பிராச்சி தேசாய் (Prachi Desai) (பிறப்பு:செப்டம்பர் 12 , 1988). இவர் இந்திய பாலிவுட் திரைப்பட மற்றும் முன்னாள் தொலைக்காட்சி நடிகையாவார். ஜீ தொலைக்காட்சியில் வெற்றிகரமான ஒளிபரப்பான கஸ்ஸாம் சே நாடகத்தில் முன்னணி கதாநாயகியாக தனது தொலைக்காட்சி வாழ்க்கையைத் தொடங்கினார். 2008 ஆம் ஆண்டு வெளியான “ராக் ஆன்!!” படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மும்பை (2010), “பொல் பச்சன்” (2012) மற்றும் “ஐ, மீ அவுர் மெயின்” (2013). போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை. அவர் கோவா மாநிலத்தின் சுற்றுலாத்துறை மற்றும் நியுட்ரோஜெனா போன்றவற்றின் தயாரிப்புகளின் விளம்பரதாரர், செய்தித் தொடர்பாளர், மற்றும் ஆதரவளாராவர். தேசாய் லக்ஸ் இன்டஸ்ட்ரீஸின் லக்ஸ் லைராவின் விளம்பரத் தூதர் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி
நிரஞ்சன் தேசாய் மற்றும் அமீதா தேசாய் ஆகியோருக்கு மகளாக குசராத்து மாநிலம் சூரத்துவில் பிறந்தார். இவருக்கு ஈஷ தேசாய் என்ற ஒரு சகோதரி உண்டு. புனித சூசையப்பர் பள்ளியில் ஆரம்பக் கல்வியை பயின்றார், சூரத்திலுள்ள பாஞ்ச்கனியில் பின்னர் ஒன்பதாவது வகுப்பு வரை பயின்றார். பூனாவில் உள்ள சிங்காட் கல்லூரியில் தனது உயர்நிலைப் படிப்பை முடித்தார்.
தொழில்
2006 இல், தேசாய் ஏக்தா கபூரின் “கசாம் சே” என்ற தொலைக்காட்சி நாடகத்தில் நடிகர் ராம் கபூருக்கு இணையாக பானி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். இது சிறந்த நடிகைக்கான இந்திய டெலி விருது உட்பட பல விருதுகளை வென்றது. 2007 செப்டெம்பர் 7 ஆம் தேதி நடன இயக்குனரான தீபக் சிங்கின் மூலம் பிபிசியின் ஸ்ட்ரிக்லி கம் டேன்சிங் இன் இந்திய பதிப்பு ஜாலாக் டிக்லா ஜா மூலம் நுழைந்தார். ஆனால் தேசாய் 2007 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி நீக்கப்பட்டார், ஆனால் அந்த போட்டியில் சிறப்பு நுழைவு வழியாக மீண்டும் போட்டியிட்டு இறுதியில் போட்டியை வென்றார். தேசாய்க்கு ஜாலாக் டிக்லா ஜா என்ற நடன நட்சத்திர விருது வழங்கப்பட்டது. இவர் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சி தொடரான “கஸாதி ஜிண்டகி கி” என்ற நாடகத்தில் இரண்டு காட்சிகளில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றினார். பிரேனா என்ற பள்ளியில் ஒரு மாணவராக நடித்தார்.
அபிஷேக் கபூர் இயக்கத்தில் பர்கான் அக்தாருக்கு இணையாக ராக் ஆன் !! (2008) என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தேசாய் நுழைந்தார். இவரது அடுத்த படம் “லைப் பார்ட்னர் (2009). ஜூலை 2010இல் அஜய் தேவ்கான், இம்ரான் ஹாஷ்மி மற்றும் கங்கனா ரனாத் போன்றவர்கள் நடித்திருந்த ஒன்ஸ் அபான் அ டைம் இன் மும்பை” படத்தில் நடிதுள்ளார்.
2012இல் “தேரி மேரி கஹானி” என்ற படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். அபிஷேக் பச்சன், அஜய் தேவ்கான் மற்றும் அசின் (நடிகை) போன்றோருடன் ” போல் பச்சான் ” என்ற படத்தில் முன்னணி பாத்திரத்தில் தேசாய் நடித்திருந்தார். இத்திரைப்படம் தேசாய்க்கு மிகப் பெரிய வெற்றியை தேடித்தந்தது. ஜான் ஆபிரகாம் மற்றும் சித்ராங்கதா சிங் ஆகியோருடன் சேர்ந்து “ஐ, மி அவுர் மெயின்” (2013) இவரது அடுத்த படமாகும் சஞ்சய் தத்துடன் “போலிஸ் கேர்ல்” இவரது மற்றொரு படம். 2014இல், “ஏக் வில்லன்” என்ற படத்தில் வரும் “ஆவாரி” என்ற பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். 2016இல், முன்னாள் முகமது அசாருதீனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அவரது மனைவி நௌரினாக நடித்துள்ளார். மீண்டும் பர்கான் அக்தாரின் மனைவியாக “ராக் ஆன் 2” , படத்தில் நடித்தார். இது “ராக் ஒன்!!” படத்தின் தொடர்ச்சியாக 2016 நவம்பர் 14 அன்று வெளிவந்தது.