தபஸ்ஸம் (Tabassum) (பிறப்பு கிரண் பாலா சச்தேவ் 9 சூலை 1944) ஓர் இந்திய திரைப்பட நடிகையும் பேச்சு நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார். இவர் 1947இல் குழந்தை நடிகர் பேபி தபஸ்ஸமாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் இந்திய தொலைக்காட்சியின் முதல் தொலைக்காட்சி பேச்சு நிகழ்ச்சியான பூல் கிலே ஹைன் குல்ஷன் குல்ஷன் என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக வெற்றிகரமான தொலைக்காட்சி வாழ்க்கையைத் தொடங்கினார். இது 1972 முதல் 1993 வரை தேசிய ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டது. அதில் இவர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பிரமுகர்களை பேட்டி கண்டார். இவர் ஒரு மேடை தொகுப்பாளராகவும் பணியாற்றினார். திரைப்படங்கள், தொலைக்காட்சி, வானொலி மற்றும் வலைதளம் ஆகிய நான்கு ஊடகங்களிலும் இவர் தோன்றியுள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கையும் பின்னணியும்
இவர் 1944இல் மும்பையில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் அயோத்தியநாத் சச்தேவ் என்பவருக்கும் சுதந்திர போராட்ட வீரரும், பத்திரிகையாளரும், எழுத்தாளருமான அஸ்காரி பேகம் ஆகியோருக்கு பிறந்தார். இவரது தந்தை தனது தாயின் மத உணர்வுகளை மனதில் வைத்து இவருக்கு தபஸ்ஸம் என்று பெயரிட்டார். அதே நேரத்தில் இவரது தாயார் தனது தந்தையின் மத உணர்வுகளை மனதில் வைத்து கிரண் பாலா என்ற பெயரை வைத்திருந்தார். திருமணத்திற்கு முந்தைய ஆவணங்களின்படி இவரது அதிகாரப்பூர்வ பெயர் கிரண் பாலா சச்தேவ் என்பதாகும்.
தொழில்
தபஸ்ஸம் குழந்தை நடிகராக நர்கிஸ் (1947), மேரா சுஹாக் (1947), மஞ்ச்தர் (1947) மற்றும் பாரி பெஹன் (1949) ஆகிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் நிதின் போஸ் இயக்கத்தில் தீடர் (1951) என்ற படத்தில் சிறுவயது நர்கிசாக நடித்தார். லதா மங்கேஷ்கர் மற்றும் சம்சாத் பேகம் பாடிய பச்ச்பன் கே தின் பூலா நா தேனா என்ற வெற்றிப் பாடல் இவரைக் கொண்டு படமாக்கப்பட்டது. மேலும், அடுத்த ஆண்டில், விஜய் பட் இயக்கிய மற்றொரு முக்கியமான படமான பைஜு பாவ்ரா (1952) படத்தில் தோன்றினார். அதில் மீனாகுமாரியின் குழந்தை பருவ வேடத்தில் தோன்றினார். ஜாய் முகர்ஜி மற்றும் ஆஷா பரேக் நடித்த பிரபலமான திரைப்படமான பிர் வோஹி தில் லயா ஹூனிஎன்ற படத்திலும் இவர் நடித்துள்ளார். ‘அஜி கிப்லா மொஹ்தர்மா’ என்ற அழகான பாடலிலும் நடித்தார். ஒரு இடைவெளிக்குப் பிறகு, இவர் வயதான வேடங்களில் திரைப்படங்களில் மீண்டும் தோன்றினார். ஒரு கதாபாத்திர நடிகையாக பணியாற்றினார்.
இவர் 1972 முதல் 1993 வரை 21 ஆண்டுகள் ஒளிபரப்பபட்ட இந்திய தொலைக்காட்சியின் முதல் பேச்சு நிகழ்ச்சியான பூல் கிலே ஹைன் குல்ஷன் குல்ஷனை தொகுத்து வழங்கினார். மும்பை தூர்தர்ஷன் நிலையம் தயாரித்த இது திரைப்பட பிரபலங்களின் நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டது. மேலும், மிகவும் பிரபலமானது. இது இவருக்கு மேடைத் தொகுப்பாளராக ஒரு வாழ்க்கைக்கு வழிவகுத்தது. கிருகலட்சுமி என்ற இந்தி மகளிர் பத்திரிகையின் ஆசிரியராகவும் 15 ஆண்டுகள் இருந்தார். மேலும் பல நகைச்சுவை புத்தகங்களையும் எழுதினார்.
சொந்த வாழ்க்கை
தொலைக்காட்சி நடிகர் அருண் கோவிலின் மூத்த சகோதரர் விஜய் கோவிலை இவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகன் கோஷாங் கோவில் தும் பர் ஹம் குர்பான் (1985) என்ற மூன்று படங்களில் ஒரு முன்னணி நடிகராக இருந்தார். இதை தபஸம் தயாரித்து இயக்கியிருந்தார். இதில் ஜானி லீவரை நகைச்சுவை நடிகராக முதல்முறையாக திரையில் அறிமுகப்படுத்தினார். கார்டூட் (1987) மற்றும் அஜீப் தஸ்தான் ஹை ஆம் (1996) ஜீ டிவி தயாரித்து ஜே ஓம் பிரகாஷ் இயக்கியுள்ளார் (ரித்திக் ரோஷனின் தாத்தா). 2009 ஆம் ஆண்டில், இவரது பேத்தி குஷி (கோஷாங்கின் மகள்) ஹம் பிர் மைல் நா மைல் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.