நூர்ஜஹான் ( உருது: نُورجہاں ), (செப்டம்பர் 23 1926 – 23 டிசம்பர் 2000), ஒரு பாகிஸ்தான் பின்னணி பாடகி மற்றும் நடிகை ஆவார். இவர் முதலில் பிரித்தானிய இந்தியாவிலும் பின்னர் பாகிஸ்தானிலும் பணியாற்றினார். இவரது வாழ்க்கை அறுபதாண்டுகளுக்கு மேலாக (1930 கள் – 1990 கள்) நீடித்தது. தெற்கு ஆசியா முழுவதும் எல்லா காலத்திலும் மிகச் சிறந்த மற்றும் செல்வாக்கு மிக்க பாடகிகளில் ஒருவராக புகழ்பெற்ற இவருக்கு பாகிஸ்தானில் மாலிகா-இ-தரன்னம் என்ற மரியாதைக்குரிய பட்டம் வழங்கப்பட்டது. இந்துஸ்தானி பாரம்பரிய இசை மற்றும் பிற இசை வகைகளின் புலமை இவருக்கு இருந்தது.
அகமது ருஷ்டியுடன், பாகிஸ்தான் சினிமா வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான திரைப்படப் பாடல்களுக்கு குரல் கொடுத்து சாதனை படைத்துள்ளார். அரை நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த இவரது வாழ்க்கையில் 40 க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்து 20,000 பாடல்களைப் பாடியுள்ளார் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவர் எல்லா காலத்திலும் மிகச் சிறந்த பாடகிகளில் ஒருவராக கருதப்படுகிறார். இவர் முதல் பாகிஸ்தான் பெண் திரைப்பட இயக்குனராகவும் கருதப்படுகிறார்.
ஆரம்ப கால வாழ்க்கை
பிரித்தானியா இந்தியாவின் பஞ்சாப்பின் கசூரில் ஒரு பஞ்சாபி முஸ்லீம் குடும்பத்தில் அல்லாஹ் வசாயாக பிறந்த நூர் ஜெஹான், இம்தாத் அலி மற்றும் ஃபதே பிபியின் பதினொரு குழந்தைகளில் ஒருவராக இருந்தார்.
பிரிட்டிஷ் இந்தியாவில் அவரது தொழில்
ஜஹான் தனது ஐந்து வயதில் பாடத் தொடங்கினார். மேலும் பாரம்பரிய நாட்டுப்புற மற்றும் பிரபலமான நாடகங்கள் உட்பட பலவிதமான கலைகளில் மிகுந்த ஆர்வம் காட்டினார். பாடுவதற்கான அவரது திறனை உணர்ந்த தாயார், உஸ்தாத் படே குலாம் அலிகானின் கீழ் பாரம்பரிய பாடலில் ஆரம்பகால பயிற்சியைப் பெற அனுப்பினார். இந்துஸ்தானி இசையின் பாட்டியாலா கரானாவின் மரபுகள் மற்றும் தும்ரி, துருபாத் மற்றும் கியாலின் பாரம்பரிய வடிவங்களை இவர் அவருக்கு அறிவுறுத்தினார்.
ஒன்பது வயதில், நூர் ஜஹான் பஞ்சாபி இசைக்கலைஞர் குலாம் அகமது சிஷ்டியின் கவனத்தை ஈர்த்தார். அவர் பின்னர் லாகூரில் ஜஹானை மேடைகளில் அறிமுகப்படுத்தினார். நடிப்பு அல்லது பின்னணி பாடலில் ஈடுபடுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தாலும், அவர் சில கசல்கள், நா’அத்கள் மற்றும் நாட்டுப்புற பாடல்களை இயற்றினார். அவரது பயிற்சி முடிந்ததும், ஜஹான் லாகூரில் தனது சகோதரியுடன் சேர்ந்து பாடுவதைத் தொடர்ந்தார். வழக்கமாக திரையரங்குகளில் திரைப்படங்களைத் திரையிடுவதற்கு முன்பு நேரடி பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகளில் ஜஹான் பங்கேற்பார்.
திரையரங்க உரிமையாளர் திவான் சர்தாரி லால் 1930 களின் முற்பகுதியில் ஜஹானை கல்கத்தாவுக்கு அழைத்துச் சென்றார். மேலும், இவரது மூத்த சகோதரிகளான ஈடன் பாய் மற்றும் ஹைதர் பாண்டி ஆகியோர் தங்களின் திரைப்பட வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வார் என்ற நம்பிக்கையில் முழு குடும்பமும் கல்கத்தாவுக்கு சென்றது. முக்தார் பேகம் இவரது சகோதரிகளை திரைப்பட நிறுவனங்களில் சேர ஊக்குவித்தார் மற்றும் பல்வேறு தயாரிப்பாளர்களுக்கு பரிந்துரை செய்தார். இவரது கணவர் ஆகா ஹஷர் காஷ்மீரிக்கு ஒரு மைதான திரையரங்கம் (பெரிய பார்வையாளர்களை தங்க வைக்க ஒரு கூடார திரையரங்கம்) இருந்தது. இங்குதான் வசாய் பேபி நூர் ஜஹான் என்ற மேடைப் பெயரைப் பெற்றார். அவரது மூத்த சகோதரிகளுக்கு பஞ்சாப் மெயில் என்று அறியப்பட்ட சேத் சுக் கர்னானி நிறுவனங்களில் ஒன்றான இந்திரா மூவியெட்டோனில் வேலை வழங்கப்பட்டது.