மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா (Mangalampalli Balamuralikrishna, தெலுங்கு: మంగళంపల్లి బాలమురళీకృష్ణ, சூலை 6, 1930 – நவம்பர் 22, 2016) ஒரு இந்திய கருநாடக இசைப் பாடகர், இசை மேதை, பல்-வாத்தியக் கலைஞர், பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், வாக்கேயக்காரர், குணசித்திர நடிகர் என பல திறப்பட்ட கலைஞராவார்.
தென்னிந்திய மொழிகள் உட்பட 8 மொழிகளில் பாடல்களைப் பாடும் திறமையுடன் விளங்கியவர்.
இளமைப் பருவம்
முரளிகிருஷ்ணா கிழக்குக் கோதாவரி மாவட்டத்திலுள்ள சங்கர குப்தம் எனும் ஊரில் பிறந்தார். இசைக் கலைஞர்களான பட்டாபிராமையா – சூர்யகாந்தம்மா ஆகியோர் இவரது பெற்றோராவர். இவரது தந்தை பட்டாபிராமையா ஒரு புல்லாங்குழல் வித்வான். தாயார் வீணை வாசிப்பார். இவரது தாத்தா கூட ஒரு இசைக்கலைஞர்தான்.
தியாகராஜரின் மாணவர் பரம்பரையில் 4ஆவதாக வந்தவர் எனும் பெருமை பாலமுரளிகிருஷ்ணாவுக்கு உண்டு. தியாகராஜரின் நேரடி மாணவர், மானம்புச்சாவடி வேங்கடசுப்பையர். அவரிடமிருந்து தட்சிணாமூர்த்தி சாஸ்திரி, பாருபள்ளி ராமகிருஷ்ண பந்துலு என பரம்பரை தொடர்ந்தது. பாருபள்ளி ராமகிருஷ்ண பந்துலுவிடம் பாலமுரளிகிருஷ்ணா முறையாக கருநாடக இசை கற்றார்.
முரளிகிருஷ்ணா முதன்முதலாகத் தனது ஒன்பதாவது வயதில் இசைக்கச்சேரி செய்தார். தனது சிறு வயதிலேயே இசை மேதை எனப் பெயர் பெற்றார். ஹரிகதை மேதை முசூநுரி சூர்யநாராயண மூர்த்தி இவருக்கு பால என்ற பெயரை சேர்த்து அழைத்ததன் பின்னர் பாலமுரளிகிருஷ்ணா என அழைக்கப்பட்டார். சென்னை அனைத்திந்திய வானொலி, இவர் ஒரு குழந்தைக் கலைஞராக இருந்தபோதே தனது முதல்தர இசைக் கலைஞர் பட்டியலில் (A Grade) இவரையும் சேர்த்தது.
திருவையாறு தியாகராஜ சுவாமி உற்சவத்தில் தனது பதினோராவது வயதிலேயே ஒன்றரை மணி நேரம் பாடியிருக்கிறார். இவருக்காக பெரிய இசை வித்வான்களாகிய பெங்களூர் நாகரத்தினம்மாள், அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் ஆகியோர் தங்கள் நேரத்தை விட்டுக் கொடுத்தார்கள்.
கருநாடக இசைக்கான பங்களிப்புகள்
பாடகராக
தனது வாழ்நாளில் ஏறத்தாழ 25,000 கச்சேரிகளை உலகம் முழுவதும் நிகழ்த்தினார்.
தூர்தர்சன் தொலைக்காட்சியின் புகழ்மிக்க காணொளிப் பாடலான மிலே சுர் மேரா தும்ஹாரா எனும் பாடலில் பாலமுரளிகிருஷ்ணா பங்களித்தார். இந்த தேசபக்திப் பாடலில், தமிழ்ப் பாடல் வரிகளை இவர் பாடினார்.
வயலின் இசைக் கலைஞராக
அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், செம்பை வைத்தியநாத பாகவதர், மகாராஜபுரம் சந்தானம், ஜி. என். பாலசுப்பிரமணியம் ஆகிய முன்னணிக் கலைஞர்களுக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்திருந்தார்.
பாலமுரளிகிருஷ்ணா தனது தந்தை வயலின் வாசிப்பதை கவனித்து வந்து வயலின் வாசிப்பினை கற்றுக் கொண்டவர். தனது இளம்பிராய வயதில், குரல் மாறி பாடுவதற்கு கடினமாக இருந்த காலத்தில் அதிகளவு வயலின் வாசித்து நன்கு கற்றுக் கொண்டார்.
வயோலா, புல்லாங்குழல், வீணை, மிருதங்கம் எனும் வாத்தியங்களை இசைக்கும் திறன் கொண்டவராகவும் இருந்தார்.
வாக்கேயக்காரராக
இவர் 72 மேளகர்த்தா உருப்படிகள் உருவாக்கம் செய்திருக்கிறார். மற்றவர்கள் இதுவரை உருவாக்கி எடுத்தாளாத இராகங்களை இயற்றிப் பாடியிருக்கிறார்.
சுமூகம் (நான்கு சுவரங்கள் கொண்ட ராகங்கள்), மகதி (நான்கு சுவரங்கள்), சர்வஸ்ரீ (மூன்று ), ஓம்காரி (மூன்று சுவரங்கள்), பிரதிமத்தியமாவதி, வல்லபி, ரோகினி, லவங்கி, மோகனாங்கி, தொரே போன்ற ராகங்களை உருவாக்கினார்.
இயற்றிய கீர்த்தனங்கள்
ஓங்கார ப்ரணவ | சண்முகப்பிரியா |
---|---|
அம்மா அனந்த தாயினி | கம்பீரநாட்டை |
ஏ நாதமு | நாட்டை |
சலமு சேசின | ராமப்பிரியா |
ஆ பால கோபாலமு | அமிர்தவர்ஷினி |
நினு நேர நம்மதி | கரஹரப்பிரியா |
ஸ்ரீ சகல கணாதிப பாலயமாம் | ஆரபி |
மகாதேவசுதம் | ஆரபி |
கங் கங் கணபதீம் | கணபதி |
கணாதிபாம் | நாட்டை |
பிறை அணியும் பெருமான் | ஹம்சத்வனி |
உமா சுதம் நமாமி | சர்வஸ்ரீ |
மஹநீய நமசுலிவே | சுமுகம் |
ஓங்கார காரிணி | லவங்கி |
சித்தி நாயகனே | அமிர்தவர்ஷினி |
சித்திம் தேஹி மே | சித்தி |
ஹீர கணபதிக்கி | சுருட்டி |
மஹநீய மதுர மூர்த்தே | மஹதி |
குருநி ஸ்மரிம்புமோ | ஹம்சவிநோதினி |
வருக வருக | பந்துவராளி |
துணை நீயே | சாருகேசி |
நீ தய ராதா | பூர்விகல்யாணி |
கதி நீவே | கல்யாணி |
சிவ கங்கா | நாகஸ்வராளி |
மா மாநினி | ஹனுமதோடி |
அம்ம நின்னுகோரி | கமாஸ் |
கான மாலிஞ்சி | கல்யாண வசந்தம் |
சதா தவ பாத | சண்முகப்ரியா |
ப்ருஹதீஸ்வர | கானடா |
கமல தலாயதா | பஹுதாரி |
தில்லானா | பிருந்தாவனி |
தில்லானா | சக்கரவாகம் |
தில்லானா | த்வஜாவந்தி |
தில்லானா | குந்தவராளி |
தில்லானா | கதனகுதூகலம் |
தில்லானா | கருடத்வனி |
தில்லானா | பெஹாக் |
தில்லானா | ராகமாலிகை |
தில்லானா | ராகமாலிகை |
தில்லானா | ராகமாலிகை |
மாமவ கான லோலா | ரோஹினி |
கான லோல | ராகமாலிகை |
சங்கீதமே | கல்யாணி |
நீ சாதி நீவே | சந்திரிகா |
சங்கராபரண சயனுதா | தீரசங்கராபரணம் |
வேகமே | ஆபோகி |
ஹனுமா | சரசாங்கி |
வந்தே மாதரம் | ரஞ்சனி |
கான சுதா ரச | நாட்டை |
சாம கண | அமிர்தவர்ஷினி |
மரகத சிம்ஹாசன | சிம்மேந்திர மத்திமம் |
சிம்ஹ ரூப தேவா | காம்போதி |
ராஜ ராஜ | தீர சங்கராபரணம் |
சிந்தயாமி சட்டதம் ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதம் | சுசரித்ர |
அம்பமாமவ | ராகமாலிகை |
பங்காரு முரளி ஸ்ரிங்கார ராவளி | நீலாம்பரி |
பாவ மே மகா பாக்யமுரா | காபி |
பாஹி சமீர குமாரா | மந்தாரி |
வசம | தர்மாவதி |
திரைப்படத்துறைக்கான பங்களிப்புகள்
பாலமுரளிகிருஷ்ணா தென்னிந்திய திரைப்படங்களுக்கு குறைவான பங்களிப்பினைத் தந்திருந்தாலும், அவை குறிப்பிடத்தக்கவையாக அமைந்திருந்தன.
ஏ. வி. மெய்யப்பச் செட்டியாரின் வேண்டுகோளுக்கிணங்க, பக்த பிரகலாதா எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். இந்தத் திரைப்படம் தமிழ், இந்தி, கன்னடம் என பிற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அதற்குப் பின்னர் வந்த வாய்ப்புகளை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. பிற்காலத்தில் சந்தினே செந்தின சிந்தூரம் எனும் மலையாளத் திரைப்படத்தில் பாடகர் வேடத்தில் நடித்தார்.
பின்னணிப் பாடகராக
ஒரு பின்னணிப் பாடகராக தென்னிந்தியத் திரைப்படங்களில் பங்களித்தார். சதி சாவித்திரி எனும் தெலுங்குத் திரைப்படத்தில் முதன்முதலாக பாடினார். பின்னணிப் பாடகி பி. லீலா இவருடன் இணைந்து பல பாடல்களை பாடியிருக்கிறார்.
சுவாதித் திருநாள் எனும் மலையாளத் திரைப்படத்தில் இவர் பாடிய பாடல்களுக்காக, கேரள அரசின் விருது இவருக்குக் கிடைத்தது.
ஆண்டு | திரைப்படம் |
---|---|
1964 | கலைக்கோவில் |
1965 | திருவிளையாடல் |
1966 | சாது மிரண்டால் |
1970 | கண்மலர் |
1977 | கவிக்குயில் |
உயர்ந்தவர்கள் | |
நவரத்தினம் | |
1979 | நூல் வேலி |
1983 | மிருதங்க சக்கரவர்த்தி |
1991 | சிகரம் |
2009 | பசங்க |
2015 | பிரபா |
இசையமைப்பாளராக
ஆதி சங்கராச்சாரியா (சமசுகிருத மொழியின் முதல் திரைப்படம்), இராமானுஜசார்யா, மத்வச்சாரியா ஆகிய திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தார்.
ஆலோசகராக
திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களுக்கு இராகங்கள் குறித்து ஏதேனும் ஐயங்கள் ஏற்படும்போது இவரை நாடினர்.
எம். எஸ். விஸ்வநாதன் பாலமுரளிகிருஷ்ணாவை தனது இசையாசிரியராக கருதினார்; பலமுறை தனது ஐயங்களை தீர்த்துக் கொண்டார். கே. பாலசந்தர் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தை இயக்கியபோது, அரிதான இராகத்தில் ஒரு பாடலை உருவாக்கித் தருமாறு கேட்டதும், எம். எஸ். விஸ்வநாதன் பாலமுரளிகிருஷ்ணாவை நாடி அவரின் உதவியினைப் பெற்றார். அதிசய இராகம்… ஆனந்த இராகம்… அழகிய இராகம், அபூர்வ இராகம் எனும் பாடல் மகதி இராகத்தில் உருவானது. க, ப, நி எனும் 3 சுவரங்களை மட்டுமே இப்பாடல் கொண்டிருந்தது.
இவரின் மாணவர்கள்
பெற்ற விருதுகளும், சிறப்புகளும்
சொந்த வாழ்க்கை
இவருக்கு 3 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகள்.
பாலமுரளி கிருஷ்ணாவின் வாழ்க்கை வரலாற்றை ராணிமைந்தன் என்பவர் எழுதியிருக்கிறார்.
மறைவு
பாலமுரளி கிருஷ்ணா உடல் நலக்குறைவு காரணமாக 2016 நவம்பர் 22 ஆம் நாள் சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.