ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணை ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந் நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன. இது 3அடி சிற்றெல்லை 6 அடி பேரெல்லை ஆகும். ஆசிரியப்பாவால் ஆன இந்நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.

புலவர்கள்

ஐங்குறுநூற்றில் அடங்கியுள்ள பாடல்களில் ஒவ்வொரு திணையைச் சேர்ந்த பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்பட்டுள்ளன. இவற்றைத் தொகுக்க உதவும் பாடலும், பிரிவுகளும்:

மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்

கருதும் குறிஞ்சி கபிலர் – கருதிய
பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே

நூலையோ தைங்குறு நூறு.

ஆகியோர் பாடியுள்ளனர். இதனைத் தொகுத்தவர் “புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்”. தொகுப்பித்தவன் “யானைகட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை”.

நூலின் அமைப்பு

எட்டுத்தொகை நூல்களில் தொல்காப்பியம் கூறும் வரிசைப்படி குறிஞ்சித் திணையை முதலில் வைக்காமல் மருதத் திணையை முதலில் வைத்துப் பாடிய பாடல் இது ஒன்றே ஆகும்.

நூறு நூறு பாடல்களாகப் பயின்று வரும் பாடல்களினாலோ அல்லது அப்பாடல்களில் பயின்று வரும் சொல்லாட்சியினாலோ தனித்தனி பெயர்கள் பெற்றன. வேட்கைப்பத்து, வேழப்பத்து, நெய்யோப்பத்து, களவன் பத்து போன்றவை சொல்லாட்சியாலும், பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து, தோழி வற்புறுத்தப்பத்து, செவிலி கூற்றுப்பத்து முதலியன பொருளமைப்பாலும் பெயர் பெற்றன.

மேலும் தொண்டிப்பத்து அந்தாதி முறையில் அமைந்தது. அன்னாய் பத்து சொல்லாட்சியும் பொருளமைதியும் பொருந்தியது. விலங்கு, பறவைகளைக் கருப்பொருளாகக் கொண்டு குரக்குப்பத்து, கேழற்பத்து, மயிற்பத்து, கிள்ளைப்பத்து ஆகிய பெயர்களும் அமைந்துள்ளன.

குறைந்த அளவினதான அடிகள் கொண்டிருந்தாலும் இப்பாடல்களில் அகப்பொருளுக்குரிய முதல், கரு, உரி ஆகிய மூன்றும் குறைவின்றி அமைந்துள்ளன. உள்ளுறை, உவமை, இறைச்சி முதலிய நயங்கள் நிறைந்துள்ளன.

பதிப்பு வரலாறு

சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந் நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1903ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும்வெளியிட்டுள்ளனர்.”

வெளி இணைப்புகள்

ஐங்குறுநூறு – Wikipedia

தமிழ் இலக்கியம்

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *