ஹூமா சலீம் குரேசி (Huma Saleem Qureshi) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் மூன்று முறை பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டார்.
குரேசி புது தில்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.இவர் நாடகத் திரைப்படம் மற்றும் வடிவழகியாகவும் பணிபுரிந்தார். பல நாடகத் திரைப்படங்களில் நடித்த பிறகு மும்பை சென்று ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்துடன் இரு ஆண்டுகள் ஒப்பந்தத்தில் தொலைக்காட்சி விளம்பரத்தில் நடித்தார். சாம்சங் செல்லிடத்தொலைபேசி விளம்பரத்தில் நடித்துக்கொண்டிருந்த போது இவரின் திறமையைப் பார்த்த அனுராக் காஷ்யப் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூன்று திரைப்படங்களுக்கு இவரை ஒப்பந்தம் செய்தார்.
குரேசியின் முதல் திரைப்படம் இரு பாகங்களாக வெளிவந்த குற்றத் திரைப்படமான கேங்க்ஸ் ஆஃப் வாசேப்பூர் . இந்தத் திரைப்படத்தில் துணைக் கதாப்பத்திரத்தில் நடித்தார். இதில் இவரின் நடிப்பு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. மேலும் பல விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டார். குறிப்பாக சிறந்த அறிமுகப் பெண்நடிகை விருது மற்றும் சிறந்த பெண் துணைக்கதாப்பாத்திர நடிகைக்கான பிலிம்பேர் விருதுதிற்குப் பரிந்துரை செய்யப்பட்டார். அதன் பின் காதற் திரைப்படங்களான லவ் சுவ் டே சிக்கன் குரானா மற்றும் ஏக் தி தயான் போன்ற திரைப்படங்களில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். 2013 ஆம் ஆண்டில் சார்ட்ஸ் திரைப்படத்தில் படைப்பின் முதன்மை மாந்தராக நடித்தார்.
ஆரம்ப வாழ்க்கை
ஹூமா குரேசி சூலை 28, 1986 இல் புது தில்லி, இந்தியாவில் பிறந்தார். இவர் முஸ்லிம் குடும்பத்தைச் சார்ந்தவர். இவரின் தந்தை சலீம் குரேசி ஒரு உணவகம் நடத்தி வருகிறார், தாய் அமீராகுரேசி காஷ்மீர் மரபைச் சார்ந்தவர்; குடும்பத் தலைவியாக உள்ளார். இவருக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர். அதில் சகிப்சலீம் ஒரு நடிகராக உள்ளார். குரேசி குழந்தையாக இருந்தபோது இவரின் பெற்றோர் தென் தில்லியில் உள்ள கல்காஜி நகரத்திற்கு குடியேறினர். குரேசி புது தில்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின் இவர் ஆக்ட் 1 திரைப்படக் குழுமத்தில் சேர்ந்து சில நாடகத் திரைப்படங்களில் நடித்துள்ளார். என். கே சர்மா இவருக்கு நடிப்பு பற்றிய பயிற்சியை அளித்தார். நடிப்பு பற்றிய சில அடிப்படையானவற்றை இவரிடம் பயின்றார். சில விபரணத் திரைப்படங்களில் உதவியாளராக பணிபுரிந்தார்.
2008 ஆம் ஆண்டில் திரைப்பட கலைக்காணலுக்காக மும்பை சென்றார். நான் ஒருபோதும் மும்பை வந்து திரைப்பட கலைக்காணலில் கலந்துகொள்வேன் என நினைத்ததே இல்லை. எனது தோழிதான் ஜங்சன் திரைப்பட கலைக்காணலில் கலந்துகொள்ள அறிவுறுத்தினார். எதிர்பாராத விதமாக இந்தத் திரைப்படம் படமாக்கப்படவில்லை எனத் தெரிவித்தார். பின் இவர் ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடிக்க இரு வருட ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவர் சில விளம்பரங்களில் வடிவழகியாகவும் நடித்துள்ளார். குறிப்பாக சேம்சங் செல்லிடத் தொலைபேசி விளம்பரத்தில் ஆமிர் கானுடனும், நெரோலக் விளம்பரத்தில் சாருக் கானுடனும், வீட்டா மேரி, சஃபோலா எண்ணெய் மற்றும் பியர்ஸ் சவர்க்கார விளம்பரங்களில் நடித்துள்ளார். சாம்சங் செல்லிடத்தொலைபேசி விளம்பரத்தில் நடித்துக்கொண்டிருந்த போது இவரின் திறமையைப் பார்த்த அனுராக் காஷ்யப் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூன்று திரைப்படங்களுக்கு இவரை ஒப்பந்தம் செய்தார். இதனைப் பற்றிக் கூறும் போது துவக்கத்தில் என்னால் இதனை நம்பவே இயலவில்லை. திரைத்துறையில் இப்படியான சில நிகழ்வுகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் எனக் கூறினார்.