அஜித் குமார், (பிறப்பு மே 1, 1971) தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் தல என்றும் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தயத்திலும் பங்கு பெற்றுள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் 2012 ஆம் ஆண்டு பட்டியலில் அஜித் குமார் 61ஆவது இடத்தினைப் பெற்றார். 2014 ஆவது ஆண்டிற்கான இப்பட்டியலில் 10 இடங்கள் முன்னேறி 51 ஆவது இடத்தைப் பிடித்தார். மேலும் 2013-வது ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய திரைப்பட நடிகரும் ஆவார்.
வாழ்க்கைச் சுருக்கம்
அஜித் குமார், இந்தியாவின் ஐதராபாத் நகரில் ஒரு தமிழ்த் தந்தைக்கும், ஒரு சிந்தி தாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதன் மூலமே தமிழ் பேசக் கற்றுக்கொண்டார். 1986 இல் உயர்நிலைக் கல்வியை நிறைவு செய்யாமலேயே கல்வியை இடைநிறுத்தினார். அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை சாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோசுகா என்ற பெண் குழந்தையும், ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.
திரை வாழ்க்கை
தொடக்க காலங்களில் விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் முன்னர், 1992 இல் பிரேம புத்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது. இதன் பின்னரே அமராவதி என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் வெற்றி இல்லை. அடுத்த ஆண்டில் பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் பவித்ரா திரைப்படம் இவருக்குக் குறிப்பிடத்தக்க திரைப்படமாக அமைந்தது. அஜித் குமாரின் முதல் வெற்றித் திரைப்படம் 1995 ஆவது ஆண்டில் வெளியான ஆசை திரைப்படமாகும். இடையில் மோட்டார் பந்தயம் ஒன்றில் போட்டியிட்டுப் படுகாயமடைந்தார். இதனால் நடிப்பில் தடை ஏற்பட்டது. அதன் பின்னர் சரண் இயக்கத்தில் 1998ஆம் ஆண்டில் வெளியான காதல் மன்னன் திரைப்படத்தின் மூலமாக மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.
2003–05
2003 முதல் 2005 வரை, அஜித் மோட்டார் பந்தயங்களில் அதிக முனைப்புடன் ஈடுபட்டது அதிக திரைப்படங்களில் நடிப்பதற்கு தடையாக அமைந்தது. இதனால் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தார். 2003இல் நீண்ட தாமதற்குப் பின்னர் வெளியான என்னை தாலாட்ட வருவாளா திரைப்படமும், காவல்துறை அதிகாரியாக நடித்த ஆஞ்சநேயா திரைப்படமும் தோல்வியடைந்தது. மேலும், அந்த கால கட்டத்தில் சாமி, காக்க காக்க, கஜினி ஆகிய திரைப்படங்களில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை பல்வேறு காரணங்களுக்காக தவிர்த்தார்.
நடிகை சினேகாவுடன் இணைந்து நடித்த ஜனா திரைப்படம் ஒரு மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. இக்காலகட்டத்தில் இவர் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ஒரேயொரு திரைப்படம் சரண் இயக்கத்தில் வெளியான அட்டகாசம் திரைப்படம் மட்டுமே. இப்படத்தில் அஜித்தின் இரட்டை கதாப்பாத்திரங்களின் நடிப்பும், ” தல தீபாவளி” பாடலும் அஜித்தின் அதிரடி நாயகன் எனும் தகுதியை உயர்த்தியது. தொடர்ந்து 2005 ஆம் ஆண்டில், லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ஜி திரைப்படம் வணிக ரீதியாகத் தோல்வியைப் பெற்றாலும், இப்படத்திற்குக் கிடைத்த நேர்மறையான விமர்சனங்களும், இப்படம் பெற்ற ஒரு வலுவான தொடக்கமும் அஜித் மீண்டும் தனது திரை வாழ்க்கையை உறுதியாகத் தொடங்க உதவியது. ஆக, 2003 முதல் 2005 வரையில் வெளியான ஐந்து படங்களில், அட்டகாசம் திரைப்படம் மட்டுமே வணிக ரீதியாக வெற்றியைப் பெற்றது.
2010–தற்போது வரை
2009 ஆவது ஆண்டில் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட அசல் திரைப்படம் 2010 பிப்ரவரியில் வெளியானது. அஜித் இரட்டை வேடங்களில் நடித்து மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியைப் பெறாமல் போனது. இரண்டாவது முறையாக மோட்டார் பந்தயங்களில் கலந்து கொண்ட பின்னர் வெங்கட் பிரபுவின் மங்காத்தா திரைப்படத்தில் நடித்தார்.
2017 ஆவது ஆண்டில் சிவா இயக்கத்தில் வெளியான விவேகம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் அடுத்ததாக சிவா இயக்கும் திரைப்படத்தில் நடிக்கமாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், சிவா இயக்கத்தில் விசுவாசம் எனும் புதிய திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இது அஜித் குமார், சிவா கூட்டணியின் நான்காவது திரைப்படமாகும்.
சர்ச்சைகள்
பிப்ரவரி 06, 2010 அன்று நிகழ்ந்த கருணாநிதி பாராட்டு விழாவில் நடிகர் அஜித்குமார் பேசும்போது திரையுலகினரை அரசியல் காரணங்களுக்காகத் திரைப்பட விழாக்களில் பங்கெடுக்குமாறு சிலர் மிரட்டுவதாகப் பகிரங்கமாகப் புகார் கூறினார். இதனால் அஜித்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் அஜித், தவிர்க்க முடியாத சில நிகழ்ச்சிகளைத் தவிர மற்ற எந்த பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை.
பல நல்ல காரியங்களுக்கு உதவிகள் செய்துள்ள இவர் 2014ஆம் ஆண்டு தனது வீட்டில் வேலை செய்பவர்கள் 12 பேருக்கும் வீடுகள் கட்டிக்கொடுத்து உதவி செய்துள்ளார்.
இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம்
பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் 2013 ஆகஸ்டு 18 அன்று சென்னை முதல் பெங்களூர் வரையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணியில் பங்கேற்றார்.
அறுவை சிகிச்சை
ஆரம்பம் திரைப்படத்தில் நடித்தபோது ஏற்பட்ட விபத்தின் காரணமாக முழங்கால் மற்றும் தோள்பட்டையில் அடிபட்டது. இதனால், 2015 நவம்பர் மாதத்தில் முழங்கால், மற்றும் தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
அரசியல்
பல்வேறு அரசியல் நிகழ்வுகளுடன் தொடர்பு படுத்தப்பட்டாலும் தொடர்ந்து அரசியலில் இருந்து விலகியே இருந்து வருகிறார்.
விருதுகள்
தமிழக அரசு திரைப்பட விருதுகள்
பிலிம்பேர் விருதுகள்
விஜய் விருதுகள்
பிற விருதுகள்
திரைப்பட விபரம்
நடித்துள்ள திரைப்படங்கள்
வர்த்தக விளம்பரங்கள்
அஜித் குமார் திரைப்படங்கள் மட்டுமின்றி சில வர்த்தக விளம்பரங்களிலும் நடித்துள்ளார். தற்போது விளம்பரங்களில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்து விட்டார். இது இவர் நடித்துள்ள வர்த்தக விளம்பரங்களின் பட்டியலாகும்.
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் |
---|---|
1990 | என் வீடு என் கணவர் |
1993 | பிரேம புத்தகம் |
1993 | அமராவதி |
1994 | பாசமலர்கள் |
1994 | பவித்ரா |
1995 | ராஜாவின் பார்வையிலே |
1995 | ஆசை |
1996 | வான்மதி |
1996 | கல்லூரி வாசல் |
1996 | மைனர் மாப்பிள்ளை |
1996 | காதல் கோட்டை |
1997 | நேசம் |
1997 | ராசி |
1997 | உல்லாசம் |
1997 | பகைவன் |
1997 | ரெட்டை ஜடை வயசு |
1998 | காதல் மன்னன் |
1998 | அவள் வருவாளா |
1998 | உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் |
1998 | உயிரோடு உயிராக |
1999 | தொடரும் |
1999 | உன்னை தேடி |
1999 | வாலி |
1999 | ஆனந்த பூங்காற்றே |
1999 | அமர்க்களம் |
1999 | நீ வருவாய் என |
2000 | முகவரி |
2000 | கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் |
2000 | உன்னை கொடு என்னை தருவேன் |
2001 | தீனா |
2001 | சிட்டிசன் |
2001 | பூவெல்லாம் உன் வாசம் |
2001 | அசோகா |
2002 | ரெட் |
2002 | ராஜா |
2002 | வில்லன் |
2003 | என்னை தாலாட்ட வருவாளா |
2003 | ஆஞ்சநேயா |
2004 | ஜனா |
2004 | அட்டகாசம் |
2005 | ஜி |
2006 | பரமசிவன் |
2006 | திருப்பதி |
2006 | வரலாறு |
2007 | ஆழ்வார் |
2007 | கிரீடம் |
2007 | பில்லா |
2008 | ஏகன் |
2010 | அசல் |
2011 | மங்காத்தா |
2012 | பில்லா 2 |
2012 | இங்கிலீஷ் விங்கிலிஷ் |
2013 | ஆரம்பம் |
2014 | வீரம் |
2015 | என்னை அறிந்தால் |
2015 | வேதாளம் |
2017 | விவேகம் |
2018 | விசுவாசம் |
2019 | நேர்கொண்ட பார்வை |
2020 | வலிமை |