சித்தாரா கிருஷ்ணகுமார் (Sithara Krishnakumar) (பிறப்பு: சூலை 1, 1986) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த பின்னணி பாடகியும், இசையமைப்பாளரும், நடிகையும் ஆவார். இவர் பிரதானமாக மலையாள திரைத்துறையிலும், மேலும் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரைத்துறைகளிலும் பணியாற்றுகிறார். சித்தாரா இந்துசுதானி மற்றும் பாரம்பரிய கர்நாடக இசை மரபுகளில் பயிற்சி பெற்றவரும், அங்கீகரிக்கப்பட்ட கசல் பாடகியும் ஆவார். சிறந்த பாடகருக்கான இரு கேரள மாநில திரைப்பட விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
சித்தாரா உலகம் முழுவதும் பல கச்சேரிகளிலும், மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். நாட்டுப்புற இசையில் ஆர்வமுடைய சித்தாரா கேரளாவில் உள்ள பல்வேறு பிரபலமான இசைக் குழுக்களுடன் இணைந்து நிகழ்ச்சிகள் கொடுத்துள்ளார் 2014 ஆம் ஆண்டில் ஈசுட்ராகா என்ற இசைக் குழுவை உருவாக்கினார். இவர் சமகால நாட்டுப்புற மற்றும் பாராம்பரிய பாடல்களின் குழுவான மலபரிகசு குழுவின் பத்து உறுப்பினர்களில் ஒருவராவார்.
தனிப்பட்ட வாழ்க்கை
சித்தாரா கேரளாவில் மலப்புறத்தில் பிறந்தார். பாரம்பரிய கலைகளில் ஆர்வமுள்ள குடும்பத்தில் பிறந்த சித்தாரா தனது குழந்தைப் பருவத்தில் இசை உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு நான்கு வயதில் பாடத் தொடங்கினார். இவர் செயின்ட் பால்சு மேல்நிலைப்பள்ளி தெங்கிபலம், கோழிக்கோடு பல்கலைக்கழக வளாகப் பள்ளி மற்றும் செலம்பிராவிலுள்ள என்.என்.எம் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் பயின்றார். மேலும் ஃபெரோக்கின் ஃபாரூக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். இவற்றுடன் கேரளாவின் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
சித்தாரா 2007 ஆம் ஆண்டு ஆகத்து 31 அன்று இருதயவியல் நிபுணரான வைத்தியர் எம் சயீசு என்பவரை மணந்தார். இத் தம்பதியினருக்கு 2013 ஆம் ஆண்டு சூன் 9 அன்று சாவன் ரிது என்ற பெண் குழந்தை பிறந்தது. சித்தாரா குடும்பத்தினருடன் கேரளாவின் அலுவாவில் வசிக்கின்றார்.
பணி வாழ்க்கை
சித்தாரா நடனக் கலைஞராக தனது கலை வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னாளில் பின்னணி பாடகியாக ஆனார். குரு சிறீ ராமநட்டுக்கரா சதீசன் மற்றும் பாலாய் சி.கே.ராமச்சந்திரன் ஆகியோரிடம் கர்நாடக இசையில் பயிற்சி பெற்றார். சித்தாரா உசுதாத் பியாசு கானிடமிருந்து இந்துசுதானி பாரம்பரிய இசையில் விரிவான கல்வியைப் பெற்றார். இவர் கலாமண்டலம் வினோடினியால் பயிற்றுவிக்கப்பட்ட பாரம்பரிய நடனக் கலைஞரும் ஆவார். இவரது பன்முகத் திறமைகளுக்காக, காலிகட் பல்கலைக்கழக கலை விழாவில் கலாதிலகம் என்ற பட்டம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக வழங்கப்பட்டு (2005 மற்றும் 2006) பாராட்டப்பட்டார். கொல்கத்தாவின் ரவீந்திர பாரதி பல்கலைக்கழகத்தில் இந்துசுதானி கியால் இசை மற்றும் குரல் இசை ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார்
2007 ஆம் ஆண்டில் வினயனின் மலையாள திரைப்படமான அதிசயனில் பம்மி பம்மி பாடலில் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அதற்கு முன்பு ஆசியநெட் சப்தா சுவரங்கள் (2004), கைராலி டிவி காந்தர்வா சங்கீதம் (சீனியர்சு) மற்றும் ஜீவன் டிவி குரல் 2004 போன்ற பல இசை திறமை நிகழ்ச்சிகளில் வெற்றியாளராக திகழ்ந்தார். 2008 ஆம் ஆண்டில் ஜீவன் டிவியின் 20 மில்லியன் ஆப்பிள் மெகாஸ்டார்ஸையும் வென்றார். சித்தாரா கசல் மற்றும் பிற இசைகளில் மேடை கலைஞராக புகழ் பெற்றார். ஓசெப்பச்சன், எம்.ஜெயச்சந்திரன் , ஜி.வி.பிரகாஷ் குமார், பிரசாந்த் பிள்ளை, கோபி சுந்தர், பிஜிபால், ஷான் ரஹ்மான் போன்ற பிரபல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். மேலும் மலையாளம் மற்றும் பிற இந்திய மொழிகள் உட்பட 300 க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களைப் பாடியுள்ளார்.
2017 ஆம் ஆண்டில், என்டே ஆகாசம் என்ற அவர் எழுதிய பாடலைக்கு இசையமைத்தார். இது சர்வதேச மகளிர் தினத்தை நினைவூட்டும் வகையில் கேரள மாநில மகளிர் மேம்பாட்டுக் கழகம் நடத்திய நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இக் காணொளி இரவுநேர பெண் தொழிலாளர்களின் வாழ்க்கையை சித்தரித்தது.
சித்தாரா மிதுன் ஜெயராஜுடன் உதலாசம் திரைப்படத்தில் இசை அமைப்பாளராக பணியாற்றினார். இத் திரைப்படம் அவரது கணவர் டாக்டர் சஜிசின் டாக்டர்ஸ் திலிமா- என்ற பதாகையின் கீழ் தயாரிக்கப்படுகிறது. சித்தாரா பிசாரடி இயக்கிய மலையாள திரைப்படமான கணகந்தர்வனில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றினார்.