பாடகர் பிரம்மானந்தன் | Singer Brahmanandan

பிரம்மானந்தன் (1946 – 2004) ஒரு மலையாள மற்றும் தமிழ்த் திரைப்படப் பாடகர். குறைவான பாடல்களையே பாடியிருக்கிறார் என்றாலும் தன்னுடைய தனித்தன்மை வாய்ந்தகுரலால் பெரும்புகழ் பெற்றவராக இருக்கிறார்.


பிரம்மானந்தன் 1946 ல் திரிச்சூர் அருகே கடக்காவு என்ற ஊரில் பிறந்தவர். கடக்காவு சுந்தர பாகவதர் இவரது முதல் குரு. பின்னர் சென்னைக்கு வந்து டி. கெ. ஜெயராமனிடம் மரபிசை பயின்றார். அகில இந்திய வானொலி நடத்திய மெல்லிசைப் போட்டியில் சிறந்த பாடகருக்கான முதல் பரிசை 1968ல் பெற்றார். 1969ல் இவரை இசையமைப்பாளர் கெ. ராகவன் தன்னுடைய கள்ளிச்செல்லம்மா என்ற படத்தில் அறிமுகம்செய்தார்.


கள்ளிச்செல்லம்மா படத்தில் வரும் ’மானத்தே காயலில்..’ என்ற இன்னிசைப் பாடலைப் பாடி பிரம்மானந்தன் பெரும்புகழ்பெற்றார். கனத்த குரல் கொண்ட இவர் மென்மையாகப் பாடக்கூடியவர். பிரம்மானந்தன் பாடிய பெரும்பாலான பாட்டுக்கள் பெரும் வெற்றி பெற்றன. அவருக்கு கெ.ராகவன், தட்சிணாமூர்த்தி, எம். கெ. அர்ஜுனன், ஏ. டி. உம்மர், ஆர். கெ. சேகர் போன்ற இசையமைப்பாளர்கள் நிறைய வாய்ப்புகளை கொடுத்தார்கள். ஆனால் அன்று மலையாள இசையுலகின் முதன்மை இசையமைப்பாளராக இருந்த தேவராஜன் மாஸ்டர் பிரம்மானந்தனை தொடர்ந்து புறக்கணித்தார். ஆகவே பிரம்மானந்தன் குறைவான பாடல்களையே பாட நேர்ந்தது. ஒருகட்டத்தில் வாய்ப்பே இல்லாது போயிற்று.


அதற்கு பலகாரணங்கள் சொல்லப்படுகின்றன. பிரம்மானந்தன் முன்கோபமும் கர்வமும் கொண்டவர், தேவராஜனை புண்படுத்தியிருக்கலாம் என்கிறார்கள். ’மலையத்திப்பெண்ணு’ ’கன்னி நிலாவு’ என்ற இரு படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். கன்னிநிலாவு வெளியாகவே இல்லை. வெறும் பத்து வருடங்களே பிரம்மானந்தன் திரையுலகில் இருந்தார். எழுபதுகளின் இறுதியில் வாய்ப்புகள் இல்லாத நிலையில் குடிக்க ஆராம்பித்தார். தனிக்கச்சேரிகளில் பாடினார். பக்தி இசைத்தட்டுகள் வெளியிட்டார். ஆனால் சினிமாவால் புறக்கணிக்கப்பட்டது அவரை வருத்தம்கொள்ளச் செய்தது.


பிரம்மானந்தன் தமிழில் பத்து படங்களுக்குமேல் பாடியிருக்கிறார். இளையராஜா அவருக்கு வாய்ப்புகள் வழங்கினார். சந்தக்கவிகள் பாடிடும் என்ற பாடல் முக்கியமானது


குடி முதிர்ந்து பொருளிழந்து தெருவில் அலையும் நாடோடியாக ஆனார். பிரம்மானந்தனுக்கு மிக காலம் தாழ்த்தி 2003ல் கேரள சங்கீத நாடக அக்காதமி விருது கொடுக்கப்பட்டது. அவர் மனமுடைந்த நிலையில் இருந்த காலம் அது. வேறெந்த விருதும் அளிக்கப்படவில்லை. 2004, ஆகஸ்ட் பத்தாம்தேதில் தன்னுடைய 58 ஆவது வயதில் பிரம்மானந்தன் மறைந்தார். திரிச்சூடிரில் அவரது சொந்த கிராமத்தில் சிதையேற்றப்பட்டார்


பாடல்கள்


  • மானத்தே காயலில்

  • தாரக ரூபிணீ

  • தாமரப்பூ நாணிச்சு

  • நீல நிஸீதினீ

  • சந்தக்கவிகள்

  • வெளி இணைப்புகள்

    பாடகர் பிரம்மானந்தன் – விக்கிப்பீடியா

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *