கண்டசாலா (Ghantasala Venkateswara Rao, 4 டிசம்பர் 1922 – 11 பிப்ரவரி 1974) தென்னிந்தியாவின் பிரபலமான திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர். இவரது முழுப்பெயர் கண்டசாலா வேங்கடேஸ்வர ராவ். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், துளு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார். சில திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
இளவயதுக் காலம்
1922-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ம் நாள் கிருஷ்ணா மாவட்டம், குடிவாடா தாலூக்காவிலுள்ள சௌதப்பள்ளி என்னும் ஊரில் கண்டசாலா வேங்கடேஸ்வர ராவ் பிறந்தார். தந்தையார் பெயர் சூரய்யா கண்டசாலா. தாயார் பெயர் ரத்தம்மா.
தந்தையார் ஒரு பாடகர். நாராயண தீர்த்தரின் தரங்கிணிகளைப் பாடுவார். மிருதங்கமும் வாசிப்பார். கண்டசாலா சிறு பையனாக இருக்கும்போது தந்தை மிருதங்கம் வாசிக்க, அந்தத் தாளத்திற்கேற்ப நடனமாடுவார்.
இசைப் பயிற்சி
விசாகப்பட்டினத்தில் துவாரம் வேங்கடசுவாமி நாயுடு முதல்வராக இருந்த இசைக்கல்லூரியில் இசை பயின்றார். அங்கு ஆசிரியராக இருந்த பி. சீதாராம சாஸ்திரி அவருக்கு இசை கற்றுக்கொடுத்தார். (இவர் பின்னாளில் கண்டசாலா திரைப்படங்களில் பாடிய காலத்திலும் உதவியாக இருந்தார்.)
பாடகர்/இசையமைப்பாளர்
அனைத்திந்திய வானொலியில் இவர் பாடிவந்தார். பின்னர் ஹெச். எம். வி. இசைத்தட்டுக் கம்பெனிக்காகச் சில பாடல்கள் பாடினார். அதனையடுத்து 1944-ஆம் ஆண்டு வெளியான சீதா ராம ஜனனம் என்ற படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்தார். அப்போது இசையமைப்பாளர் சி. ஆர். சுப்பாராமன் போன்றோருடன் தொடர்பு ஏற்பட்டது. அதனையடுத்து திரைப்படங்களில் பின்னணி பாடிவந்தார். முதன்முதலாக லக்ஸ்மம்மா என்ற திரைப்படத்திற்கு இசையமைத்தார்.
இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
பாடல்கள் இடம்பெற்ற தமிழ்த் திரைப்படங்கள்
பெற்ற விருதுகளும், சிறப்புகளும்
மறைவு
கண்டசாலா 11 பிப்ரவரி 1974 அன்று காலமானார். சென்னையிலுள்ள மருத்துவமனை ஒன்றில் மாரடைப்பால் காலமாவதற்கு முதல்நாள், ஆவணப் படம் ஒன்றிற்காக மருத்துவமனைப் படுக்கையிலிருந்தபடியே அவர் பாட, ஒலிப்பதிவு செய்யப்பட்டது.