கே. அசுவத்தம்மா (K. Aswathamma, 1910 – 1944) பழம்பெரும் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும், பாடகியும் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
மைசூர் இராச்சியம், பெங்களூரைச் சேர்ந்த கன்னட நடிகையான அசுவத்தம்மா, 1934 ஆம் ஆண்டில் முகம்மது பீரின் “மீனலோசனி நாடக சபாவில்” இணைந்து நாடக நடிகையாக அறிமுகமானார். பின்னர் 1935 இல் ராஜா சந்திரசேகர் இயக்கி, குப்பி வீரண்ணாவின் தயாரிப்பில் வெளியான சாதரமே என்ற கன்னடத் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானார். நன்றாகப் பாடக் கூடியவர். இவரது தனிப் பாடல்கள் பல இசைத்தட்டுகளில் வெளியாகியுள்ளன. மன்மத விஜயா என்ற நாடகத்தில் இவர் பாடிய ஹா பிரியா பிரசாந்த இருதயா என்ற பாடல் அக்காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழில் முதற்தடவையாக 1937 ஆம் ஆண்டில் சிந்தாமணி திரைப்படத்தில் சிந்தாமணி பாத்திரத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இத்திரைப்படம் ஓராண்டு காலம் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது.
ஈழகேசரி 1938 ஆண்டு மலரில் புதுமைப்பித்தன் எழுதிய கட்டுரை ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:
சிந்தாமணியை அடுத்து அசுவத்தம்மா 1939 இல் வெளியான சாந்த சக்குபாய் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதுவே இவர் நடித்த கடைசித் தமிழ்ப் படம் ஆகும். இத்திரைப்படம் தயாரிக்கப்படும் போதே அசுவத்தம்மா உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதனால் இவர் பாட வேண்டிய ஒரு பாடலை வி. ஆர். தனம் என்ற பாடகியைக் கொண்டு பாடவும் பேசவும் வைத்துப் படத்தில் இணைத்தனர். இதன் மூலம் தமிழ்த் திரையுலகின் முதல் பின்னணி பாடகி என்ற பெயரை வி. ஆர். தனம் பெற்றார்.
1944 ஆம் ஆண்டில் இவர் காசநோயால் பீடிக்கப்பட்டு காலமானார்.