சாரா அலிகான் (Sara Ali Khan) (பிறப்பு:1995 ஆகத்து 12) இவர் இந்தித் திரைப் படங்களில் பணிபுரியும் ஓர் இந்திய நடிகையாவார். பட்டோடி மற்றும் தாகூர் குடும்பத்தில் பிறந்த இவர், நடிகர்கள் அமிர்தா சிங் மற்றும் சைஃப் அலிகான் ஆகியோரின் மகளாவார். மேலும் மன்சூர் அலி கான் பட்டோடி மற்றும் ஷர்மிளா தாகூர் ஆகியோரின் பேத்தியுமாவார்.
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, சாரா 2018 கேதார்நாத் மற்றும் சிம்பா போன்ற பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இரண்டு படங்களும் வணிக ரீதியாக வெற்றி பெற்றன. மேலும் கேதார்நாத் திரைப்படம் சிறந்த அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதை இவருக்கு பெற்றுத் தந்தது. 2019இன் ஃபோர்ப்ஸ் இந்தியா ‘ பத்திரிக்கையின் பிரபலங்கள் 100 என்ற பட்டியலில் இவர் இடம் பெற்றார்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி
சாரா அலி கான் 1995 ஆகத்து 12 அன்று மும்பையில் இந்தித் திரையுலகின் நடிகர்களான மன்சூர் அலி கான் பட்டோடி மற்றும் ஷர்மிளா தாகூர் ஆகிய இருவரின் மகனான சைஃப் அலிகான் மற்றும் அமிர்தா சிங் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவர், பட்டோடி மற்றும் தாகூர் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். இவர், சமூகவாதியான ருக்சனா சுல்தானாவின் தாய்வழி பேத்தி ஆவார். இவருக்கு இப்ராகிம் என்ற ஒரு தம்பி உள்ளார். இவரது மற்றொரு சகோதரர் தைமூர், கரீனா கபூருடனான இரண்டாவது திருமணத்தின் மூலம் சைஃப்பிற்கு பிறந்த மகனாவார். சாரா கான் முக்கியமாக தந்தைவழியில் பஷ்தூண் மற்றும் பெங்காலி வம்சாவளியைச் சேர்ந்தவர். மேலும் இவரது தாய்வழியில் பஞ்சாபி வம்சாவளியைச் சேர்ந்தவர்.
சாரா தனது நான்கு வயதில் ஒரு விளம்பரத்தில் நடித்தார். சைஃப்பின் கருத்துப்படி, நடிகை ஐஸ்வர்யா ராய் சிகாகோவில் மேடையில் நடித்ததைக் கண்டதும் திரைப்படத் தொழிலைத் தொடர இவருக்கு உத்வேகம் பிறந்தது எனத் தெரிகிறது. 2004 ஆம் ஆண்டில், சாராவுக்கு ஒன்பது வயதாக இருந்தபோது, இவரது பெற்றோர் விவாகரத்து செய்தனர். அமிர்ந்தா சிங்கிடம் குழந்தைகள் வளர சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டது.
ஒரு இளைஞ்யாக, சாரா அலி கான் தனது எடையுடன் போராடினார். மேலும் உடல் பருமனை குறக்க ஒரு கடுமையான கால அட்டவணையின் கீழ் தினசரி உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டியிருந்தது. சினைப்பை நோய்க்குறி இவரது எடை அதிகரிப்புக்கு ஒரு காரணம் என்று இவர் குறிப்பிடுகிறார். சாரா அலி கான் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் அரசியல் அறிவியலைப் படித்தார். 2016ஆம் ஆண்டில், இவர் தனது பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் சிலகாலம் தனது எடை குறைப்புப் பயிற்சியினை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து இவர் இந்தியா திரும்பினார்.
தொழில்
சாரா அலி கானின் அறிமுகமானது 2018 ஆம் ஆண்டில் அபிஷேக் கபூரின் காதல் படமான கேதார்நாத் என்றத் திரைப்படத்தில் இருந்தது. அதில் இவர் ஒரு முஸ்லீம் சுமை தூக்குபவரைக் காதலிக்கும் ஒரு இந்து பெண்ணாக நடித்தார். இதில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தும் நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவரது நடிப்புக்கு பாராட்டுடன் கலவையான விமர்சனங்களைப் பெற்றார். இந்தப்படத்தில் நடித்ததற்காக சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதும், ஆண்டின் சிறந்த பெண் நட்சத்திர அறிமுகத்திற்கான ஐஃபா விருதும் வழங்கப்பட்டது .