கல்யாணி பிரியதர்ஷன் (Kalyani Priyadarshan) தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர், 2017இல் வெளிவந்த “ஹலோ” தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது மற்றும் 7வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது ஆகிய இரண்டு விருதுகளை தான் நடித்த முதல் படத்திற்காகப் பெற்றுள்ளார்.
இளமைப்பருவம்
கல்யாணி, இந்திய திரைப்பட தயாரிப்பாளரான பிரியதர்சன் மற்றும் மலையாள நடிகை லிஸ்சிக்கும் மகளாகப் பிறந்தார். இவருக்கு, சித்தார்த் என்கிற சகோதரர் இருக்கிறார். ஆண்டாள் வெங்கடசுப்பாராவ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சென்னையில் தனது பள்ளிப்படிப்பினை முடித்தார். பின்னர், மேற்படிப்பை சிங்கப்பூரில் படித்தார். அங்குள்ள நாடகக் குழுவில் பணிபுரிந்தார். தனது பள்ளிப் படிப்பை முடித்தபிறகு, நியூயார்க் நகரத்திலுள்ள “பார்சன்ஸ் ஸ்கூல் ஆப் டிசைன்” கல்லூரியில் சேர்ந்து கட்டிடக்கலை வடிவமைப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இந்த நேரத்தில் அவர் நாடக அரங்கில் தங்கி இருந்தார். தாய்நாட்டில் புதுச்சேரி (நகரம்) ஆதிசக்தி நாடக அரங்கில் நடிப்புத் தொழிற்துறை பயிற்சியில் கலந்து கொண்டார். 2014இல் இவரது பெற்றோர் விவாகரத்து செய்தனர்.
தொழில்
கல்யாணி, கிரிஷ் 3 (2013), பாலிவுட் திரைப்படத்தில் சாபு சிரிலுக்கு துணை தயாரிப்பு வடிவமைப்பாளராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், 2016இல், துணை கலை இயக்குனராக இருமுகன் (திரைப்படம்) தமிழ்த் திரைப்படத்தில் பணிபுரிந்தார். அதைத் தொடர்ந்து, 2017இல் தெலுங்கு மொழிப் படமான “ஹலோ”வில் நடிகையாக அறிமுகமானார். இத் திரைப்படத்தில், அகில் அக்கினேனியுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப் படத்தை விக்ரம் குமார் இயக்கியுள்ளார். இவர் துணை இயக்குனராக பிரியதர்சனிடம் பணிபுரிந்தவர். மேலும், நடிகர் அக்கினேனி நாகார்ஜுனா இப் படத்தை தயாரித்துள்ளார். இத் திரைப்படம் திசம்பர் 22, 2017இல் உலகெங்கும் வெளியானது. இப் படத்தில் நடித்த கதாபாத்திரத்திற்கு, இவர் நேர்மறை விமர்சனங்களைப் பெற்றுள்ளார்.
வெளி இணைப்புகள்
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் – விக்கிப்பீடியா
Actress Kalyani Priyadarshan – Wikipedia