மலேசியா வாசுதேவன் (சூன் 15, 1944 – பெப்ரவரி 20, 2011) ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பாடகரும் நடிகரும் ஆவார். எட்டாயிரத்திற்கும் அதிகமான தமிழ்த் திரைப்பாடல்களைப் பாடியவர்.
வாழ்க்கைக் குறிப்பு
கேரளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மலேசியாவைச் சேர்ந்த சத்து நாயர் – அம்மாளு தம்பதியருக்கு எட்டாவது மகனாகப் பிறந்தார் வாசுதேவன். மலேசியாவில் தமிழர் இசைக் குழு ஒன்றில் முக்கிய பாடகராக விளங்கினார்
மலேசியாவில் பல நாடகங்களில் நடித்த அனுபவத்தை நம்பிக்கையாகக் கொண்டு சென்னை வந்தார். திரைப்பட வாய்ப்புகளைத் தேடினார். மலேசியத் தமிழர்கள் கூட்டாகத் தயாரித்த “இரத்தப் பேய்” என்ற தமிழ்ப் படத்தில் முதல் முறையாக நடிகனாக அறிமுகமானார். 1970களில் விளம்பர நிறுவனங்களுக்காக 45 ஆவணப் படங்களில் நடித்துள்ளார். இளையராஜாவின் “பாவலர் பிரதர்ஸ்” குழுவில் பல மேடைக் கச்சேரிகளில் பாடி வந்தார்.
குடும்பம்
மலேசியா வாசுதேவன் அன்னப்பூரணி (உஷா வாசுதேவன்) ௭ன்ற பெண்ணை 26 சனவரி மாதம் 1976-இல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மூன்று பிள்ளைகள்: யுகேந்திரன், பிரசாந்தினி மற்றும் பவித்ரா. இவருடைய மகன் தமிழ்த் திரைப் படங்களிலும் மற்ற மொழி திரைப் படங்களிலும் நடித்துள்ளார். மேலும் பின்னணிப் பாடகராகவும் திகழ்கிறார். இவருடைய மகள் பிரசாந்தினி ஒரு பின்னணிப் பாடகி. வாரணம் ஆயிரம், ஆடுகளம் போன்ற பல திரைப் படங்களில் பாடல் பாடியுள்ளார்.
பின்னணிப் பாடகராக
ஜி. கே. வெங்கடேசு இசையமைப்பில் “பொல்லாத உலகில் ஒரு போராட்டம்” என்ற படத்தில் பாலு விக்கிற பத்தம்மா… என்ற பாடல் மூலம் திரையுலகில் பாடகராக அறிமுகமானார். பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில் கமல்ஹாசனுக்காக “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு…” என்ற அவர் பாடிய பாடல் பெரும் புகழ் பெற்றது.
அதன் பிறகு ஏராளமான படங்களில் புகழ்பெற்ற பாடல்களைப் பாடினார். கோடைகாலக் காற்றே, அள்ளித் தந்த பூமி, அடியாடு பூங்கொடியே, தங்கச் சங்கிலி எனப் பல பாடல்கள் புகழ் பெற்றன.
நடிகராக
ஒரு கைதியின் டைரி படத்தில் வில்லனாக நடித்தார். அதன் பின்னர் பல படங்களில் நடிக்கவும் தொடங்கினார். 85 திரைப்படங்களில் நடித்துள்ளார். முதல் வசந்தம், ஊர்க்காவலன், ஜல்லிக்கட்டு என வெற்றிப் படங்கள் பலவற்றில் வில்லனாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் “சிலந்தி வலை” உட்பட ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.
ஆனந்த் என்பவர் இயக்கிய “மலர்களிலே அவள் மல்லிகை” என்ற படத்திற்கு கதை, வசனம் எழுதியிருக்கிறார்.
இசையமைப்பாளராக
மலேசியா வாசுதேவன் ௭ண்பதுகளில் ஒரு சில தமிழ்த் திரைப் படங்களுக்கு இசையமைத்து உள்ளார். குறிப்பாக சாமந்தி பூ, பாக்கு வெத்தலை மற்றும் ஆயிரம் கைகள் போன்ற திரைப் படங்களுக்கு இசையமைத்தார்.
விருதுகள்
தமிழக அரசின் கலைமாமணி விருது இவருக்குக் கிடைத்தது.
மறைவு
சில ஆண்டுகளாகப் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட வாசுதேவன் 2011 பெப்ரவரி 20 ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணிக்கு காலமானார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
இவர் நடித்த சில திரைப்படங்கள்
இசையமைத்த திரைப்படங்கள்
நடித்த திரைப்படங்கள்
2007 | பிறகு |
---|---|
2007 | நினைத்து நினைத்து பார்த்தேன் |
2007 | அடாவடி |
2006 | கொக்கி |
2003 | நிலவில் கலங்கமில்லை |
2003 | கையோடு கை |
2002 | புன்னகை தேசம் |
2001 | பத்ரி |
2000 | கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் |
1999 | பூப்பரிக்க வருகிறோம் |
1998 | தினந்தோறும் |
1996 | கோபாலா கோபாலா |
1996 | சும்மா இருங்க மச்சான் சும்மா இருங்க மச்சான் |
1996 | பூவே உனக்காக |
1994 | பாண்டியனின் ராஜ்ஜியத்தில் |
1994 | ஜல்லிக்கட்டு காளை |
1994 | அமைதிப்படை |
1993 | கருப்பு வெள்ளை |
1993 | திருடா திருடா |
1990 | நீ சிரித்தால் தீபாவளி |
1990 | எங்கள் சுவாமி ஐயப்பன் |
1989 | தர்ம தேவன் |
1989 | அன்னக்கிளி சொன்ன கதை |
1989 | தென்றல் சுடும் |
1988 | தெற்கத்தி கள்ளன் |
1988 | தம்பி தங்க கம்பி |
1988 | ராசாவே உன்னை நம்பி |
1988 | கதா நாயகன் |
1988 | பூந்தோட்ட காவல்காரன் |
1987 | தீர்த்த கரையினிலே |
1987 | பரிசம் போட்டாச்சு |
1987 | ஊர்க்காவலன் |
1987 | ஜல்லிக்கட்டு |
1987 | இத்தனை நாளாய் எங்கிருந்தாய் |
1987 | பேர் சொல்லும் பிள்ளை |
1987 | கடமை கண்ணியம் கட்டுப்பாடு |
1986 | உன்னிடத்தில் நான் |
1986 | ஊமை விழிகள் |
1986 | முதல் வசந்தம் |
1985 | கொலுசு |
1985 | ஒரு கைதியின் டைரி |
1984 | ஆயிரம் கைகள் |
1983 | எத்தனை கோணம் எத்தனை பார்வை |
1982 | நிழல் சுடுவதில்லை |
1982 | இதோ வருகிறேன் இதோ வருகிறேன் |
1981 | பாக்கு வெத்தலை |
1980 | சாமந்திப் பூ |
1979 | வெள்ளி ரத்னம் |
1978 | நெஞ்சில் ஆடும் பூ ஒன்று |
1977 | அவர் எனக்கே சொந்தம் |