ரண்பிர்ராஜ் “ராஜ்” கபூர் (இந்தி: राज कपूर,உருது: راج کپُور 1924வது ஆண்டு டிசம்பர் 14 அன்று பிறந்த ராஜ் கபுர், “பெரும் காட்சியாளர் ” (தி ஷோ மேன்) என்றும் அறியப்பட்ட ஒரு இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் இந்தித் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார்.
இவர் எட்டு ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றவர்; அவரது படங்களான ஆவாரா (1951) மற்றும் பூட் பாலிஷ் (1954) கேன்ஸ் திரைப்படத் திருவிழாவில் பால்மே டியோர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டன.
ஆரம்ப வாழ்க்கையும் பின்புலமும்
தற்போதைய பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு எல்லை மாநிலமான பெஷாவரில் ராஜ் கபூர் பிறந்தார். இவரது தந்தை நடிகர் பிரிதிவிராஜ் கபூர் மற்றும் தாயார் ராம்சரணி (ரமா) தேவி கபூர் (நீ மெஹ்ரா). ஆறு குழந்தைகள் கொண்ட கத்ரி ஹிந்த்கோ பேசும் குடும்பத்தில் இவர்தான் மூத்த பிள்ளை. இவர் புகழ் பெற்ற கபூர் குடும்ப அங்கமான திவான் பாஷேஸ்வர்நாத் கபூரின் பேரன் மற்றும் திவான் கேஷவ்மல் கபூரின் கொள்ளுப் பேரனாவார். நடிகர்களான ஷம்மி கபூர் மற்றும் சஷி கபூர் ஆகியோர் ராஜின் இளைய சகோதரர்கள். இவருக்கு ஊர்மிலா சியால் என்று ஒரு சகோதரியும் உண்டு. இவரது இளைய சகோதரர்கள் இருவர் நடை பழகும் இளஞ்சிறார் பருவத்திலேயே இறந்து விட்டனர்.
தொழில் வாழ்க்கை
ராஜ் கபூர் ஒரு படப்பிடிப்புத் தளத்தில் கிதார் ஷர்மாவுக்கு உதவியாளராக கட்டை தட்டும் பையன் பணியுடன் தன் தொழிலைத் தொடங்கினார். தனது பதினோராவது வயதில், முதன் முதலாக 1935வது வருடத்திய இங்க்விலாப் என்னும் திரைப்படத்தில் தோன்றினார். அடுத்த 12 வருடங்களுக்குப் பல படங்களில் நடித்த ராஜ் கபூருக்கு மிகப் பெரும் அளவில் மடைதிறந்த வாய்ப்பாக நீல் கமல் (1947) என்னும் திரைப்படத்தில் அவர் ஏற்ற முன்னணிக் கதாபாத்திரம் அமைந்தது. இதில் அவருக்கு ஜோடியாக நடித்த மதுபாலா முதன் முதலாகக் கதாநாயகி வேடம் ஏற்றிருந்தார். 1948வது வருடம், தமது 24வது வயதில் அவர் ஆர்.கே.ஃபிலிம்ஸ் என்னும் பெயரில் தனது சொந்த படப்பிடிப்புத் தளத்தை நிறுவி, தனது சமகாலத்தில் மிக இளைய திரைப்பட இயக்குனரானார். ஒரு தயாரிப்பாளராக, இயக்குனராக மற்றும் நட்சத்திரமாக முப்பெரும் பணிகளையும் அவர் புரிந்த முதல் படம் 1948வது வருடத்திய ஆக் அவருடன் நர்கிஸ் நடித்த பல படங்களுக்கு இதுவே துவக்கமாக இருந்தது. இருப்பினும், இத் திரைப்படம் வசூலில் தோல்வி அடைந்தது.
1949வது வருடம் மெஹபூப் கான் தயாரித்த காவிய வெற்றிப்படமான அந்தாஜ் திரைப்படத்தில் மீண்டும் நர்கிஸ் மற்றும் திலீப் குமார் ஆகியோருடன் நடித்தார். இதுவே ஒரு நடிகராக அவருக்கு பெரும் வெற்றி ஈட்டித் தந்த முதல் படம்.
தொடர்ந்து, பர்சாத் (1949), ஆவாரா (1951) ஸ்ரீ 420 (1955), சோரி சோரி (1956) மற்றும் ஜிஸ் தேஷ் மே கங்கா பெஹதி ஹை (1960) போன்ற பல வெற்றிப் படங்களை அவர் தயாரித்து இயக்கி அவற்றில் நடிக்கலானார். சார்லி சாப்ளின் உருவாக்கிய மிகப் பிரபல திரையுருவான வேலையற்ற நாடோடி போன்ற ஒரு திரைப் பிம்பத்தை இத்திரைப்படங்கள் அவருக்கு நிலை நாட்டின. 1964வது வருடம் அவர் தயாரித்து, இயக்கி நடித்த சங்கம் அவரது முதல் வண்ணப்படம். ஒரு முன்னணிக் கதாநாயனாக பெரும் வெற்றியை அவர் ஈட்டியதும் இந்தத் திரைப்படத்தில்தான். 1970வது வருடம் அவர் தனது லட்சியப் படமான மேரா நாம் ஜோக்கர் (நான் ஒரு கோமாளி) என்னும் படத்தை இயக்கி நடித்தார். இத்திரைப்படம் முடிவடைய ஆறு வருடங்களுக்கு மேலாகியது. 1970வது வருடம் அது திரையிடப்பட்டபோது, வசூலில் பெரும் தோல்வியடைந்து அவரை நிதி நெருக்கடிகளுக்கு உள்ளாக்கியது இவ்வாறு பின்னடைவு ஏற்படினும், இதையே தனது விருப்பமான திரைப்படமாக ராஜ் கருதினார்.
இதிலிருந்து மீண்டு 1971வது வருடம் தனது மூத்த மகனான ரந்தீர் கபூர், ஒரு நடிகர் மற்றும் இயக்குனராக அறிமுகமான கல் ஆஜ் ஔர் கல் (1971) என்னும் திரைப்படத்தில் அவருடன் ராஜ் கபூர் நடித்தார். இதில் அவரது தந்தையார் பிரிதிவி ராஜ் கபூர் மற்றும் பின்னாளில் ரந்தீர் கபூரை மணந்த பபிதா ஆகியோரும் நடித்திருந்தனர். அதன் பிறகு அவர் திரைப்படங்களில் குணசித்திரக் கதாபாத்திரங்களில் நடிக்கலானார். திரைப்படங்களைத் தயாரிப்பதிலும் இயக்குவதிலும் கவனம் செலுத்தலானார். பாபி (1973) என்னும் திரைப்படத்தை தயாரித்து இயக்கி ரிஷி கபூர் என்னும் தனது இரண்டாவது மகனின் தொழில் வாழ்க்கையைத் துவக்கி வைத்தார். இது மிகப் பெரிய வெற்றி அடைந்தது மட்டும் அல்லாமல் பின்னாளில் மிகவும் பிரபல நடிகையாக விளங்கிய டிம்பிள் கபாடியா இதில்தான் அறிமுகமானார். மேலும், பதின்வயதினர் காதலைச் சித்தரித்த புதிய தலைமுறைக்கான முதல் படமாகவும் இது விளங்கியது. இந்தப் படத்தில் டிம்பிள் அணிந்த மிகக் குறுகலான நீச்சலுடை அந்த நாளைய இந்தியத் திரைப்படங்களில் மிகவும் தனித்தன்மையுடன் விளங்கியது.
1970களின் பிற்பகுதிகளிலும் 1980களின் முற்பகுதிகளிலும் பெண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட பல திரைப்படங்களை அவர் தயாரித்து இயக்கினார்: ஜீனத் அமன் நடித்த சத்யம் ஷிவம் சுந்தரம் (1978), பத்மினி கோலாபுரெ நடித்த பிரேம் ரோக் (1982), மற்றும் மந்தாகினி அறிமுகமான ராம் தேரி கங்கா மைலி (1985).
ராஜ் கபூர் முக்கியமான ஒரு வேடத்தில் கடைசியாகத் தோன்றியது வக்கீல் பாபு (1982) என்னும் திரைப்படத்தில்தான். கிம் என்று பெயரிடப்பட்டு 1984வது ஆண்டு வெளியான பிரிட்டிஷ் தொலைக்காட்சிக்காகவே தயாரிக்கப்பட்ட ஒரு படத்தில் அவர் கௌரவ வேடம் ஏற்றிருந்தார். இதுவே இவர் இறுதியாக நடித்த வேடம்.
மரணம்
தனது இறுதி ஆண்டுகளில் ராஜ் கபூர் ஆஸ்த்மா நோயால் அவதியுற்றார்; ஆஸ்த்மா தொடர்பான சிக்கல்களால் அவர் 1988வது வருடம் தனது அறுபத்து மூன்றாவது வயதிலேயே மரணமடைந்தார். அவர் இறக்கும்போது ஹென்னா (ஒரு இந்திய-பாகிஸ்தானி காதல் கதை) என்ற ஒரு திரைப்படம் தொடர்பாகப் பணி புரிந்து கொண்டிருந்தார். பிறகு இந்தத் திரைப்படம் அவரது மகன் ரந்தீர் கபூரால் முடிக்கப்பட்டு 1991வது வருடம் திரையிடப்பட்டு மிகப் பெரும் வெற்றியடைந்தது.
மரபுரிமைச் செல்வம்
திரைப்பட விமர்சகர்கள் மற்றும் சாதாரண திரைப்பட விசிறிகள் ஆகிய இரு தரப்பினராலும் ராஜ் கபூர் பாராட்டப்படுகிறார். இந்திய சினிமாவின் சார்லி சாப்ளின் என்றே திரைவரலாற்றாசிரியர்கள் மற்றும் திரை ரசிகர்கள் இவரைக் குறிப்பிடுகின்றனர்; “காரணம், இவர் பாதகமான நேரங்களிலும் உற்சாகமும் நேர்மையும் கொண்டிருக்கும் ஒரு வேலையற்ற நாடோடி பாத்திரத்தைப் பல முறை சித்தரித்தார். இவரது புகழ் உலகெங்கும் பரவியது. ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா, முந்தைய சோவியத் யூனியன், சீனா மற்றும் தென் கிழக்கு ஆசியா போன்ற நாடுகளின் பெரும் பகுதிகளில் பார்வையாளர்களால் இவர் போற்றப்பட்டார்; இவரது திரைப்படங்கள் உலகார்ந்த அளவில் வணிக ரீதியாக வெற்றியடைந்தன.
ராஜ் கபூரின் அநேகப் படங்கள் தேசியப் பற்றைக் கருத்தாகக் கொண்டிருந்தன. அவரது படங்களான ஆக் , ஸ்ரீ 420 மற்றும் ஜிஸ் தேஷ் மே கங்கா பெஹதி ஹை (எந்த நாட்டில் கங்கை ஓடுகிறதோ ) ஆகியவை புதிதாகச் சுதந்திரம் அடைந்திருந்த இந்தியாவைக் கொண்டாடி, திரைப்பட ரசிகர்களின் நாட்டுப் பற்றை ஊக்குவிப்பதாக அமைந்தன. “மேரா ஜூத்தா ஹை ஜப்பானி” என்று துவங்கும் புகழ் பெற்ற இந்தப் பாடல் வரிகளை ஸ்ரீ 420 என்னும் திரைப்படத்தின் பாடலுக்காக ராஜ் கபூர் செயற்படுத்தினார்:
மேரா ஜூத்தா ஹை ஜப்பானி
ஏ பட்லூன் இங்க்லீஷ்தானி
சர் பே லால் டோபி ரூசி
ஃபிர் பீ தில் ஹை ஹிந்துஸ்தானி ‘
என் செருப்பு ஜப்பான் நாட்டிலானது
கால் சட்டை ஆங்கில நாட்டுடையது
இந்த சிவப்புத் தொப்பி ரஷ்ய நாட்டினுடையது
ஆனால், மனமோ இந்தியாவுக்கானது.’
இந்தப் பாட்டு மிகவும் பிரபலம் அடைந்து, ஸ்ரீ 420 வெளியான பிறகு பல படங்களிலும் கையாளப்பட்டுள்ளது. 2006வது வருடம் ஃபிராங்க்ஃபர்ட் புத்தகக் கண்காட்சியில் தனது துவக்கவுரையை நிகழ்த்திய மஹேஸ்வேதா தேவி, தனது மனங்கனிந்த நாடுப்பற்றையும், தமது நாட்டுக்கு தாம் செலுத்த வேண்டிய கடனையும் வெளிப்படுத்தும் வண்ணம், இந்த பாடல் வரிகளுடன் தன் உரையை முடித்துக் கொண்டார்.
ராஜ் கபூர் திரைப்பட இசை மற்றும் பாடல் வரிகளை இனங்காணும் ஒரு கூர்மதியாளராக விளங்கினார். அவர் கையாண்ட பல பாடல்கள் எந்தக் காலத்திற்குமானவையாக விளங்குகின்றன. இசை இயக்குனர்களான ஷங்கர் ஜெய்கிஷன் மற்றும் பாடலாசிரியர் ஹஸ்ரத் ஜெய்புரி ஆகியோரை அவர் அறிமுகம் செய்தார். தமது மிக அற்புதமான காட்சியமைப்பு பாணிக்காகவும் அவர் நினைவு கூரப்படுகிறார். அவர் மிக அற்புதமான பார்வை உருவாக்கங்களையும், நுட்பமான படப்பிடிப்புத் தளங்களையும், இசையினால் உருவாகும் மன நிலையை ஒத்துச் செல்லும் உணர்வு பூர்வமான ஒளியமைப்புகளையும் பயன்படுத்தினார். இவர் நிம்மி, டிம்பிள் கபாடியா மற்றும் மந்தாகினி போன்ற நடிகைகளை அறிமுகம் செய்தார்; தனது மகன்களான ரிஷி மற்றும் ராஜிவ் ஆகியோரின் தொழில் வாழ்க்கையை அறிமுகம் செய்ததோடு மட்டுமன்றி அவற்றை மீட்டெடுக்கவும் செய்தார்.
ராஜ் கபூர் பாலிவுட்டின் மிகப் பெரும் நடிகராக விளங்கினார்.
சொந்த வாழ்க்கை
கபூர் குடும்பம் தற்போதைய பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் தற்சமயம் ஃபைஸலாபாத் என்று அழைக்கப்படும் லயல்லபுரைச் சார்ந்தது.
1946வது வருடம் குடும்பத்தாரால் நிச்சயிக்கப்பட்டு, பாராம்பரிய முறையில் ஜபல்பூர் வாசியான கிருஷ்ணா மல்ஹோத்ராவை ராஜ்கபூர் மணந்தார். கிருஷ்ணா அவருக்கு தூரத்து உறவினர்தான்; அதாவது அவரது தந்தையின் தாய் மாமன் மகள். கிருஷ்ணாவின் சகோதரர்கள் பிரேம் நாத் மற்றும் ராஜேந்திர் நாத் ஆகியோரும் நடிகர்களே. ராஜ் கபூர்-கிருஷ்ணா தம்பதியின் மூத்த மகன் ரந்தீர் கபூர் 1947வது வருடம் பிறந்தார்; தொடர்ந்து அடுத்த வருடமான 1948வது வருடமே அவர்களது மூத்த மகள் ரிது பிறந்தார். இரண்டாவது மகன் ரிஷி கபூர் 1952வது வருடமும் இரண்டாவது மகள் ரீமா கபூர் 1956வது வருடமும் பிறந்தனர். இவர்களது கடைசி மகன் ராஜிவ் கபூர் 1962வது வருடம் பிறந்தார். ரந்தீர் கபூர், ரிஷி கபூர் மற்றும் ராஜிவ் கபூர் ஆகிய அனைவருமே நடிகர்களாக இயக்குனர்களாக அல்லது தயாரிப்பாளர்களாக பாலிவுட்டுடன் தொடர்பிலேயே இருநது வருகின்றனர்.
1950களில் புகழ் பெற்ற நடிகையாக விளங்கிய நர்கிஸுடன் நீண்ட காலத்திற்கான காதல் உறவைக் கொண்டிருந்ததாகவும் ராஜ் கபூர் அறியப்பட்டார். இந்த ஜோடி ஆவாரா , ஸ்ரீ 420 உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்தது. சங்கம் திரைப்படத்தில் உடன் நடித்த வைஜயந்தி மாலாவுடனும் அவர் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.
கபூரின் பேரப் பிள்ளைகளில் மூவர் தற்போது பாலிவுட் திரையுலகில் நட்சத்திரங்களாக உள்ளனர். இவரது பேத்திகளான கரிஷ்மா கபூர் மற்றும் கரீனா கபூர் ஆகியோர் நடிகைகளாக உள்ளனர். இவர்கள் ராஜ் கபூரின் மகன் ரந்தீர் கபூர் மற்றும் ரந்தீர் கபூரின் முன்னாள் மனைவி பபிதா ஆகியோரின் புதல்விகள். இவரது பேரனான நடிகர் ரன்பீர் கபூர், இவரது மகன் ரிஷி கபூர் மற்றும் அவரது மனைவி நீது சிங் ஆகியோரின் புதல்வர்.
== பிற கலைஞர்களுடன் இணக்கம் ==
ஷங்கர்-ஜெய்கிஷன்
ஷங்கர்-ஜெய்கிஷன் இவருக்கு விருப்பமான இசை இயக்குனர்கள். இவர்களுடன் அவர் பர்சாத் துவங்கி கல் ஆஜ் ஔர் கல் வரையிலான 20 திரைப்படங்களில் பணி புரிந்தார். இவற்றில் அவரது 10 சொந்தப் படங்களும் அடங்கும். (இந்தக் கால கட்டத்திற்கான இரண்டு விதி விலக்குகள் சலீல் சௌத்ரியுடன் பணிபுரிந்த ஜாக்தே ரஹோ மற்றும் அப் தில்லி தூர் நஹின்] ) ஜெய்கிஷன் மரணத்திற்குப் பிறகுதான் அவர் வேறு இசை இயக்குனரை – லக்ஷிமிகாந்த்-பியாரேலால்- தனது பாபி திரைப்படத்திற்காக நாடினார்.
ஷங்கர் ஜெய்கிஷனுடனான திரைப்படங்களின் பட்டியல்: (18 திரைப்படங்கள்)
நர்கிஸ்
முகேஷ்
அநேகமாக ராஜ்கபூரின் எல்லாப் படங்களிலும் அவருக்கே உரித்தான அவரது பாடும் குரலாகவே இருந்தவர் முகேஷ். இருப்பினும் மன்னா டே பல குறிப்பிடத்தக்க மற்றும் மிகவும் பிரபலமான பாடல்களை, உதாரணமாக ஸ்ரீ 420 மற்றும் சோரி சோரி ஆகிய திரைப்படங்களில், ராஜ் கபூருக்காகப் பாடியுள்ளார். கீழ்க்காணும் பாடல்கள் அத்தகைய பாடல்களின் உதாரணங்கள்:
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
ராஜ் கபூர் பெற்ற விருதுகளும் பரிந்துரைப்புகளும்
ராஜ் கபூர் 21க்கும் மேலான ஃபிலிம்ஃபேர் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டு அவற்றில் 12 விருதுகளை வென்றார்.
தாதாசாகெப் பால்கே விருது
இந்திய சினிமாவுக்கு தம் வாழ்நாளில் அளித்த பங்களிப்பிற்காக ராஜ் கபூர் 1987வது ஆண்டு 35வது தாதாசாகெப் பால்கே விருது வழங்கப் பெற்றார்.