பூனம் தில்லான் (Poonam Dhillon) ஏப்ரல் 18, 1962இல் பிறந்த இந்திய நடிகை ஆவார். இவர் இந்தி திரைப்படங்கள், நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். தில்லான் 1977இல் “ஃபெமினா மிஸ் இந்தியா” பட்டம் பெற்றவர். இவர் 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 1979இல் வெளிவந்த நூரி, ராஜேஷ் கன்னாவுடன் நடித்த ரெட் ரோஸ்(1980), டார்ட் (1981), நிஷான் (1983), ஜமனா (1985), ஆவம் (1987) திரைப்படங்களின் மூலமாக நன்கு அறியப்படுகிறார். மேலும் இவர் ஜெய் சிவ் சங்கர் (1990), ரொமான்ஸ் (1983), சோஹ்னி மகிவால் (1984), தேரி மெகர்பானியன் (1985), சமுந்தர் (1986), சவேராய் வாலி காடி (1986), கர்மா (1986) நாம் (1986), மாலம்மால் (1988) போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
பூனம் தில்லான், 2009இல் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார். மற்றும் 2013இல், சோனி தொலைக்காட்சியின் ஈக் நயி பெஹ்ச்சான் தொடரில் ஷ்ரதா மோடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தொழில்
மிஸ் யங் இந்தியாவாக 1978 ஆம் ஆண்டில் தனது 16 வயதில் முடிசூட்டப்பட்டபோது முதன்முறையாக தில்லான் புகழ் பெற்றார். இயக்குனர் யஷ் சோப்ரா இவரை கவனித்து திரிசூல் என்ற படத்தில் ஒரு வாய்ப்பு வழங்கினார். இப்படத்தில் இடம் பெற்ற கபூச்சி கபூச்சி கம் கம் என்ற பாடலுக்கு நடிகர் சச்சினுடன் நடனமாடினார். சோப்ரா தயாரிப்பில் பின்னர் நூரி (1979) திரைப்படத்தில் நடித்தார். இதற்காக, தில்லானுக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பரிந்துரைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர் ஹிந்தி மொழியில் 90 திரைப்படங்களை செய்தார். நடிகர் ராஜேஷ் கன்னாவுக்கு இணையாக பல படங்களில் நடித்துள்ளார். தில்லான் நடமாடும் ஒப்பனை வாகன தொழிலை ஆரம்பித்தர், இது இந்தியத் திரையுலகில் எவரும் செய்யாத ஒன்றாகும். தனது ஒப்பனை நிறுவனத்திற்கு வானிட்டி எனப் பெயரிட்டார்.
தில்லான் ஒரு கல்வியாளர் குடும்பத்தில் இருந்து வந்தார். அவரது தந்தை ஒரு வானூர்தி பொறியியலாளராக இருந்தார், அவரின் தாய் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தார், மேலும் அவரது இரண்டு உடன்பிறப்புகளும் மருத்துவர்கள் ஆவார்கள். பூனம் தனது 16 வது வயதில் திரைப்ப்டங்களில் தோன்ற ஆரம்பித்த பிறகு பட்டம் பெற்றார். தற்போது அவர் சர்வதேச வர்த்தகத்தில் முதுநிலை வணிக நிர்வாகம் செய்து வருகிறார். மருந்து விழிப்புணர்வு, எய்ட்ஸ் விழிப்புணர்வு, குடும்ப திட்டமிடல் மற்றும் உறுப்பு தானம் போன்ற சமூக காரணிகளால் அவர் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். காத்மாண்டு மற்றும் தில்லி சார்க் வணிக உச்சி மாநாட்டில் முக்கிய பேச்சாளராகவும் இருந்துள்ளார், மேலும் அவர் கலாச்சார தூதுவராக நியமிக்கப்பட்டார். அவர் மைன்ட்மைன் நிகழ்ச்சியில் ஒரு பேச்சாளராக இருந்தார்.
சமீபத்தில் அவர் பொயடிக் ஜஸ்டிஸ் பிலிம்ஸ் பிரைவேட் லிமிட்டெட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நிறுவியுள்ளார்.