பாடகி பி. ஏ. பெரியநாயகி | Singer P. A. Periyanayaki

பி. ஏ. பெரியநாயகி (ஏப்ரல் 14, 1927 – சூன் 8, 1990) தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகியும், கருநாடக இசைப் பாடகியும், நடிகையும் ஆவார். இவரே தமிழ் திரைப்படத்தின் முதல் பின்னணிப் பாடகியாவார்.


வாழ்க்கைக் குறிப்பு


பெரியநாயகியின் சொந்த ஊர் தமிழ்நாடு பண்ருட்டிக்கு அருகில் உள்ள திருவதிகை என்ற பாடல் பெற்ற தலமாகும். இவரின் தாயார் அக்காலத்தில் “பண்ருட்டி அம்மாள்” என அழைக்கப்பட்ட புகழ்பெற்ற பாடகி ஆதிலட்சுமி ஆவார். பெரியநாயகி அவரின் கடைசிப் பிள்ளை. பாலசுப்பிரமணியன், ராஜாமணி ஆகியோர் இவருடன் கூடப் பிறந்தவர்கள். தாயார் ஆதிலட்சுமி தனது மூன்று குழந்தைகளுடன் இலங்கையில் சில காலம் தங்கியிருந்து பல கருநாடக இசைக் கச்சேரிகளை நடத்தி வந்தார். ஆதிலட்சுமி அம்மாளின் உடல் நலிவுற்றதை அடுத்து பிள்ளைகளுடன் சென்னை திரும்பினார். பெரியநாயகி திருவல்லிக்கேணி சி. எஸ். எம். பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படித்தார்.


திரைப்படங்களில் நடிப்பு


1940 ஆம் ஆண்டில் பெரியநாயகியின் சகோதரி பி. ஏ. ராஜாமணிக்கு ஊர்வசியின் காதல் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு அழைப்பு வந்தது. அதில் பெரியநாயகிக்கும் ஒரு காந்தர்வக் கன்னியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் படிப்பை இடைநிறுத்திவிட்டு தாயாருடன் சேலம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.


பெரியநாயகி அன்னை ஆதிலட்சுமி அம்மாளிடமும், பத்தமடை சுந்தர ஐயர் என்பவரிடமும் முறையாக கருநாடக இசை பயின்று மேடைக் கச்சேரிகளில் பாடி வந்தார். சிறந்த குரல் வளமும், பாடும் திறமையும் கொண்டிருந்தார். இதனால் இவருக்கு திரைப்படங்களில் நடித்துப் பாடும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. ஏவிஎம் இன் தயாரிப்பில் ஏ. டி. கிருஷ்ணசாமி 1941 இல் இயக்கிய சபாபதி திரைப்படத்தில் திறந்தவெளி அரங்கு ஒன்றில் மேடைக் கச்சேரியில் பாடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. பெரியநாயகிக்கு இப்படத்தில் இரண்டு பாடல்கள் பாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. தொடர்ந்து பஞ்சாமிர்தம் (1942), என் மனைவி (1942), மனோன்மணி, மகாமாயா (1944), பிரபாவதி, வேதாள உலகம், கிருஷ்ண பக்தி, கீதகாந்தி, தர்மவீரன், சிவலிங்க சாட்சி, சபாபதி, பிரபாவதி, கே. சுப்பிரமணியம் இயக்கிய விசித்ர வனிதா (1947), கூண்டுக்கிளி போன்ற பல திரைப்படங்களில் இவர் நடித்துப் பாடியுள்ளார். 1945 இல் வெளியான ஏவிஎம் இன் ஸ்ரீ வள்ளி திரைப்படத்தில் கதாநாயகி ருக்மிணி பாடிய பாடல் ஒன்றுக்கு முதன் முதலாகப் பின்னணிக் குரல் கொடுத்தார். ருக்மாங்கதன் படத்தில் நாரதராகத் தோன்றி நடித்துள்ளார். கிருஷ்ண பக்தி திரைப்படத்தில் பாமாவாக நடித்துள்ளார். ஏகம்பவாணன் (1947) திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.


பாடிய சில பாடல்கள்


 • திருவடி மலராலே – ராகம்: தேஷ், படம்: பிரபாவதி

 • திருமாது வளர் பொன்னாடு, வெள்ளிமலைக் கெதிராய் விளங்கும் ஏழுமலையான் – படம்: பிரபாவதி

 • என் மனம் கவர்ந்த – படம்: லாவண்யா (1951) இசை: எஸ். வி. வெங்கட்ராமன்

 • ஜீவிய பாக்கியமே, வெட்டுண்ட கைகள், கன்னியே மாமரி தாயே, அருள் தாரும் தேவ மாதாவே – படம்: ஞானசௌந்தரி (1948), இசை: எஸ். வி. வெங்கட்ராமன்

 • சிந்தை அறிந்து வாடி – படம்: ஸ்ரீவள்ளி, இயற்றியவர்: பாபநாசம் சிவன், இசை: சுதர்சனம்

 • நீலி மகன் நீ அல்லவோ – ராகம்: கரகரப்ரியா, படம்: மலைக்கள்ளன்

 • ஜீவ ஒளியாக – படம்: பைத்தியக்காரன், (டி. ஏ. மதுரத்திற்காகப் பின்னணி)

 • வெளி இணைப்புகள்

  பாடகி பி. ஏ. பெரியநாயகி – விக்கிப்பீடியா

  Singer P. A. Periyanayaki – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *