பி. ஜெயஸ்ரீ (B. Jayashree) (பிறப்பு: 1950 சூன் 9 இந்தியாவைச் சேர்ந்த ஒரு மூத்த நாடக நடிகையும், இயக்குனரும், பாடகியுமாவார். இவர் திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் நடித்துள்ளார். மேலும், படங்களில் பின்னணிக் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். 1976ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பெங்களூரைத் தளமாகக் கொண்ட “ஸ்பந்தனா தியேட்டர்” என்ற ஒரு நாடக நிறுவனத்தின் படைப்பாக்க இயக்குனரும் ஆவார்.
இவர் 2010 ல் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்கவைக்கு பரிந்துரைக்கப்பட்டார். 2013ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் நான்காவது மிக உயர்ந்த குடிமை கௌரவமான பத்மசிறீ இவருக்கு வழங்கப்பட்டது.
இவரது தாத்தா குப்பி வீரண்ணா, ஒரு இந்திய நாடக இயக்குனராகவும், கலைஞராகவும், இந்தியக் குடியரசுத் தலைவரிடம் பத்மசிறீ பெறுநராகவும் இருந்தார். இவர் கன்னட நாடகத்திற்கு முன்னோடிகளில் ஒருவராகவும், அதிக பங்களிப்பு செய்தவராகவும் இருந்தார். கன்னட நாடகத் துறையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த குப்பி “சிறீ சன்னபசவேசுவர நாடகா” என்ற நாடக நிறுவனத்தை நிறுவினார் .
ஆரம்பகால வாழ்க்கையும் பின்னணியும்
குப்பி வீரண்ணாவின் மகளான மாலத்தாமாவுக்கு பெங்களூரில் பிறந்தார். பின்னர் 1973ஆம் ஆண்டில் புது தில்லியின் தேசிய நாடகப் பள்ளியில் பட்டம் பெற்றார் . அங்கு இவர் பிரபல நாடக இயக்குநரும் ஆசிரியருமான இப்ராஹிம் அல்காசியின் கீழ் பயிற்சி பெற்றார்.
தொழில்
பல ஆண்டுகளாக, பி. வி. கராந்த் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க நாடக பிரமுகர்களுடன் இவர் பணியாற்றியுள்ளார். நாகமண்டலா (1997), தேவேரி (1999), கேர் ஆஃப் ஃபுட்பாத் (2006) போன்ற கன்னட படங்களில் நடித்துள்ளார். மைசூரைத் தளமாகக் கொண்ட ரங்காயணம் என்ற நாடக நிறுவனத்தின் இயக்குநராகவும் இவர் சிலகாலம் இருந்துள்ளார்.
இவர் மாதவி, காயத்ரி, ஜெயபிரதா, அம்பிகா, சுமலதா, போன்ற பல நடிகைகளுக்கு ராஜ்குமார் திரைப்படங்களில் குரல் கொடுக்கும் கலைஞராக இருந்தார். ஒரு பின்னணி பாடகியாக இவர் கன்னடத் திரையுலகில் பணியாற்றியுள்ளார். இதில் நன்னே பிரீதியா ஹுடுகி என்ற கன்னடப் படத்தில் இடம் பெற்ற “கார் கார் கார்” என்ற பாடல் குறிப்பிடத்தக்கவை.
1996ஆம் ஆண்டில், நடிப்புக்காக இவருக்கு சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டது. பின்னர், 2010 இல் மாநிலங்களவைக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டார். இவர் 2009இல் கர்நாடக மாநில திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டத்தையும் பெற்றார்
சொந்த வாழ்க்கை
இவர் கே. ஆனந்த ராஜூ என்பவரை மணந்தா. தம்பதியருக்கு சுஷ்மா வீர் என்ற ஒரு வளர்ப்பு மகள் உள்ளார்.