மது பாலகிருஷ்ணன் (சூன் 24, 1974) மலையாளம் , தமிழ், தெலுங்கு , கன்னடம் ஆகிய மொழிகளில் பாடியுள்ள ஓர் இந்தியத் திரைப்படப் பாடகர்.
வாழ்க்கை வரலாறு
மது பாலகிருஷ்ணன் கேரளத்தைச் சேர்ந்த கொச்சி மாமன்னரின் தலைநகராகத் திகழ்ந்த திருப்புனித்துறையில் பிறந்தவர். சென்னையில் உள்ள இந்திய இசை மற்றும் கலை அகாடமியில் இசையில் பட்டம் பெற்று அனைத்திந்திய வானொலி மற்றும் தூர்தர்சனில் தரபடுத்தப்பட்ட கலைஞராக பணியாற்றி யுள்ளார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும் மாதவன் என்ற மகனும் உள்ளனர். துடுப்பாட்ட வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் இவரது மனைவியின் தமையனாவார்.
சிறுவயதில் ஸ்ரீதேவி மற்றும் சந்திரமனா நாரயணன் நம்பூதிரியிடம் கருநாடக இசை பயிற்சியைத் துவக்கிய மது சென்னையில் டி.வி.கோபாலகிருஷ்ணன், மணி கிருஷ்ணசாமி மற்றும் வேதவல்லி ஆகியோரிடம் மேற்பயிற்சி பெற்றுள்ளார்.
இசைப்பயணம்
2002ஆம் ஆண்டு “வால்கண்ணாடி” என்ற மலையாளத் திரைப்படத்தில் இவரது “அம்மே அம்மே” என்ற பாடலுக்கு கேரள அரசு மாநில விருது கிடைத்தப்பிறகு புகழ் பெறத் துவங்கினார். இதனைத் தொடர்ந்து 90 மலையாளம், 65 கன்னடம், 45 தெலுங்கு மற்றும் 65 தமிழ் திரைப்படப் பாடல்களை பாடியுள்ளார். சமய வழிபாட்டுப் பாடல்கள் மற்றும் பிற திரையிசை தவிர்த்த பாடல்கள் கூடுதல் எண்ணிக்கையில் பாடியுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்கன சில :
2010ஆம் ஆண்டு இளையராஜா இசையில் நான் கடவுள் திரைப்படத்திற்காக இவர் பாடிய “பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்” என்ற பாட்டு மிர்ச்சி இசை விருது பெற்றுள்ளது. இளையராஜாவின் “திருவாசகம்” இசைக்கோப்பிலும் பாடியுள்ளார்.