நடிகை சாந்தா ஆப்தே | Actress Shanta Apte

சாந்தா ஆப்தே (Shanta Apte) (1916-1964) மராத்திய மற்றும் இந்தித் திரைப்படங்களில் பணியாற்றிய இந்தியப் பாடகியும் நடிகையுமாவார். பிரபாத் பிலிம்ஸ் பதாகையின் கீழ் துனியா நா மானே / குங்கு (1937), அமர் ஜோதி (1936) போன்ற படங்களில் நடித்ததற்காக புகழ்பெற்ற இவர், 1932 முதல் 1958 வரை இந்தியத் திரைப்படங்களில் தீவிரமாக இருந்தார். மராத்தியத் திரைப்படங்களில் ஆப்தேவின் தாக்கம் மேற்கு வங்காளத் திரைப்படங்களில் கனன் தேவியின் தாக்கத்திற்கு “இணையாக” இருந்தது. கனன் தேவியுடன் சேர்ந்து, பின்னணி பாடும் சகாப்தத்திற்கு முன்பிருந்தே “சிறந்த பாடும் நட்சத்திரங்களில்” ஒருவராக இவர் குறிப்பிடப்படுகிறார். மராத்தி திரைப்படமான ஷியாம்சுந்தர் (1932) படத்தில் இளம் இராதாவின் கதாபாத்திரத்தில் நடித்து தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். பிரபாத் பிலிம்ஸ் நிறுவனத்தின் அமிர்த மந்தன் (1934) என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் முதல் இந்தி மொழி திரைப்படத்தில் நுழைந்தார்.


இவர் தனது “தன்னிச்சையான சைகைகள் மற்றும் கண் அசைவுகள்” மூலம் படங்களில் பாடல்களின் நிலையான பாணியில் மாற்றத்தைக் கொண்டுவந்தார். குங்கு / துனியா நா மானே போன்ற படங்களில் நடித்ததைத் தொடர்ந்து “உள்நாட்டு கெரில்லா” என்று மேற்கோள் காட்டப்பட்ட இவர், ஒரு தலைமுறை கல்லூரி மாணவர்களுக்கு ஒரு உத்வேகம் அளிக்கும் முன்மாதிரியாக இருந்தார்.


மராத்திய மொழித் திரைப்படங்களில் அதிக சம்பளம் வாங்கும் பெண் திரை நட்சத்திரம் எனக் கருதப்பட்டார். தனது “நட்சத்திர” அந்தஸ்தை திரை-பத்திரிகை ஆசிரியர் பாபுராவ் படேலுடன் திசம்பர் 1937ஆம் ஆண்டு பிலிமிண்டியா” என்ற இதழில் ஒப்புக் கொண்டார்.


ஆரம்ப ஆண்டுகளில்


இந்தியாவின் மகாராட்டிராவின் துத்னியில் 1916 இல் ஒரு மகாராட்டிர பிராமண குடும்பத்தில், ஆப்தே தொடர்வண்டி நிலைய அலுவலரின் மகளாகப் பிறந்தார். தனது தந்தையின் விருப்பத்தைத் தொடர்ந்து, இளம் ஆப்தே பாடலில் பயிற்சி மேற்கொண்டார். புனேவில் நடந்த உள்ளூர் விநாயக சதுர்த்தி விழாக்களில் பஜனைகளை பாட ஆரம்பித்தார். பண்டரிபுரத்திலுள்ள மகாராட்டிர சங்கீத வித்யாலயாவிலும் இசை பயின்றார்.


இவர், தனது ஒன்பது வயதில் குழந்தைக் கலைஞராக திரைப்படங்களில் நடிகரும் இயக்குனருமான பாபுராவ் பெந்தர்கர் இவரை அறிமுகப் படுத்தினார். இவரது, முதல் படமான ஷியாம்சுந்தரில் இராதாவின் கணவராக நடித்த இவரது மூத்த சகோதரர் பாபுராவ் ஆப்தேவின் “வழிகாட்டுதல்”, இவர் நட்சத்திர உயர்வு பெற ஒரு உதவியாகக் கூறப்பட்டது.


தொழில்


1930கள்


ஆப்தே தனது ஒன்பது வயதில் பாபுராவ் பெந்தர்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் பால்ஜி பெந்தர்கர் இயக்கிய ஷியாம்சுந்தர் படத்தில் நடித்து தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். இது ஒரேத் திரையரங்கில் “வெள்ளி விழா” (25 வாரங்கள்) கொண்டாடிய முதல் மராத்திய படம் என்று இந்த படம் கூறப்படுகிறது.


1934 ஆம் ஆண்டில், பிரபாத் பிலிம்ஸ் நிறுவனத்திற்காக வி. சாந்தாராம் இயக்கிய அமிர்த மந்தன் படத்தில் நாயகனின் சகோதரியாக நடித்தார். இந்த படம் ஒரு ஒரு பெரிய வெற்றியாக அமைந்தது. வெள்ளி விழாவைக் கொண்டாடிய முதல் இந்திப் பேசும் படமான இது வெனிசில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. கேசவ்ராவ் போலின் இசையமைப்பில் இவர் நான்கு தனி பாடல்களை பாடினார். “கம்சினி மே தில் பெ காம் கா” என்ற கசல் பாடல் திரையிசைக்காக பதிவுசெய்யப்பட்ட முதல் கசல் பாடலாகும்.


1936 ஆம் ஆண்டில் வி. சாந்தாராம் இயக்கிய அமர் ஜோதி படத்தில் துர்கா கோட், வசந்தி, சந்திர மோகன் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார். பிரபாத் பிலிம்ஸ் நிறுவனத்தில் இவர் பாடிய முதல் படமாகவும் இருந்தது.


1937 ஆம் ஆண்டில், வி. சாந்தாராமின் துனியா நா மானே என்ற படத்தில் மனைவியை இழந்த வயதான பணக்காரரை மணந்த நிர்மலா என்ற இளம் பெண்ணின் பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் ஒரு ஆங்கில பாடலைப் பாடினார். இது எச்.டபிள்யூ லாங்ஃபெலோவின் ஸ்லாம் ஆஃப் லைஃப் வெளியீடாக இருந்தது. அதே ஆண்டு, குங்கு என்ற படத்தின் மராத்திய பதிப்பில் நடித்தார். இந்த படம் இவரது தொழில் வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றியை நிரூபித்தது. மேலும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.


1938 ஆம் ஆண்டில், வி. சாந்தாராம் இயக்கிய பிரபாத் பிலிம்ஸின் கோபால் கிருஷ்ணன் என்ற மற்றொரு பிரபலமான படத்தில் நடித்தார்.


1941ஆம் ஆண்டில், ஆப்தே சாவித்ரி என்ற தமிழ்ப் படத்தில் நடித்தார். அதில் எம்.எஸ்.சுப்புலட்சுமியும் நாரதர் வேடத்தில் நடித்திருந்தார். 1943 ஆம் ஆண்டில் துஹாய் படத்தில் நூர்ஜஹானனுடன் நடித்திருந்தார். இது ஒரு சமூகப் படமாகும். இதில் நூர்ஜஹான் இரண்டாவது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தை விஷ்ணு வியாஸ் என்பவர் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு ரபீக் கசுனவியும் பன்னாலால் கோஷ் ஆகியா இருவரும் இசையமைத்தனர்.


1946 ஆம் ஆண்டில், ஆப்தே நான்கு படங்களில் நடித்தார். மாஸ்டர் விநாயக் என்பவர் தயாரித்து இயக்கிய சுபத்ரா என்ற புராண நகைச்சுவை படத்தில் யாகூப், ஈஸ்வர்லால், லதா மங்கேஷ்கர் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார். வசந்த் தேசாயின் இசையமைப்பில் “மெயின் கிலி கில்லி புல்வாரி” பாடலை இவர் லதா மங்கேஷ்கருடன் சேர்ந்து பாடியிருந்தார். பின்னர் பராஸ் பிக்சர் என்ற நிறுவனத்திற்காக சர்வோத்தம் பதாமி இயக்கத்தில் ஷாகு மோதக்குடன் நடித்த உத்தர அபிமன்யு திரைப்படம் வெளிவந்தது. வி. எம். குஞ்சால் இயக்கிய பானிஹரி என்ற படத்தில் சுரேந்திரா மற்றும் யாகூப் உடன் நடித்தார். மேலும், பால்ஜி பெந்தர்கர் இயக்கத்தில் வால்மிகி படத்தில் நடித்தார். பிரிதிவிராஜ் மற்றும் ராஜ் கபூர் இருவரும் படத்தில் நடித்திருந்தனர்.


சாந்தா ஆப்தே இந்தியத் திரையுலகின் மூன்று “தனித்துவமான பெண் பாடகர்களுடன்” பாடுவதற்கும் நடிப்பதற்கும் அரிய ஒற்றுமையைக் கொண்டிருந்தார்: சாவித்ரியில் எம்.எஸ். சுப்புலட்சுமியுடன் (1941), துஹாயில் நூர்ஜஹானுடன் (1943), சுபத்ராவில் லதா மங்கேஷ்கருடன் (1946) பாடியிருந்தார்.


1950கள்


1950 களில் சாந்தா ஆப்தேவின் படங்கள் குறைவாகவே காணப்பட்டன. 1950ஆம் ஆண்டில் ராஜா பரஞ்ச்பேவின் ஜாரா ஜபூன் போன்ற மராத்திய படங்களில் நடித்தார். கேசவ்ராவ் டேட் மற்றும் லீலா சிட்னீஸ் இதில் இவருடன் நடித்திருந்தனர். தத்தா தர்மாதிகாரி இயக்கிய குங்க்வாச்சா தானி (1951), கே.பி. பாவே இயக்கிய போன்ற படங்களிலும் நடித்தார். இராமன் பி. தேசாய் இயக்கத்தில் நிருபா ராய், மன்ஹார் தேசாய், பிரேம் ஆதிப் ஆகியோருடன் நடித்திருந்த சண்டி பூஜா படமும், சமர் சாட்டர்ஜி இயக்கி 1958இல் வெளிவந்த ராம் பக்த விபீஷண் என்ற பட்மும் இவரது கடைசி படங்களாகும்.


சொந்த வாழ்க்கை


ஆப்தே “திரைக்குள்ளும், வெளியேயும் பெண்கள் சக்தியை அடையாளப்படுத்திய” ஒரு பெண் என்று குறிப்பிடப்படுகிறார்.


இறப்பு


ஆறு மாத நோயைத் தொடர்ந்து ஆப்தே 1964 பிப்ரவரி 24 அன்று, மகாராட்டிராவின் மும்பை அந்தேரியில் உள்ள தனது இல்லத்தில் மாரடைப்பால் இறந்தார்.


சர்ச்சை


சாந்தா ஆப்தே இறந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகை நயனா ஆப்தே தன்னை இவரது மகள் என்று அறிவித்தார். 1947ஆம் ஆண்டில் ஆப்தே ஒரு தொலைதூர உறவினரை மணந்ததாகவும், அவர் மூன்று மாத கர்ப்பமாக இருந்த ஆப்தேவை விட்டு விலகியதாகவும் நயனா கூறினார். விஜய் ரஞ்சன் என்பவர் தனது “ஸ்டோரி ஆஃப் எ பாலிவுட் சாங்” புத்தகத்தில், “தி ரெபெல் காமன்” என்ற தலைப்பில் சாந்தா ஆப்தே என்ற பிரிவில், “சாந்தா திருமணமாகாதவர். ஆனால் இவருக்கு மராத்திய திரைப்பட மற்றும் மேடை நடிகையான நயனா ஆப்தே என்ற ஒரு மகள் இருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.


வெளி இணைப்புகள்

நடிகை சாந்தா ஆப்தே – விக்கிப்பீடியா

Actress Shanta Apte – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *