சௌமியா ராவ் (Sowmya Raoh) கன்னடம், தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பாடி வரும் இந்திய பின்னணி பாடகியாவார்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்
இந்தியாவின் கருநாடகாவின் பெங்களூரில் மூத்த பாடகர் பி. கே. சுமித்ரா,சுதாகர் ஆகியோருக்கு கன்னடம் பேசும் குடும்பத்தில் இவர் பிறந்தார். இவருக்கு சுனில் ராவ் என்ற சகோதரர் உள்ளார், இவர் கன்னடத் திரைப்படத்துறையில் நடிகராக உள்ளார். இவரது தாயார் கன்னடத்தில் பிரபலமான பின்னணி மற்றும் பக்தி பாடகியாவார். ஒரு குழந்தையாக இருந்தபோது, இவர் தனது தாயுடன் அரங்கங்களுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பின்னர் மெதுவாக குழந்தைப் பாடகியானார். இவரது தந்தை இந்திய ரிசர்வ் வங்கியில் பணிபுரிந்தார்.
இவர், தனது ஏழு வயதில் பாட ஆரம்பித்தார். தனது படிப்புக்காக சிலகாலம் பாடுவதை நிறுத்தினார். ஐந்து முதல் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, கர்நாடக இசையைக் கற்றுக்கொள்வதன் மூலம் படிப்படியாக தனது கவனத்தை பாடுவதை நோக்கி திருப்பினார். இருப்பினும், இவர் திரைப்படங்களில் பாடுவதற்கு முன்பு குரல் நடிகராக மாறினார். “நான் குழந்தைகளுக்காக அல்லாமல், கதாநாயகிகளுக்காக பாடுவதற்கு பயிற்சி எடுக்க விரும்பினேன்” என்று இவர் கூறுகிறார்.
இசை வாழ்க்கை
இவர், 1993 இல் தென்னிந்திய படங்களில் பாடகியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், மேலும் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு பாலிவுட்டில் பாட வாய்ப்பு கிடைத்தது. இசையமைப்பாளர் சந்தீப் சவுதா இந்தியில் நன்றாகப் பாடக்கூடிய ஒரு பாடகரைத் தேடியபோது இவருக்கு அந்த வாய்ப்பு ஏற்பட்டது. “நின்னே பெல்லாடுதா” என்ற தனது தெலுங்குத் திரைப்படத்தில் “கிரேக்கவீருடு” என்ற பாடலுக்கு இவரைத் தேர்ந்தெடுத்தார். பாடல் ஒரு வெற்றியை அளித்தது. பின்னர், தமிழ் மற்றும் இந்தி பதிப்புகளிலும் இவர் இதே பாடலைப் பதிவு செய்தார்.
இவர், 2000 ஆம் ஆண்டில் பாலிவுடில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பியார் டியூன் கியா கியா படத்தில் இடம் பெற்ற “சோல் ஆஃப் ஜங்கிள்” பாடலைத் தொடர்ந்து வரும் பின்னணி பாடலாக இருந்தது. கம்பெனி என்ற இந்திப் படத்தில் ஒவர் முழுப் பாடலையும் பாடியிருந்தார். இந்த நேரத்தில் அவர் டம் , பண்டி அவுர் பாப்லி போன்ற பிற இந்தி படங்களுக்கும் பாடினார். 2012ஆம் ஆண்டில், இயக்குநர் சச்சின் குந்தால்கர் படமான “ஆயியா” என்ற படத்தில் இடம்பெற்ற ‘டிரீமும் வேக்கப்பும்’ என்ற குத்தாட்டப் பாடல் இவருக்கு ஒரு பெரிய வெற்றியை அளித்தது. மேலும் இந்த பாடல் ராணி முகர்ஜி மற்றும் பிரித்விராஜ் சுகுமாரன் ஆகியோரின் நடன அசைவுக்காகவும் பாராட்டப்பட்டது.
இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்த இவர், 2006 ஆம் ஆண்டு நிலவரப்படி தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் 200 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பதிவு செய்துள்ளார்.