நடிகை டயானா ஹேடன் | Actress Diana Hayden

டயானா ஹேடன் (பிறப்பு 1 மே 1973) என்பவர் இந்திய நடிகை, வடிவழகி மற்றும் 1997 ஆம் ஆண்டின் உலக அழகிப் போட்டியின் வாகையாளர் ஆவார். உலக அழகி பட்டத்தை வென்ற மூன்றாவது இந்திய பெண் இவராவார். போட்டியின் போது அவர் மூன்று துணைப் பட்டங்களை வென்றார். 2008 ஆம் ஆண்டில், பிக் பாஸ் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியின் பிரபல போட்டியாளராக பங்கேற்றார்.


ஆரம்பகால வாழ்க்கை


டயானா இந்தியாவின் தெலுங்கானாவின் ஐதராபாத்தில் ஆங்கிலோ-இந்திய கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். அவர் செகந்திராபாத்தில் உள்ள செயின்ட் ஆன் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.


அவர் மாதிரி அழகி பணியை தொடங்குவதற்கு முன்பு என்கோர் என்ற நிகழ்வு மேலாண்மை நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின்னர் அவர் பி.எம்.ஜி கிரெசெண்டோவில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றினார். அங்கு பாடகர்களான அனெய்டா மற்றும் மெஹ்னாஸ் ஹூசைன் ஆகியோரின் வாழ்க்கையை நிர்வகிக்க உதவினார்.


அழகிப் போட்டி அணிவகுப்புகள்


ஹேடனின் பணி வாழ்கையை 23 வயதில் தொடங்கினார். நண்பர் ஒருவர் ஃபெமினா மிஸ் இந்தியாவில் நுழைய பரிந்துரைத்தார். பின்னர் அவர் 1997 ஆம் ஆண்டின் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். அவர் இரண்டாம் இடத்தைப் பிடித்து இந்திய உலக அழகி என்ற பட்டத்தைப் பெற்றார். சீஷெல்ஸின் பாய் லாசரேவில் நடைப்பெற்ற உலக அழகி போட்டியின் 47 வது பதிப்பில் அவர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். மொத்தம் 86 பிரதிநிதிகள் தலைப்புக்காக போட்டியிட்டனர். நிகழ்வின் முடிவில் ஹேடன் 1997 உலக அழகியாக முடிசூட்டப்பட்டார். உலக அழகி போட்டியின் போது அவர் ” உலக அழகி – ஆசியா மற்றும் ஓசியானியா ” என முடிசூட்டப்பட்டார். மேலும் ஹேடன் புகைப்பட அழகி மற்றும் நீச்சலுடை அழகி ஆகிய பட்டங்களை வென்றார். போட்டியின் போது மூன்று துணை பட்டங்களை வென்ற ஒரே உலக அழகி ஹேடன் ஆவார். 1966 ஆம் ஆண்டில் ரீட்டா ஃபாரியா மற்றும் 1994 ஆம் ஆண்டில் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்குப் பிறகு, உலக அழகி போட்டியை வென்ற மூன்றாவது இந்திய பெண் இவர் ஆவார்.


உலக அழகி பட்டம் வென்ற பின்னர் இந்தியாவில் எல்’ஓரியல் , கோல்கேட் மற்றும் சோபார்ட் ஆகிய நிறுவனங்களை ஆதரிக்க கையெழுத்திட்டார். இவர் சிறுவர் உரிமைகளும் நீங்களும் (CRY ), க்ரீன்பீஸ் , பெட்டா மற்றும் ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் தொடர்புடையவர். புற்றுநோய் மற்றும் எச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த செயற்பட்டார்.


உலக அழகி அமைப்பின் உலகளாவிய பிரதிநிதியாக இருந்த பின் ஹேடன் லண்டனுக்குச் சென்று ராயல் அகாடமி ஆஃப் டிராமாடிக் ஆர்ட்டில் நடிப்புக் கலையை பயின்றார். அவர் லண்டன் டிராமா ஸ்டுடியோவிலும் படித்தார். அங்கு அவர் ஷேக்ஸ்பியரின் படைப்புக்களில் கவனம் செலுத்தி கலைக்கூடத்தின் சிறந்த நடிகைக்கான பரிந்துரையைப் பெற்றார். 2001 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவில் சேக்ஸ்பியரின் ஓதெல்லோ திரைப்பட பதிப்பில் திரைக்கு அறிமுகமானார். 2001 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் லெபனானில் மிஸ் ஐரோப்பா என்ற நிகழ்ச்சியை இரண்டு முறை தொகுத்து வழங்கினார். தற்போது விமானப் பணியாளர்கள் பயிற்சித் திட்டங்களுக்கான விரிவுரையாளராக பணியாற்றுகிறார்.


2008 ஆம் ஆண்டில் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸின் இரண்டாவது சீசனில் டயானா ஹேடன் பங்கேற்றார். 13 வது வாரத்தில் அவர் பிக் பாஸ்ஸில் இருந்து வெளியேற்றப்பட்டார்.


அவர் ஒரு அழகான உண்மை என்ற ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகம் 2012 ஆம் ஆண்டு ஆகத்து 6 அன்று வெளியானது.


தனிப்பட்ட வாழ்க்கை


டயானா ஹேடன் 13 செப்டம்பர் 2013 அன்று அமெரிக்காவின் லாஸ் வேகாஸைச் சேர்ந்த கொலின் டிக்கை மணந்தார். கொலின் மும்பையில் ஒரு சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.


வெளி இணைப்புகள்

நடிகை டயானா ஹேடன் – விக்கிப்பீடியா

Actress Diana Hayden – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *