நடிகை தேவிகா ராணி | Actress Devika Rani

தேவிகா ராணி சௌத்திரி ரோரிக் (Devika Rani Chaudhuri Roerich, வங்காள: দেবিকা রাণী) (தெலுங்கு: దేవికా రాణి) (30 மார்ச்சு 1908 – 9 மார்ச்சு 1994) இந்தியத் திரைப்பட உலகின் துவக்க காலங்களில் நடிகையாக புகழ்பெற்றவர்.


பணிவாழ்வு


தேவிகா ராணி வால்டேர் என்றழைக்கப்பட்ட விசாகப்பட்டிணத்தில் சிறப்புமிகுந்த குடும்பமொன்றில் மார்ச்சு 30, 1908இல் பிறந்தார். நோபல் பரிசு பெற்ற இந்தியர் இரவீந்திரநாத் தாகூரின் குடும்பத்துடன் தொடர்புடையவர். தேவிகாவின் தந்தை எம். என். சௌத்திரி மதராசின் முதல் இந்திய தலைமை அறுவை மருத்துவராக (Surgeon-General of Madras) பணியாற்றியவர். தாயார் பெயர் லீலாவாகும்.


1920களில் தனது துவக்க பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் நாடகக் கலைக்கான வேந்திய அகாதமியிலும் (RADA) வேந்திய இசை அகாதமியிலும் உதவித் தொகைகளுடன் பயின்றார். தவிரவும் கட்டிட வடிவமைப்பு, நெசவுப்பொருட்கள், உள்வடிவமைப்பு போன்றவற்றிலும் கல்வி கற்று எலிசபெத் ஆர்டென் கீழ் பயிற்சிப் பணியாற்றி வந்தார். இங்குதான் பிற்காலத்தில் அவரது பல வெற்றித் திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதிய நிரஞ்சன் பாலை சந்தித்தார்.


1929ஆம் ஆண்டில் இந்தியத் தயாரிப்பாளரும் நடிகருமான இமான்ஷூ ராயை திருமணம் புரிந்தார். இருவரும் 1933ஆம் ஆண்டில் வெளிவந்த கர்மா என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். தொடர்ந்து பம்பாய் டாக்கீஸ் என்ற திரைப்பட தயாரிப்புத்தளத்தை நிறுவினர். நிரஞ்சன் பால் மற்றும் பிரான்சு ஓஸ்டென் ஆகியோருடன் இணைந்து சாதி அமைப்புகளை சாடி திரைப்படங்கள் எடுத்தனர். இந்த காலகட்டத்தில் இவர்களுடன் நடித்தவர்களில் அசோக் குமார், மதுபாலா குறிப்பிடத் தக்கவர்கள்.


1936இல் தன்னுடன் நடித்து வந்த காதலர் நஜம் உல் அசனுடன் தேவிகா ராணி ஓடிவிட்டார்.இருப்பினும் கணவர் ராய் அவரை மீளவும் அழைத்துக்கொண்டார். ஆனால் நஜம் அசன் திரும்பாதநிலையில் தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த அசோக் குமாரை முதன்மை வேடத்தில் நடிக்க வைத்து திரைப்படத் தயாரிப்பைத் தொடர்ந்தார். அச்சுத் கன்யா என்ற அந்தத் திரைப்படத்தில் அசோக் குமார் பிராமண இளைஞராகவும் தேவிகா தீண்டத்தகாத இனப்பெண்ணாகவும் நடித்தனர்.


தனது கணவருடன் நடித்த கர்மா திரைப்படத்தில் திரைப்பட உலகிலேயே சாதனையாக நீண்ட நேரம் இதழோடு இதழ் முத்தக் காட்சியில் நடித்துள்ளார். நான்கு நிமிடநேரம் நீடித்த அந்த முத்தம் கட்டுப்பெட்டியான இந்திய சமூகத்தில் அப்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.


பிந்தைய வாழ்க்கை


1940இல் கணவனை இழந்தபிறகு அவரது பம்பாய் டாக்கீஸ் படப்பிடிப்புத் தளத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தார். ஆனால் அதன் நிர்வாகத்தை சசாதர் முகர்ஜியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியதாயிற்று. 1943ஆம் ஆண்டில் சசாதர், அசோக்குமார் மற்றும் பிற பம்பாய் டாக்கீஸ்காரர்கள் பிரிந்து சென்று பிலிம்ஸ்தான் என்ற திரைப்பிடிப்பு தள நிறுவனத்தை உருவாக்கினர். இதன்பின்னர் பம்பாய் டாக்கீஸ் மெதுவாக மங்கத் துவங்கியது. 1945ஆம் ஆண்டில் தேவிகா இசுவேதோசுலாவ் ரோரிக்கை திருமணம் புரிந்து பெங்களூருவில் வாழத் தொடங்கினார். கனகபுரா சாலையில் அமைந்திருந்த பரந்த டாடாகுனி எஸ்டேட்டில்1994ஆம் ஆண்டில் தமது மறைவு வரை வாழந்திருந்தார். அவரது மறைவிற்குப் பின்னர் இந்த எஸ்டேட்டின் உரிமை குறித்து இந்திய உருசிய அரசுகளிடையேயும் உறவினர்களிடையேயும் பெரும் பிணக்கு ஏற்பட்டு நீதிமன்றம் சென்றனர்.


1958ஆம் ஆண்டில் இந்திய அரசு பத்மசிறீ விருது வழங்கியது. 1969ஆம் ஆண்டு இந்தியத் திரைப்படத்துறையின் மதிப்புமிக்க விருதான தாதாசாகெப் பால்கே விருது நிறுவப்பட்டபோது அதனைப் பெற்ற முதல் கலைஞராக பெருமை பெற்றார். அவரது மறைவின்போது அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்பட்டது.


வெளி இணைப்புகள்

நடிகை தேவிகா ராணி – விக்கிப்பீடியா

Actress Devika Rani – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *