சோனு நிகம் (Sonu Nigam) (பிறப்பு: சூலை 30, 1973) என்பவர் இந்தியத் திரைப்படப் பாடகர், இசையமைப்பாளர், இசைத் தயாரிப்பாளர், ஒலிப்பதிவாளர், நேரலை நிகழ்த்துநர், நடிகரும் ஆவார். இவர் இந்தி மற்றும் கன்னட மொழிப்பாடல்கள் அதிகம் பாடியுள்ளார். இது மட்டுமின்றி , குஜராத்தி, மராத்திய மொழி, துளுவம், ஒடியா மொழி, மைதிலி மொழி , அசாமிய மொழி, வங்காளம், தமிழ், தெலுங்கு, மலையாளம், , நேபாளி மொழி மற்றும் பல இந்திய மொழிகளிலும் பாடியுள்ளார். இவர் பல முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதினைப் பெற்றுள்ளார்.
மேலும் பல இந்திய பாப் பாடல் தொகுதிகளில் இவர் நடித்து, வெளியிட்டுள்ளார். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதிக சம்பளம் பெறும் இந்தியப் பாடகர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.
ஆரம்பகால வாழ்க்கை, பிண்ணனி
நிகம் ஹரியானாவில் உள்ள பரீதாபாதுவில் சூலை 30, 1973 இல் பிறந்தார். இவருடைய தந்தை அகம் குமார் நிகம், தாய் சோபா நிகம். இவர் கயஸ்தா வகுப்பைச் சேர்ந்தவர். இவருடைய சகோதரி தீஷா நிகமும் தொழில்முறைப் பாடகராக உள்ளார்.
நிகம் தனது நான்காம் வயதிலிருந்தே பாடத் துவங்கினார். அவர் தனது தந்தையுடன் இனைந்து மேடைகளில் முகமது ரபியின் கியா ஹுவா எனும் பாடலைப் பாடினார். அதிலிருந்தே திருமணம் போன்ற நிகழ்வுகளின் போது தனது தந்தையுடன் சேர்ந்து பாடினார். தனது பதினெட்டாவது வயதில் மும்பை சென்று பாலிவுட் திரைப்படங்களில் பாடல்களைப் பாடினார். குலாம் முஸ்தபா கானிடம் இந்துஸ்தானி இசை பயின்றார்.
மாதுரிமா நிகம் ஷா என்பவரை பெப்ரவரி 15, 2002 இல் திருமணம் செய்தார்.
இசை தொகுப்புகள், இசை நிகழ்ச்சிகள்
நிகம், காதல் பாடல்கள், சோகப் பாடல்கள் , நாட்டுப்பற்றுள்ள பாடல்களை , குஜராத்தி, மராத்திய மொழி, துளுவம், ஒடியா மொழி, மைதிலி மொழி , அசாமிய மொழி, வங்காளம், தமிழ், தெலுங்கு, மலையாளம், , நேபாளி மொழி உருது மற்றும் பல இந்திய மொழிகள் உள்ளிட்ட பல மொழிகளில் பாடியுள்ளார். மேலும் பாப் பாடல் தொகுப்பினை இந்தி, கன்னடம், ஒடியா மொழி, பஞ்சாபி மொழி போன்ற பல மொழிகளில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்து சமயம் மற்றும் முஸ்லிம் போன்ற சமயங்களின் பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். பௌத்தமதப் பாடல் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். மேலும் வட அமெரிக்கா,ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா,ஆசியா, ஆத்திரேலியா போன்ற பல நாடுகளில் நடைபெற்ற பாடல் நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். 2007 ஆம் ஆண்டில் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் கனடா மற்றும் ஜெர்மனியில் சிம்ப்ளி சோனு எனும் பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்திய முதல் இந்தியப் பாடகர் இவர் ஆவார்.
விருதுகள், அங்கீகாரங்கள்
1997
பார்டர் எனும் திரைப்படத்தில் , சந்தேசே ஆதே எனும் பாடலுக்காக ஜீ தொலைக்காட்சி சினிமா விருதுகளில் சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான விருது பெற்றார். அதே பாடலுக்காக ஆசிர்வாத் விருது மற்றும் சான்சுயி மக்கள் தேர்வு விருதுகளை அதே ஆண்டில் பெற்றார்.
2003
தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான விருதை கல் ஹோ எனும் பாடலைப் பாடியதற்காகப் பெற்றார். இதே பாடலுக்காக அப்சரா திரைப்படத் தயாரிப்பாளர்களின் கில்ட் விருது மற்றும் பாலிவுட் இசை விருதுகளையும் பெற்றார். மேலும் பிலிம்பேர் விருதையும் பெற்றார்.