சிரேயா நாராயண் (Shreya Narayan) 1985 பிப்ரவரி 22 அன்று பிறந்த ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை, விளம்பர நடிகை, எழுத்தாளர் மற்றும் சமூகப் பணியாளர் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
சிரேயா நாராயண் பீகாரின் முசாபர்பூரில் பிறந்தார். இந்தியாவின் முதல் ஜனாதிபதியான டாக்டர் இராஜேந்திர பிரசாத்தின் மருமகளாவார்.
திரைப்பட வாழ்க்கை
2011 இல், திக்மனசு துளியாவின் ஹிட் படமான சாஹப் பிவி அவுர் கேங்க்ஸ்டர் திரைப்படத்தில் மயூவாவின் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிரேயா பாராட்டைப் பெற்றார். நாக்அவுட், ராக்ஸ்டார், சுக்விந்தர் சிங்கின் அறிமுகப் படமான குச் கரியே மற்றும் சுதான்சு சேகர் ஜாவின் பிரேமாயி போன்ற பல இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்தர் குமாரின் சூப்பர் நானி படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தார், இதில் நானி பாத்திரத்தில் பிரபலமான இந்தி நடிகை ரேகா நடித்தார். ராஜ்ஸ்ரீயின் சாம்ராட் & கோ என்ற படத்தில் திவ்யா என்ற ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அனுபவ் சின்ஹா தயாரிப்பில் சௌமிக் சென் இயக்கி நடிகை மாதுரி தீட்சித் நடித்து வெளிவந்த குலாம் கேங் என்றத் திரைப்படத்தில் இவர் சார்ம் லாஜ் என்ற பாடலை எழுதியுள்ளார். யாஸ்ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அடுல் சபர்வால் இயக்கத்தில் சோனி தொலைக்காட்சியில் வெளிவந்த பவுடர் என்ற சிறு தொடரில் ஜூலி எனற பிரபலமான கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இதில்ஒரு உயர் வகுப்பு பாதுகாவலர் மற்றும் காவல் துறைக்கு தகவல் வழங்குபவராக அவர் நடித்திருந்தார்.
சமூகப்பணி
பீகாரின் கோசி நதி வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரகாஷ் ஜாவுடன் இணைந்து வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டார்.
பிற பணிகள்
இந்திய பொருளாதார நிபுணர்களுக்கான ஏன் எகனாமிக் மாடல் ஆப் பாலிவுட் 3 பகுதிகள் கொண்ட கட்டுரையை சிரேயா எழுதியுள்ளார்.