நடிகை ஆஷா பட் | Actress Asha Bhat

ஆஷா பட்’ (Asha Bhat ) (பிறப்பு: செப்டம்பர் 5, 1992) இவர் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு இந்திய வடிவழகிக் கலைஞரும், நடிகையும், பொறியாளரும், அழகுப் போட்டித் தலைப்பை வென்றவருமாவார். இவர், 2014 ஆம் ஆண்டில் மிஸ் சூப்பர்நேஷனல் போட்டியை வென்ற முதல் இந்தியர் ஆவார்.


ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி


இவர், கன்னட பிராமண பெற்றோர்களான சுப்ரமண்யன், சியாமளா ஆகியோருக்கு 1992 செப்டம்பர் 5 ஆம் தேதி இந்திய மாநிலமான கர்நாடகாவின் சிமோகா மாவட்டத்தில் உள்ள தொழில்துறை நகரமான பத்ராவதியில் பிறந்தார். மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்களான இவரது பெற்றோர் இருவரும், பத்ராவதி நகர மருத்துவ ஆய்வகங்களில் பணியாற்றி வருகின்றனர். இவருக்கு அக்சதா என்ற ஒரு மூத்த சகோதரி ஒரு குழந்தை மருத்துவராக இருக்கிறார்.


பத்ராவதியில் உள்ள புனித சார்லசு பள்ளியில் படித்த இவர், மூதபித்ரியில் உள்ள ஆல்வா, முன் பல்கலைக்கழக கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்வியைத் தொடர்ந்தார். புனேவில் உள்ள ஐ.ஐ.டி ஜே.இ.இ பயிற்சி நிறுவனமான பிரைம் அகாடமியில் ஒரு சிறந்த மாணவராகவும் இருந்தார். இந்த நிறுவனத்தில் படிப்பது அழகு போட்டிகளில் வெற்றிபெற உதவியதாக இவர் கூறினார். ஆல்வா கல்லூரியில் படிக்கும் போது தேசிய மாணவர் படையில் சேர்ந்தார். இங்கு குடியரசு தின முகாமில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டார். சார்க் நாடுகளின் தேசிய மாணவர் படை தூதுக்குழுவில் உறுப்பினராக இருந்த இவர் இலங்கை இராணுவக் கழகத்திற்கு 2009 ஆம் ஆண்டில் சென்று இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராசபக்ச வழங்கிய விருதை வென்றார். பின்னர், பெங்களூர், ஆர்.வி. பொறியியல் கல்லூரியில் மின்னணு பொறியியலில் இளநிலைப் பட்டம் பெற்றார்.


தற்போது இவர் மும்பையில் வசித்து வருகிறார். மேலும் ஒரு நடிகை என்பதைத் தவிர, இவர் ஒரு சமூக ஆர்வலராகவும், அஸ்ட்ரா அறக்கட்டளை என்ற பெயரில் தனது சொந்த அரசு சார்பற்ற அமைப்பையும் நடத்தி வருகிறார்.


அழகிப் போட்டி


2014 ஆம் ஆண்டில், டைம்ஸ் குழுமத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மிஸ் திவா போட்டியில் பங்கேற்ற இவர், மிஸ் இந்தியா சூப்பர்நேஷனல் 2014 என முடிசூட்டப்பட்டார். மிஸ் இந்தியா எர்த் 2014 மகுடம் சூட்டப்பட்ட அலங்கிருத சஹாய் மற்றும் போட்டியின் வெற்றியாளரான நொயோனிதா லோத் ஆகியோருக்கு அடுத்தபடியாக 14 அக்டோபர் 2014 அன்று மேற்கு மும்பையின் மும்பை கார்டன் சிட்டியில் நடைபெற்ற போட்டியின் இறுதிப் போட்டியில் முடிசூட்டப்பட்டார். மிஸ் திவா 2014 இல் மிஸ் கான்ஜெனியலிட்டி, மிஸ் பியூட்டிஃபுல் ஸ்மைல், மிஸ் ஃபேஸினேட்டிங் உள்ளிட்ட மூன்று சிறப்பு விருதுகளையும் இவர் வென்றுள்ளார்.


வெளி இணைப்புகள்

நடிகை ஆஷா பட் – விக்கிப்பீடியா

Actress Asha Bhat – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *