சபனா ஆசுமி (Shabana Azmi, இந்தி: शबाना आज़मी, உருது: شبانہ اعظمی; பிறப்பு: செப்டம்பர் 18, 1950) இந்தியாவைச் சேர்ந்த திரைப்பட, தொலைக்காட்சி மற்றும் நாடக நடிகை. புனேயில் உள்ள திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின் முன்னாள் மாணவியான சபனாவின் திரைப்பட அறிமுகம் 1974ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. விரைவிலேயே புதிய அலைத் திரைப்படங்கள் என அறியப்பட்ட யதார்த்தநிலையை பிரதிபலிக்கும் கனத்த கதைக்கரு தாங்கிய இணை திரைப்படங்களில் முன்னணி நடிகையாக முன்னேறினார். சபனாவின் பலத்திறப்பட்ட வேடங்களும் நடிப்புத்திறனும் வெகுவாக பாராட்டப்பட்டு பல விருதுகளையும் பெற்றுத் தந்தது. ஐந்து சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதுகளையும் பல பன்னாட்டு விருதுகளையும் பெற்றுள்ளார். நான்கு பிலிம்ஃபேர் விருதுகளையும் பெற்றுள்ளார்..
சபனா 120 திரைப்படங்களில் நடித்துள்ளார். 1988ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டுத் தயாரிப்புகளிலும் நடிக்கத துவங்கினார். திரைப்படத்தைத் தவிர மும்பை குடிசைவாசிகள் கட்டாயமாக இடம் பெயர்க்கப்படுவதை எதிர்த்து நடந்த போராட்டங்களில் பங்கெடுத்தார். பல சமூக மற்றும் மகளிர் உரிமைச் செயல்பாடுகளிலும் பங்கெடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியத்தின் நல்லெண்ண தூதராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் விளங்குகிறார். கவிஞரும் திரைக்கதை ஆசிரியருமான சாவேத் அக்தரை திருமணம் புரிந்துள்ளார்.
வெளி இணைப்புகள்
நடிகை சபனா ஆசுமி – விக்கிப்பீடியா