சம்மி கபூர் (Shammi Kapoor ,இந்தி: शम्मी कपूर, உருது: شمّی کپُور, ஷம்மி கபூர்; அக்டோபர் 21, 1931 – ஆகஸ்ட் 14, 2011), ஓர் இந்திய திரைப்பட நடிகராகவும் இயக்குனராகவும் இருந்தவர். 1950களிலும் 1960களிலும் இந்தித் திரைப்படங்களில் புகழ்பெற்ற நடிகராக விளங்கியவர்.
ஆரம்பகால வாழ்க்கை
பஞ்சாபியரும் திரைப்பட மற்றும் நாடக நடிகருமான பிரித்விராஜ் கபூருக்கு மும்பையில் பிறந்தார். பிரித்விராஜ் கபூரின் மூன்று மகன்களில் இரண்டாவதாகப் பிறந்த சம்மிக்கு பெற்றோர் இட்ட பெயர் சம்சேர் ராஜ் கபூர் என்பதாகும். மற்ற இரு மகன்களான, ராஜ் கபூரும் சசி கபூரும் இவரைப்போலவே தந்தையின் வழியில் இந்தித் திரைப்பட உலகில் புகழ் பெற்று விளங்கினர். மும்பையில் பிறந்தாலும் இளமைக் காலத்தை கொல்கத்தாவில் வளர்ந்தார். பின்னர் மும்பையின் வடாலாவில் உள்ள புனித யோசஃப் கான்வென்டிலும் மாதுங்காவில் உள்ள டான் பாசுகோ உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். பள்ளியிறுதியை நியூ எரா பள்ளியில் முடித்தார்.
திரைத்துறை
ஷம்மி கபூர் இந்தி சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.1953ஆம் ஆண்டு திரைவாழ்வை ஜீவன் ஜோதி என்ற திரைப்படத்தின் மூலம் துவங்கினார்.
விருதுகள்
1968ஆம் ஆண்டு பிரம்மச்சாரி திரைப்படத்திற்காக பிலிம்ஃபேர் சிறந்த நடிகருக்கான விருதும் 1982ஆம் ஆண்டு விதாதா திரைப்படத்திற்காக பிலிம்ஃபேர் சிறந்த குணசித்திர நடிகருக்கான விருதையும் பெற்றார். வாழ்நாள் சாதனை விருது இவருக்கு 1995ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
இல்லற வாழ்க்கை
புகழ்பெற்ற நடிகை கீதா பாலியை மணம் புரிந்திருந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு நீலா என்பவரை திருமணம் செய்துள்ளார். இணையத்தில் மிகுந்த ஆர்வமுள்ள இவர் மும்பை இணையப் பயனாளர் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார்.
இறப்பு
நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பால் துன்பமுற்ற கபூர் ஆகத்து 07, 2011 அன்று மும்பையின் பிரீச் கேன்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலை அடுத்த சில நாட்களுக்கு மோசமாகவே இருந்தநிலையில் செயற்கை மூச்சு விடும் இயந்திர வழியே கண்காணிக்கப்பட்டு வந்தார். ஆகத்து 14, 2011 அன்று காலை 05:15 மணிக்கு அன்னாரின் உயிர் பிரிந்தது.