பாடகர் பங்கஜ் முல்லிக் | Singer Pankaj Mullick

பங்கஜ் குமார் முல்லிக் (Pankaj Kumar Mullick) (பிறப்பு; 1905 மே 10 – இறப்பு: 1978 பிப்ரவரி 19) என்று அழைக்கப்படும் பங்கஜ் முல்லிக், பிரபல வங்காள இந்திய இசையமைப்பாளரும் மற்றும் பின்னணி பாடகரும் ஆவார். திரைப்படங்களில் பின்னணி பாடல்கள் பயன்பாட்டின்போது, இவர் வங்காளத் திரையுலகம் மற்றும் இந்தித் திரையுலகில் திரைப்பட இசையின் முன்னோடியாக இருந்தார். அதே போல் ரவீந்திர சங்கீதத்தின் ஆரம்ப நிபுணராகவும் இருந்தார்.


1970 ஆம் ஆண்டில் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1972 ஆம் ஆண்டில் இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் பங்களிப்புக்காக தாதாசாகேப் பால்கே விருது (திரைத்துறையில் இந்தியாவின் மிக உயர்ந்த விருது , இந்திய அரசால் வழங்கப்படுவது) வழங்கப்பட்டது.


ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பயிற்சி


1905 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் மோனிமோகன் முல்லிக் மற்றும் மோனோமோகினி ஆகியோருக்குப் பிறந்தார். இவரது தந்தைக்குப் பாரம்பரிய வங்காள இசையில் ஆழ்ந்த ஆர்வம் இருந்தது. இவர் துர்காதாஸ் பாண்டியோபாத்யாயா என்பவரின் கீழ் இந்தியப் பாரம்பரிய இசையில் தனது ஆரம்பப் பயிற்சியைத் தொடங்கினார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் படித்தார். படிப்பு முடித்ததும், இரவீந்திரநாத் தாகூரின் உறவினரான தினேந்திரநாத் தாகூருடன் தொடர்பு கொண்டபோது இவரது வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்புமுனை ஏற்பட்டது. இது பங்கஜ் முல்லிக்கின் ரவீந்திர சங்கீதத்தின் மீது நீடித்த ஆர்வத்திற்கு வழிவகுத்தது. இரவீந்திரநாத் தாகூர், இவரை மிகவும் விரும்பினார். விரைவில் முல்லிக் தாகூரின் பாடல்களின் முன்னணி கலைஞர்களில் ஒருவராக அறியப்பட்டார்.


தொழில்


1926 இல் பதினெட்டு வயதில், கொல்கத்தாவை தளமாகக் கொண்ட ‘வீடியோஃபோன்’ என்ற நிறுவனத்துடன் தாகூரின் பாடலான நெமசே ஆஜ் புரோதம் என்ற பாடல் இவரது முதல் வணிகப் பதிவு ஆனது. இவர் பாடிய பல இசைத்தொகுப்புகளில் இதுவே முதலானது. இது அவருக்கு ரவீந்திர சங்கீதத்தில் ஒரு வீட்டுப் பெயரை உருவாக்கியது.


அகில இந்திய வானொலியின் முன்னோடியான இசையமைப்பாளர் ஆர்.சி.போரலுடன் 1927ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் உள்ள இந்திய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துடன் தனது பணியைத் தொடங்கினார். அங்கு இவர் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக இசை இயக்குநராகவும் கலைஞராகவும் பங்களித்தார்.


1931இல் தொடங்கி 38 ஆண்டுகளாக வங்காளம், இந்தி, உருது மற்றும் தமிழ் மொழி படங்களுக்கு பல்வேறு திறன்களில் பங்களித்தார். கே.எல்.சைகல், எஸ்.டி. பர்மன், ஹேமந்தா முகர்ஜி, கீதா தத் மற்றும் ஆஷா போஸ்லே போன்ற கலைஞர்களுக்கு இசை இயக்குநராக பணியாற்றினார். கே. எல். சைகல், பி .சி. பருவா மற்றும் கனன் தேவி போன்ற பிரபல திரைப்பட நடிகர்களுடன் நடித்தார். நிதின் போஸ் மற்றும் அவரது புகழ்பெற்ற ஒலிப் பொறியாளர் சகோதரர் முகுல் போஸ் ஆகியோருடன், முல்லிக் இந்தியத் திரையில் பின்னணி பாடலை அறிமுகப்படுத்தினார்.


ஆரம்பகால திரைப்பட அரங்கங்களில் ஒன்றான கல்கத்தாவின் நியூ தியேட்டர்சில் 25 ஆண்டுகள் பணியாற்றினார்.


ஆளுமை


இந்திய அஞ்சல் துறை 2006 ஆம் ஆண்டு ஆகத்து 4 ஆம் தேதி இவரது பிறந்த நூற்றாண்டு விழாவில் ஒரு அஞ்சல் முத்திரையை வெளியிட்டது. மே 10 அன்று, இந்தியாவின் மாநில தொலைக்காட்சி சேனலான தூர்தர்ஷன், இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஒரு சிறப்பு இசை நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர், 1959ஆம் ஆண்டில் நாடு முழுவதும் தூர்தர்ஷன் அறிமுக நிகழ்ச்சியில் இவரும் நடிகையும் பரதநாட்டியக் கலைஞருமான வைஜயந்திமாலா ஆகிய இருவரும் முக்கிய பங்கு வகித்தனர்.

வெளி இணைப்புகள்

பாடகர் பங்கஜ் முல்லிக் – விக்கிப்பீடியா

Singer Pankaj Mullick – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *