அரிஜித் சிங் என்பவர் இந்தியப் பாடகர் ஆவார். பிரீத்தம் என்னும் இசையமைப்பாளருக்கு உதவியாளராகப் பணிபுரிந்தார். இவர் இந்தி மற்றும் வங்காள மொழிப் பாடல்களைப் பாடியுள்ளார்.இந்தி சினிமா வரலாற்றில் வெற்றிகரமான பாடகர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
இவர் பல பாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். பேம் குருகுல் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, பிரபலமடைந்து பாடகரானார். சில திரை நிகழ்ச்சிகளுக்கான பாடல்களையும் பாடி, புகழடைந்தார். 2013இல் வெளியான ஆஷிக் 2 என்ற திரைப்படத்தில் தும் ஹி கோ என்ற பாடலைப் பாடினார். இது பெருத்த புகழைச் சேர்த்து, பிலிம்பேர் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுத் தந்தது.
ஆரம்பகால வாழ்க்கையும், கல்வியும்
1987 ஆண்டு ஏப்ரல் 25 மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத்தில் பிறந்தார். இவரது தந்தை ஜியாகஞ்சில் கக்கர் பஞ்சாபி சீக்கியரும், தாய் பெங்காலியரும் ஆவார். இவர் மிகச் சிறிய வயதில் வீட்டில் இசை பயிற்சியை தொடங்கினார். தாய்வழி அத்தையிடம் இந்திய பாரம்பரிய இசை பயின்றார். ராஜா பிஜய் சிங் உயர்நிலைப் பள்ளியிலும், சிறிபத் சிங் கல்லூரியிலும் கல்வி கற்றார். ராஜேந்திர பிரசாத் ஹசாரியிடம் தொழில் ரீதியாக இந்திய பாரம்பரிய இசை கற்றார். மேலும் பாப் இசை மற்றும் ரவீந்திர சங்கீத்( ரவீந்திரநாத் தாகூர் எழுதி இசையமைத்த பாடல்கள்) என்பவற்றை திரேந்திர பிரசாத் ஹசாரியிடம் கற்றார். மூன்று வயதில் இருந்து ஹசாரி சகோதரர்களிடம் பயிற்சியை தொடங்கினார். ஒன்பது வயதில், இந்திய பாரம்பரிய இசையில் குரல் பயிற்சி பெறுவதற்காக அரசாங்க உதவித்தொகை பெற்றார்.
தனிப்பட்ட வாழ்க்கை
2014 ஆம் ஆண்டில் அவரது தோழியான கோயல் ராயை திருமணம் புரிந்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அரிஜித் சிங் தற்போது மும்பையில் அந்தேரியில் வசிக்கின்றார்.
பணி
அரிஜித் சிங்கின் குரு ராஜேந்திர பிரசாத் ஹசாரியின் வலியுறுத்தலினால் 2005 ஆம் ஆண்டு நடைப்பெற்ற பேம் குருகல் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் ஆறாவது இடத்தை பிடித்தார். நிகழ்ச்சியின் போது திரைப்படத் தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி திறமையை அடையாளம் கண்டு அவரது சவாரியா திரைப்படத்தில் பாடலொன்றை பாடுவதற்கு வாய்ப்பு வழங்கினார் இருப்பினும் திரைக்கதையில் ஏற்பட்ட மாறுதலினால் அந்ந பாடல் வெளிவரவில்லை. குமார் தவராணியின் இசைத் தொகுப்பொன்றில் கையெழுத்திட்டார் அதுவும் வெளியாகவில்லை.
அரிஜித் சிங் மற்றுமொரு ரியாலிட்டி நிகழ்ச்சியான 10 கே 10 லு கயே தில் பங்கேற்று வெற்றி பெற்றார். நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பரிசுத்தொகை 10 இலட்ச ரூபாயை முதலீடு செய்து சொந்தமாக குரல்பதிவு ஸ்டூடியோ ஒன்றை தொடங்கினார். விளம்பரங்கள், செய்தி சேனல்கள் மற்றும் வானொலி நிலையங்களுக்கு இசை மற்றும் பாடல்களை தயாரிக்க தொடங்கினார். பிற இசையமைப்பாளர்களுடன் பணி புரிய தொடங்கினார்.பல திரைப்படங்களில் பின்னணி பாடகராக பணி புரிந்துள்ளார். 2015 ஆம் ஆண்டில புகழ் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
விருதுகள்
அரிஜித் சிங்கிற்கு சிறந்த நேரடி நடிகருக்கான விஸ்கிராப்ட் ஹானர் விருதி வழங்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டின் வெம்ப்லியின் தி எஸ்எஸ்இ அரங்கில் இடம்பெற்ற எஸ்எஸ்இ லைவ் விருதுகளில் உலகம் முழுவதிலுமிருந்து சிறந்த 10 கலைஞர்களில் ஒருவராக இருந்தார். இவர் நான்கு மிர்ச்சி இசை விருதுகள், ஐந்து பிலிம்பேர் விருதுகள், ஒரு ஸ்டார்ஸ்ட் விருது, ஒரு ஐபா விருது, இரண்டு ஜீ சினி விருதுகள் மற்றும் இரண்டு திரை விருதுகளை பெற்றுள்ளார். 2013 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆசிகி 2 திரைப்படத்தின் தும் ஹி ஹோ பாடலுக்காக பத்து பரிந்துரைகளில் ஒன்பது விருதுகளை வென்றார். 2014 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்தின் தேசிய இந்திய மாணவர் சங்கம் ஐகான் – இசை விருதை வழங்கியது. 2016 ஆம் ஆண்டில் போர்ப்ஸ் இந்தியா சஞ்சிகையின் 100 பிரபலங்களின் பட்டியலில் 15 ஆவது இடத்தை பெற்றார்.