பென்மத்சா சுப்பாராஜூ (Penmatsa Subbaraju)(பிறப்பு:பெப்ரவரி 27 ,1977 என்பவர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெரும்பான்மையாகத் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். துவக்கத்தில் எதிராளிக் கதாப்பாத்திரத்தில் தோன்றினார். தற்போது துணைக் கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி, ஆர்யா, போக்கிரி ,பாகுபலி 2, லீடர், மிர்ச்சி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் முலம் பரவலாக அறியப்படுகிறார்.
ஆரம்பகால வாழ்க்கை
பென்மத்சா சுப்பராஜூ பெப்ரவரி 27, 1977 இல் ஆந்திரப் பிரதேசத்தின் பீமவரத்தில், பிறந்தார். இவரின் தந்தை பென்மத்சா ராமகிருஷ்ணன், தாய் விஜயலட்சுமி. இவருக்கு புல்லம் ராஜு எனும் மூத்த சகோதரர் உள்ளார். அவர் சமசுகிருதம் பயிற்றுவிக்கும் ஆசிரியராக உள்ளார். சுப்பராஜு பீமாவரத்தில் உள்ள டி. என். ஆர் கல்லூரியில் பயின்றார். இவர் கணிதப் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின் கணிணிப் பயிற்சி பெற்று ஐதராபாத்திலுள்ள டெல் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.
தொழில் வாழ்க்கை
எதிர்பாராத விதமாகவே இவர் திரைப்படத் துறைக்கு வந்தார். தெலுங்குத் திரைப்பட இயக்குநர் கிருஷ்ணா வம்சியின் உதவியாளர், சுப்பராஜுவை இயக்குநரின் கணினியில் உள்ள பிரச்சனயைச் சரி செய்து தருமாறு அணுகினார். பின் கடம் எனும் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
முக்கியக் கதாப்பத்திரங்கள்
இவரின் முதல் திரைப்படம் பூரி ஜெகன்நாத் இயக்கிய அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி ஆகும். இந்தத் திரைப்படத்தில் ஒரு குத்துச் சண்டை வீரராக நடித்திருப்பார். இதில் ஒரு எதிர்மறைக் கதாப்பத்திரத்தில் நடித்திருப்பார். இந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்த சில திரைப்படங்களிலும் எதிராளிக் கதாப்பத்திரத்திற்கான வாய்ப்புகளே இவருக்கு கிடைத்தது. இந்தத் திரைப்படம் மோகன் ராஜா இயக்கத்தில்எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி எனும் பெயரில் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. தெலுங்கில் நடித்த கதாப்பத்திரத்திலேயே இதிலும் நடித்திருப்பார்.
மே 7, 2014 இல் அறிமுக இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் வெளியான ஆர்யா திரைப்படத்தில் அடியாள் கதாபாத்திரத்தில் நடித்தார். இதில் அல்லு அர்ஜூன், அனு மேத்தா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தனர்.
திரை வரலாறு
2017
2017 இல் ரவியின் இயக்கத்தில் ஜவான் எனும் தெலுங்குப் படத்தில் இக்பால் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்தார். வாசு பரிமனி இயக்கத்தில் படேல் எஸ். ஐ. ஆர் எனும் அதிரடித் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார். ஹரிஷ் சங்கர் எழுதி இயக்கிய துவ்வடா ஜெகன்நாதன் எனும் அதிரடி, நகைச்சுவைத் திரைப்படத்தில் சந்தி எனும் கதாப்பத்திரத்தில் நடித்தார். இதில் அல்லு அர்ஜூன் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ராஜமவுலி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான பாகுபலி 2 திரைப்படத்தில் குமார வர்மா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் வெற்றி பெற்றது.
2016
சுந்தர் சி இயக்கத்தில் மத கஜ ராஜா எனும் தமிழ் அதிரடி, நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்தார். இதில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தார்.
2015
பரசுராம் இயக்கத்தில் ஸ்ரீரஸ்து சுபாமஸ்து எனும் தெலுங்குத் திரைப்படத்தில் நடித்தார். டெம்பர் எனும் திரைப்படத்தில் ரவி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
2014
கே. எஸ் இயக்கத்தில் பவர் எனும் நகைச்சுவைத் திரைப்படத்தில் ராஜீவ் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.