நிக்கோல் எஸ்டெல்லா ஃபரியா (Nicole Estelle Faria, பிறப்பு: 9 பிப்ரவரி, 1990) இந்தியாவின் புகழ்பெற்ற விளம்பர மாதிரியும், திரைப்பட நடிகையும் ஆவார். பெங்களூரில் பிறந்த இவர் உலக அழகியாக 2010 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் கிளீன் அண்ட் கிளியர், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் அழகு சாதனப் பொருட்கள் ஆகியவற்றின் விளம்பரத்தூதர் ஆவார். சுவிட்சர்லாந்து நாட்டின் ஆடம்பரப் பொருட்கள், கைக்கடிகாரங்கள் ஆகியவற்றுக்கான உலக விளம்பரத் தூதுவராக உள்ளார். இவர் எல்லெ, வோக், காஸ்மோபாலிட்டன், ஜகார்த்தா ஃபேஷன் வீக், மேன்ஸ் வொர்ல்ட் மேகசின் உள்ளிட்ட பன்னாட்டு ஆடை அலங்காரம் தொடர்பான இதழ்களில் அட்டைப்படங்களில் இடம்பெற்றுள்ளார். 2014 ஆம் ஆண்டிற்கான கிங் ஃபிஷர் மாத நாட்காட்டியில் இவரது படங்கள் இடம்பெற்றன. மேற்கு வாங்காளம், கொல்கத்தாவில் இரபீந்திர சரோவர் ஏரியில் மாசுகளினால் ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் குறிப்பிட்ட பங்களிப்பை வழங்கினார்.
2018 ஜனவரியில் இவர் முதன்முதலாக ஓர் இந்தியராக உலக அழகிப் பட்டம் 2010 வென்றமைக்காக இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தால் விருது வழங்கப் பெற்றார். இந்தியாவின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மேற்கொண்ட விரிவான ஆய்வுக்குப் பின்னர், அவர்களின் சாதனைக்காக இந்தியாவின் 112 பெண்கள் நாட்டின் முதல் பெண்கள் எனக் கௌரவிக்கப்பட்டனர். அவர்களில் நிக்கோல் ஃபரியாவும் ஒருவராவார்.
தொழில்
நிக்கோல் ஃபரியா தனது 15 ஆம் வயதில் ஆடை அலங்காரத் துறையில் நுழைந்தார். டில்லி, மும்பை, கொழும்பு, இலங்கை ஆகிய இடங்களில் இத்துறையில் பணிபுரிந்தார். உலக அழகிப் போட்டியாளர் என்பதால் பாலிவுட் திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்புகள் வந்தடைந்தன.
ஒரு பேட்டியில் மிஸ் எர்த் பட்டம் வென்றபின் உங்கள் வாழ்க்கை எவ்வாறு மாறியுள்ளது என்ற கேள்விக்கு “எனது வாழ்க்கை நிறைய மாறிவிட்டது. வெற்றிக்குப் பின் எனக்கு நல்ல வேலை கிடைத்தது. மேலும் மேலும் நான் பணிசெய்துகொண்டே இருக்கிறேன். புதிய சூழல், புதிய மக்களைச் சந்தித்து வருகிறேன். உலகெங்கும் பயணித்து புதிய இடங்களைக் காண்கிறேன். பல்வேறு பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் சுவையை அனுபவிக்கிறேன். மிகவும் திருப்தியாக உணர்கிறேன்.” என அவர் பதிலளித்தார்.
எல்லெ, வோக், காஸ்மோபாலிட்டன், உள்ளிட்ட பன்னாட்டு ஆடை அலங்காரம் தொடர்பான இதழ்கள் இவரைப் படம்பிடித்துள்ளன. லக்மே காஸ்மெடிக், வில்ஸ் லைஃப்ஸ்டைல் இண்டியா ஃபேஷன் வீக், கொழும்பு ஃபேஷன் வீக் ஆகிய நிறுவனங்களின் வெளியீட்டு விழா அலங்கார நடை மேடைகளில் மாதிரியாக நடைபயின்றுள்ளார். நவம்பர் 2010 இல் மடிக்கணினி நிறுவனமொன்றின் தொலைக்காட்சி விளம்பரத்திற்காக ஃபரியாவின் படங்கள் பயன்படுத்தப்பட்டன.