சாகரிகா காட்கே (Sagarika Ghatge) ஒரு இந்திய வடிவழகியும், தேசிய அளவிலான தடகள வீரரும், நடிகையும் ஆவார். சக் தே இந்தியா என்ற பாலிவுட் திரைப்படத்தில் பிரீதி சபர்வால் என்ற பாத்திரத்தில் நடித்ததில் நன்கு அறியபடுகிறார். 2015ஆம் ஆண்டில், இவர் பியர் பேக்டர்: கத்ரான் கே கிலாடி என்றத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதிப் போட்டியாளரானார்.
ஆரம்ப கால வாழ்க்கை
மகாராட்டிராவின் கோலாப்பூரில் விஜய்சின் காட்கே ( விஜயேந்திர காட்கே என சில சமயங்களில் அறிவிக்கப்பட்டது) என்பவருக்கும் உர்மிளா காட்கே ஆகியோருக்கு இவர் பிறந்தார். கோலாப்பூரில் இவர் எட்டு வயது வரை தங்கியிருந்தார். பின்னர் மாயோ கல்லூரி பெண்கள் பள்ளியில் சேர ராஜஸ்தானின்அஜ்மீருக்கு அஜ்மீருக்கு மாற்றப்பட்டார். இவர் கோலாப்பூரின் சாகு மகாராஜ் மூலம் இந்தியாவின் முன்னாள் அரச இல்லத்துடன் தொடர்புடையவர்.
சொந்த வாழ்க்கை
24 ஏப்ரல் 2017 அன்று, இவர் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கானுடன் தனது நிச்சயதார்த்தத்தை அறிவித்தார். இருவரும் நவம்பர் 2017 இல் திருமணம் செய்து கொண்டனர்.
தொழில்
2007ஆம் ஆண்டில், இவர் சக் தே இந்தியா என்ற இந்திப் படத்தில் ப்ரீத்தி சபர்வாலை சித்தரித்தார், இதன் காரணமாக இவர் ரீபோக் இந்தியாவின் விளம்பரத் தூதரானார். இவர் ஆடை வடிவமைப்புப் பத்திரிகைகளிலும், பல்வேறு அழகு நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ளார்.
இவர், 2009 ஆம் ஆண்டில் பாக்ஸ் என்ற படத்தில் ஊர்வசி மாத்தூராக தோன்றினார். பின்னர் காமியா என்ற வேடத்தில் மைலி நா மைலே ஹம் படத்தில் நடித்தார். பின்னர் 2012ஆம் ஆண்டு ரஷ் படத்தில் இம்ரான் ஹாஷ்மிக்கு இணையாக நடித்தார். அடுத்ததாக சதீஷ் ராஜ்வாடேயின் மராத்தி திரைப்படமான பிரேமாச்சி கோஷ்டாவில் அதுல் குல்கர்னியுடன் நடித்தார். இது 2013இல் வெளியானது, இது இவரது முதல் மராத்தி திரைப்படமாகும்.
2015 ஆம் ஆண்டில், இவர் பியர் பேக்டர்: கத்ரான் கே கிலாடி என்றத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதிப் போட்டியாளரானார். இவர் தனது பஞ்சாபித் திரைப்பட தில்தாரியன் என்ற அறிமுகப் படத்தில் ஜாஸ்ஸி கில் என்பவருடன் நடித்தார், அதில் இவர் பாலி என்ற பாத்திரத்தைச் சித்தரித்தார்.