இசையமைப்பாளர் சி. அஸ்வத் | Music Director C. Ashwath

சி. அஸ்வத் (C. Ashwath ) ( 1939 திசம்பர் 29 – இறப்பு: 2009 திசம்பர் 29) இவர் கன்னட மொழியில் பாவகீதத்தில் (“உணர்ச்சி கவிதை”) வல்லுநரும் இந்திய இசை அமைப்பாளரும் ஆவார். இவர் ஒரு பாடகராகவும் இருந்தார். மேலும் இவரது சொந்த பல பாடல்களை அவரே இசையமைத்தும் பாடினார். பாவகீத பாடல்களைப் பாடியதோடு அவை சாமானியர்களைச் சென்றடைவதை உறுதிசெய்த பெருமையும் இவருக்கு கிடைத்தது.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

இவர் 1939 திசம்பர் 29இல் பிறந்தார். பசவனகுடி தேசியக் கல்லூரியில் அறிவியலில் பட்டம் பெற்ற இவர், இந்திய தொலைபேசித் தொழில் துறையில் பணியாற்றினார். அங்கு 27 ஆண்டுகள் பணியாற்றி, 1992இல் நிர்வாக பொறியாளராக ஓய்வு பெற்றார். இந்துஸ்தானி இசையில் தேவகிரி சங்கரா ஜோஷியின் சீடராக தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார்.

திரைப்படங்கள்

இவரது குறிப்பிடத்தக்க இசையமைப்புகளில் பிரபல கவிஞர் கே.எஸ். நரசிம்மசுவாமியின் படைப்பான மைசூரு மல்லிகேவிற்கான இசையமைப்பும் கன்னட துறவி சிசுநாள ஷரீப்பின் படைப்புகளுக்கான இசையமைப்பும் அடங்கும். எல். வைத்தியநாதன் 1976 இல் ககானா கோட் படத்தின் இசைப்பதிவின் போது அஸ்வத்தை சந்தித்தார். இந்த சந்திப்பு கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக ஒரு வலுவான உறவுக்கு இட்டுச் சென்றது. அஸ்வத்தின் பல இசையமைப்புகளுக்கு வைத்தி இசைக்குழு அளித்துள்ளார். ஆனால் யெனே பராலி ப்ரீத்தி இராலி படத்தில்தான் அஸ்வத்-வைத்தி இரட்டையர்கள் சிறந்த இசையின் ஒத்துழைப்பாளர்களாக மாறினர்.

இவர் சுயாதீனமாக இசையமைத்த முதல் படம் ககானா கோட். பின்னர் சின்னாரி முத்தா, சாந்தா சிசுநாள ஷரீப், மைசூரா மல்லிகே, கோத்ரேஷி கனசு, நாகமண்டலா மற்றும் கன்னடத்தில் சில படங்களில் தொடர்ந்து இசையமைத்து வந்தார். கன்னடத்தில் “சுகமா சங்கீதத்தின்” (மெல்லிசை) முன்னோடியாக இருந்த இந்தப் பல்துறை பாடகர் 75 க்கும் மேற்பட்ட இசைத்தொகுப்புகளை தனது கணக்கில் கொண்டிருந்தார்.

சி.அஸ்வத் என்பது கர்நாடகாவின் ஒரு குடும்பப் பெயராக விளங்கியது. நாடகங்கள், சுகமா சங்கீதம் மற்றும் திரைப்படங்கள் என மூன்று துறைகளிலும் தனக்கு சொந்தமான இடத்தை செதுக்கிய கர்நாடகாவின் ஒரே இசை இயக்குனர் இவர்.

அஸ்வத் தனது இயக்கத்தின் 21 நாடக பாடல்களைக் கொண்ட “நேசரா நூடு” என்ற இசைத்தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். 1990களில், சி. அஸ்வத்தின் இசை இயக்கத்தில் குவெம்புவின் ‘எல்லடாரூ இரு என்டடாரூ இரு’ என்ற பாடலை கன்னட திரைப்பட நடிகர் ராஜ்குமார் பாடியிருந்தார். இது மிகவும் பிரபலமானது.

விருதுகள்

ஒரு பாடகர் மற்றும் இசையமைப்பாளர் என்ற முறையில், இவர் கர்நாடகாவிலும், உலகம் முழுவதுமுள்ள கன்னட மக்களிடமும் மிகவும் பிரபலமாக இருந்தார். 2005ஆம் ஆண்டில் பெங்களூரில் நடந்த இவரது இசை நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 100,000 பேர் கலந்து கொண்டனர். இந்தியாவுக்கு வெளியே கச்சேரிகளையும், மெலனுடி கன்னட சங்கத்திற்காக மெல்போர்னிலும், இங்கிலாந்தைச் சுற்றியுள்ள சில இடங்களிலும் தனது நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.

தனது 70 வது பிறந்தநாளில் இவர் நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுடன் சிறப்பு முறையில் கொண்டாடினார். பெங்களூரின் ரவீந்திர கலாசேத்திரத்தில் ஒரு விழா நடைபெறவிருந்தது. சுட்டூரைச் சேர்ந்த சுவாமிஜி மற்றும் வீரேந்திர ஹெக்டே ஆகியோர் இவரை மாலையிட்டு வாழ்த்திய, பின்னர் இவரது பிரபலமான பாடல்களைப் பாடினர்.

அஸ்வத் தலைமையில் 2005 ஏப்ரல் 23 அன்று பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற கன்னடவே சத்யா நேரடி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஒரு லட்சம் பார்வையாளர்களைக் கண்டது பெரும் வெற்றியாகும். கன்னட இசை நிகழ்ச்சி இங்கு நடைபெற்றது இதுவே முதல் முறையாகும். அவ்வளாகத்தில் பல மேற்கத்திய மற்றும் பிற இந்திய மொழி நிகழ்ச்சிகள் கடந்த காலத்தில் நடந்திருந்தன.

இறப்பு

இவர் தனது 70 வது பிறந்தநாளில் 2009 திசம்பர் 29 அன்று இறந்தார். இவர் சிறுநீரக மற்றும் கல்லீரல் செயலிழப்புகளால் பாதிக்கப்பட்டார்.

வெளி இணைப்புகள்

இசையமைப்பாளர் சி. அஸ்வத் – விக்கிப்பீடியா

Music Director C. Ashwath – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *