத்தில் நடிகர் பிரேம் நசீருடன் நடித்திருந்தார். காஞ்சனா என்ற மற்றொரு படத்திலும் இவர் தோன்றியிருந்தார். 1956ஆம் ஆண்டில் சிறந்த நடிகைக்கான சென்னை மாநில விருதையும் பெற்றார்.
தனிப்பட்ட வாழ்க்கை
1963 ஆம் ஆண்டில் இவர், திருவிதாங்கூர், உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவனத்தின் கொச்சி கிளையின் பொறியியலாளர் ஆர்மிசு தலியத்து என்பவரை மணந்தார். பின்னர் நடிப்புலகிலிருந்து வெளியேறினார். தனது குடும்ப வாழ்வர்களுக்கு ஜானி, தாமஸ், பாபு என்ற மூன்று குழந்தைகள் இருந்தனர். ஜானி நிதித் தொழிலில் இருக்கிறார். தாமஸ் கலிபோர்னியாவில் கணினி பொறியாளராகவும், பாபு புதுதில்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யூ) ஜெர்மன் ஆய்வு மையத்தில் பேராசிரியராக இருக்கிறார்.
இறப்பு
மிஸ் குமாரி 9 சூன் 1969 இல் இறந்தார். இவரது சொந்த ஊரான பரங்கனத்தில் நடந்தது. இவரது நினைவாக ஒரு சிறு அரங்கம் கட்டப்பட்டது. இதை மூத்த நடிகர் பிரேம் நசீர் திறந்து வைத்தார்.