சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி (Suchitra Krishnamoorthi) ஒரு இந்திய நடிகை, எழுத்தாளர், ஓவியர் மற்றும் பாடகர்.
தொழில்
1987-88இல் பள்ளியில் படிக்கும்போதே “சுனாதி” என்கிற தொலைக்காட்சித் தொடரில் நடித்தார். இவர் “(த பீனட்ஸ்: த மியூசிகல்)” தயாரிப்பில் வெளிவந்த ‘பீனட்ஸ்’ நகைச்சுவை இசை தொகுப்பில் ‘லூசி’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 90’களில் பல விளம்பர நிறுவனங்களுக்கு, குறிப்பாக பாமோலிவ் சோப், சன்ரைஸ் காபி, லிம்கா மற்றும் கோல்கேட் பற்பசை போன்றவற்றிற்கு விளம்பர மாதிரியாக நடித்துள்ளார். 1994இல் சாருக் கான் நடித்துள்ள “கபி ஹான் கபி நா” இந்தி படத்தில் நடித்துள்ளார். இப் படம் வியாபார ரீதியில் வெற்றி பெற்றது. ஜெயராம் நடித்துள்ள “கிலுக்கம்பட்டி” என்கிற மலையாள மொழிப் படத்திலும் நடித்துள்ளார்.
1990களின் பிற்பகுதியில், நடித்துக் கொண்டிருக்கும் போதே தனது பாப் இசை தொகுப்பான “டோல் டோலே”, டம் டாரா, ஆஹா, மற்றும் “ஜிந்தகி”யை வெளியிட்டார். இவற்றை முறையே ஆன்டிரூ லாயிட் வெப்பர் மற்றும் ஹிமேஷ் ரேஷாமியா இசை அமைத்திருந்தனர். திருமணத்திற்காக படவுலகை விட்டு விலகியிருந்த சுசித்ரா, பத்து வருடங்கள் கழித்து மீண்டும் “மை வைஃப் மர்டர்” (2005) படத்தில் அனில் கபூருடன் நடித்தார். இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை அளித்தது. மேலும் இவர் “கர்மா, கன்ஃபெஷன்ஸ் மற்றும் ஹோலி” (2009) திரைப்படங்களில் நடித்துள்ளார். ஹோலி திரைப்படம், இந்தோ அமெரிக்க தயாரிப்பில், நயோமி காம்ப்பெல், சுஷ்மிதா சென், மற்றும் வின்சென்ட் குரடோலா நடிப்பில் வெளிவந்த படமாகும். இப் படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை.
2010இல் ராம் கோபால் வர்மா இயக்கத்தில், அமிதாப் பச்சன், கன்னட திரைப்பட நடிகர் சுதீப் மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் ஆகியோர் நடித்த, இந்திய ஊடகம் பற்றிய “ரான்” படத்தில் நடித்தார். இதில் சுசித்ரா, நளினி காஷ்யப் என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். சுசித்ரா, இந்திய பாரம்பரிய இசை, (குவாலியர் கரானா) பாணியில் பயிற்சி பெற்ற பாடகியாவார். பத்தாண்டுகளுக்கும் மேலாக ஓவியம் பயின்றார்.
சுசித்ரா, இந்தியா, இலண்டன் மற்றும் நியூயார்க்கில் பயிற்சி பெற்ற கவிஞர் மற்றும் ஓவியர். இவர் தனது படைப்புகளை இந்தியா மற்றும் உலக அரங்குகளில் காட்சிப்படுத்தியுள்ளார். இவர் கடவுளின் பிள்ளையார் ஆசீர்வாதாத்தினால் இக்கலை தனக்கு கைவரப்பெற்றது எனக் கூறியுள்ளார். 2004, செப்டம்பர் 27இல் தனக்குத் தெரிந்தவரின் மூலமாக ஓவியத்தைப் பழகியதாகக் கூறியுள்ளார். சுசித்ரா ஒரு எழுத்தாளர். இவரது கருத்துக்கள் வலைப்பதிவின் மூலம் கவனிக்கப்பட்டன. இவரது பல வலைத்தளத்தில், முதலில் ‘இன்டெண்ட்ப்ளாக்.காம்’. இதில் இவர் தீபக் சோப்ராவை தன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள அழைத்துள்ளார். மேலும், ‘ஆர்ட் இன் எ பாடி பார்ட்’, ‘கிவ் மி அனெதர் பிரேக்’ மற்றும் சொந்த வலைதளத்தில் எழுதிய கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளாயின.
சுசித்ராவின் முதல் நாவலான “த சம்மர் ஆஃப் கூல்” ஐ பெங்குயின் இந்தியா, சனவரி 2009இல் வெளியிட்டது. இது பெரும் வரவேற்பைப் பெற்றது. இது “சுவப்னலோக் சொசைட்டி” தொடரின் முதல் பகுதியாகும். இது நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது. மும்பையில், பொதுவான கூட்டுறவு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு சமூகத்தில் நடக்கும் சம்பவங்களைப் பற்றி இத் தொடரில் எழுதியுள்ளார். இதன் இரண்டாவது பகுதி “த குட் நியூஸ் ரிப்போர்ட்டர்” என்று அழைக்கப்படுகிறது. இதுவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மூன்றாவது பகுதியான “த கோஸ்ட் ஆன் தி லெட்ஜ்” 2016இல் வெளியிடப்பட்டது. செப்டம்பர் 2012இல் சுசித்ரா, கேண்டில்லைட் நிறுவனத்தை தொடங்கினார். இது கரிம மெழுகுவர்த்திகளில் சிறப்பைக் கொண்டு ஆரோக்கியத்திற்கான சிகிச்சை எடுக்கும் ஒரு முறையாகும்.
சொந்த வாழ்க்கை
சுசித்ரா மகாராட்டிர மாநிலத்திலுள்ள மும்பையில் தெலுங்கு மொழி பேசும் குடும்பத்தில் பிறந்துள்ளார். திரைப்படத் தயாரிப்பாளர் சேகர் கபூரைத் திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்கு காவேரி கபூர் என்ற மகள் உண்டு. சுசித்ரா தொண்டு வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மேலும் ஒரு சில அரசு சாரா நிறுவனங்களுடன் தொடர்புடையவர் ஆவார்.