பாடகர் தேவன் ஏகாம்பரம் | Singer Devan Ekambaram

தேவன் ஏகாம்பரம் (Devan Ekambaram) (பிறப்பு 1975 திசம்பர் 25) ஒரு இந்திய அமெரிக்க திரைப்பட பின்னணி பாடகரும், நடிகரும், இசையமைப்பாளரும் ஆவார். தமிழ்ப் படங்களில் பின்னணி பாடகராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர் பின்னர் தெலுங்கு, கன்னடம் போன்ற பல தென்னிந்திய மொழிகளிலும் 500க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடியுள்ளார்.


கல்வி


தேவன் தனது உயர்நிலைப் பள்ளி படிப்பை ஐக்கிய அமெரிக்காவின் நியூ செர்சியிலுள்ள பிரீஹோல்ட் டவுன்ஷிப் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். இவர் தனது இரண்டாம் ஆண்டில் அர்பானா சாம்பேன்னுள்ள இலினொய் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மின் பொறியியலில் பட்டம் பெற்றார்.


தொழில்


1999ஆம் ஆண்டில் அகாதமி விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன் தனது முதல் பாடலைத் தொடங்கினார். பின்னர், யுகேந்திரனுடன் காதலர் தினம் படத்திற்காக “ஓ மரியா ஓ மரியா” என்ற தனது முதல் பாடலை பதிவு செய்தார். இந்த பாடல் அனைத்து பிரிவுகளிலும் வெற்றி பெற்றது. அதன்பிறகு பல தென்னக இசை இயக்குனர்களிடமிருந்து பல பாடல்களைப் பெற்றார்.


ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்த மின்னலே (2001) திரைப்படத்திலிருந்து “ஒரே ஞாபகம்” என்ற பாடல் இவரது இரண்டாவது பெரிய வெற்றியாக வந்தது.அதன்பிறகு இளையராஜா, வித்தியாசாகர், தேவா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா போன்ற பலரின் இசையமைப்பின் கீழ் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பல பிரபலமான பாடல்களைப் பாடினார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இடம்பெற்ற “அன்பில் அவன்” பாடல் இரசிகர்கள் மனதில் இடம்பெற்றது.


இவரது பெரும்பாலான பாடல்கள் இசை இயக்குனர் ஹாரிஸ் ஜெயராஜுடன் இருந்தது. மேலும் அவருக்காக இவர் பாடிய அனைத்து பாடல்களுக்கும் இரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


சமீபத்தில் இவர் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் பிரியாணி படத்திற்காக யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் “நா நா நா” என்ற ஒரு பெப்பி பாடலைப் பாடியுள்ளார். “நியூ ஜாக் ஸ்விங் மிக்ஸ்” மற்றும் “தி எக்ஸ்டெண்டட் மிக்ஸ்” என்று அழைக்கப்படும் பாடலின் இரண்டு வெவ்வேறு மறு இசைக்கலவை பதிப்புகளும் ஒரு நல்ல வெற்றியைப் பெற்றன.


இவர் சமீபத்தில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் “என்னை அறிந்தால்” எனற பாடலை மீண்டும் ஹாரிஸ் ஜயராஜ் இசையில் பாடினார். இந்த பாடலை பாடலாசிரியர் தாமரை எழுதியுள்ளார்.


இசை இயக்கம்


2010 ஆம் ஆண்டு வெளிவந்த பலே பாண்டியா திரைப்படத்தில் இவர் இசை இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தைத் தவிர, பல சிறிய தமிழ் இசைத் தொகுப்புகளுக்கு இவர் இசையமைத்து, பாடியுள்ளார்.


நடிப்பு


இவர் ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். அதில் முக்கியமானவை பார்த்திபன் கனவு (அறிமுக படம்), உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான் போன்றவை. இதைத்தவிர திரைப்படங்களில் பல்வேறு முக்கிய கதாபாத்திரத்திற்கான பின்னணி குரரையும் இவர் அளித்துள்ளார். லிட்டில் ஜான் படத்தில் ஜான் மெக்கென்சிக்கும், தசாவதாரம் படத்தில் சுரேஷ் என்பவருக்கும், ஏழாம் அறிவு படத்தில் டோங் லீ என்ற சீன நடிகருக்கும் இவர் பின்னணி பேசியுள்ளார்.


வெளி இணைப்புகள்

பாடகர் தேவன் ஏகாம்பரம் – விக்கிப்பீடியா

Singer Devan Ekambaram – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *