உஷா உதூப் (Usha Uthup: நவம்பர் 8, 1947) இந்திய பாப் இசைக்கலைஞரும் திரைக்கலைஞரும், ஜாஸ் இசைக்கலைஞரும் திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் 1960 களின் பிற்பகுதியில் தொடங்கி, 1970, 1980 களில் நிறைய பாடல்களைப் பாடியுள்ளார். இன்றுவரை பாடிக்கொண்டிருப்பவர் ஆவார். 7 கூன் மாஃப் என்ற படத்தில் ரேகா பரத்வாஜுடன் இவர் பாடி பதிவுசெய்த டார்லிங் என்ற பாடலுக்காக இவர் 2012 ஆம் ஆண்டின் சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருது பெற்றார்.
இளமை
உஷா நவம்பர் 8, 1947 இல் அன்றைய பாம்பேயில் (மும்பை) பிறந்தார். இவருடைய தந்தை வைத்யந்தநாத் சோமேஸ்வர் சாமி இவர் 1947 இல் தமிழ்நாட்டின் மெட்ராசிலிருந்து (இன்றைய சென்னை) மும்பைக்குக் குடிபெயர்ந்தவர்.
உஷா கிளேர் சாலை, பைக்சுல்லாவில் உள்ள புனித ஆக்னேஸ் உயர்நிலைப்பள்ளியில் படித்தார். இவர் படித்துக் கொண்டிருந்தபோது இவருடைய குரல் பாடுவதற்கேற்ப இல்லை என இசை வகுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் இவருடைய இசையாசிரியர் இவருக்குள் இருக்கும் இசையார்வத்தைக் கண்டு சில இசைக்கருவிகளை உஷாவுக்கு வாசிக்கத் தந்தார். முறையாக இசைப்பயிற்சி அளிக்கப்படாத போதிலும் உஷா இசைச் சூழலுடனேயே வளர்ந்தார். உஷாவின் பெற்றோர்கள் அதிகமாக மேற்கத்திய இசை, இந்துஸ்தானி இசை, கர்நாடக இசை ஆகியவற்றைக் கேட்கவைத்தனர். அவர்களோடு இணைந்து உஷாவும், வானொலியில் கிஷோரி ஆம்னோகர், படே குலாம் அலிகான் ஆகியோரின் இசையைக் கேட்டார். ரேடியோ சிலோன் நிகழ்ச்சிகளை மிகவும் ரசித்துக் கேட்டார்.
உஷாவின் பக்கத்துவீட்டில் இருந்தவர் காவல்துறை உதவி ஆணையாளராக இருந்த எஸ். எம். ஏ பதான் என்பவர். இவருடைய மகள் ஜமீலாவும் உஷாவும் சிறந்த நண்பர்கள். ஜமீலா உஷாவிற்கு இந்தி மொழியைக் கற்பித்ததுடன் இந்திய பாரம்பரிய இசையில் ஈடுபாடு கொள்ளச் செய்தார். இதுவே அவருடைய புதுமையான இசைக்கலவையோடு 1970 களில் தனித்துவமான, முன்னணி, இந்திய பாப் இசைக்கலைஞராக வலம் வர உதவி செய்தது. இவர் கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்த ஜானி உதூப் என்பவரை மணந்துகொண்டார். தற்பொழுது மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் வசித்துவருகிறார்.
வெளி இணைப்புகள்
பாடகி உஷா உதூப் – விக்கிப்பீடியா