முகமது ரஃபி (Mohammed Rafi, டிசம்பர் 24, 1924 – ஜூலை 31, 1980) இந்தியாவின் பாலிவுட்டில் மிகவும் புகழ் பெற்ற இந்தி/உருது பின்னணிப் பாடகர் ஆவார். இவர் இன்றளவும் இந்தியத் துணைக்கண்டத்திலும் இந்தியர்கள் வாழும் ஐக்கிய இராச்சியம், கென்யா போன்ற நாடுகளிலும் புகழ்பெற்றவர். இவர் இந்தி மொழிப்பாடகராக அறியப்பட்ட போதிலும் வேறு இந்திய மொழிகளிலும் பாடல்கள் பாடியுள்ளார். கொங்கணி, போச்புரி, அசாமிய மொழி, ஒடியா மொழி, பஞ்சாபி, மராத்தி, சிந்தி, கன்னடம், குஜராத்தி, தெலுங்கு, மாகாகி, மைதிலி மொழி மற்றும் உருது மொழிகளில் பாடியுள்ளார். ஆங்கிலம், பார்சி, அரபி, சிங்களம், டச்சு மற்றும் கிரியோல் மொழி ஆகியவற்றிலும் பாடியுள்ளார். இவர் நடிகர்களின் குரலை ஒத்த குரலில் பாடுவதாலும், திரைப்படத்தில் நடிகர்களின் உதட்டசைவை ஒத்தபடி பாடுவதால் பிரபலமடைந்தார். 1967 ஆம் ஆண்டு பத்மஶ்ரீ விருதினை இந்திய மத்திய அரசு இவருக்கு வழங்கியது.
இளமைக்காலம்
முகமது ரபி அவரது பெற்றோருக்குப் பிறந்த ஆறு குழந்தைகளில் இரண்டாவது குழந்தை ஆவார். இவர்களது குடும்பம் தற்போதைய பஞ்சாப் மாநிலத்தின் அம்ரிஸ்டர் நகருக்கு அருகேயுள்ள மஜிதா எனும் இடமாகும். சிறுவயதிலேயே தெருவில் பாடிச் செல்லும் பகீர்களைப் போல பாடும் திறமையுடையவர். உஸ்தாத் படே குலாம் அலி கான், உஸ்தாத் அப்துல் வஹீத் கான், பண்டிட் ஜீவன்லால் போன்றவர்களிடம் இசையினைக் கற்றார்.
வாழ்க்கைக் குறிப்பு
முகமது ரபி இருமுறை திருமணம் செய்து கொண்டார். உறவினராக முதல் மனைவியுடனான திருமணம் சொந்தக் கிராமத்தில் நடைபெற்றது. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது முகமது ரபியின் மனைவி பஸிரா ரபியின் பெற்றோர் கொல்லப்பட்டதால். திருமணத்திற்குப் பின்னர் அவரது மனைவி இந்தியாவில் வசிக்க விரும்பாமல் லாகூர் நகருக்கு இடம்பெயர்ந்தால், இவரது இரண்டாவது திருமணம் பில்குஸ் ரபியுடன் நடைபெற்றது. இறகுப்பந்தாட்டம், கேரம் மற்றும் பட்டம் பறக்கவிடுதல் இவரது முக்கிய பொழுதுபோக்கு ஆகும்.
திரைப்படப் பாடகர்
1941 ஆம் ஆண்டு அகில இந்திய வானொலியின் லாகூர் நிலையத்தில் பாடுவதற்கான வாய்ப்பினைப் பெற்றார். திரைப்படப் பாடகர் வாய்ப்பினைப் பெறுவதற்காக 1944 ஆம் ஆண்டு முகமது ரபி மும்பைக்கு இடம் பெயர்ந்தார். நெரிசல்மிக்க பெகந்தி பஜார் (Bhendi Bazar) பகுதியில் தங்கியிருந்தார். கவிஞர் தன்வீர் நக்வி இவரைத் திரைப்படத் தயாரிப்பாளர்களிடம் அறிமுகப்படுத்தினார். அதன் விளைவாய் ஸ்யாம் சுந்தர் (Shyam Sunder) கோன் கி கோரி (Gaon Ki Gori) திரைப்படத்தில் பாடுவதற்கு வாய்ப்பளித்தார். 1970 களில் இவரது தொண்டையில் நோய்தொற்று ஏற்பட்டதால் குறைந்த எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடினார்.
மரணம்
1980 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் நாள் இரவு 10:25 ற்கு அவரது 55 வயதில் மாரடைப்பினால் உயிரிழந்தார். லக்ஷ்மிகாந்த் பியாரிலால் (Laxmikant-Pyarelal) இசையில் மரணமடைவதற்கு சற்று முன்னர் ஆஸ் பாஸ் (Aas Paas) திரைப்படத்திற்காகப் பாடியதே இவரது கடைசித் திரைப்படப் பாடலாகும். இவரது மரண ஊர்வலத்தில் 10,000 அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். இவரது மறைவிற்காக இந்திய அரசு இரண்டு நாட்கள் துக்கம் கடைபிடித்தது.