சந்திரபோஸ் (இறப்பு: செப்டம்பர் 30, 2010) தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும், பாடகரும், நடிகரும் ஆவார். 1977 முதல் 90களின் ஆரம்பம் வரை இவர் முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
இசையமைப்பாளராக
வி. சி. குகநாதனின் இயக்கத்தில் 1977-ம் ஆண்டு வெளிவந்த மதுரகீதம் படத்தின் மூலம் அறிமுகமான சந்திரபோஸ் தொடக்க காலத்தில் இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். எம். எஸ். விஸ்வநாதன் இசையில் ஆறு புஷ்பங்கள் படத்தில் சந்திரபோஸ் பாடிய ஏண்டி முத்தம்மா என்ற பாடல் அவரை மிகப் பிரபலமாக்கியது.
பின் “மாங்குடி மைனர்’, “மச்சானை பார்த்தீங்களா’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார். “மச்சானைப் பார்த்தீங்களா’ படத்தில் இடம்பெற்ற “மாம்பூவே சிறு மைனாவே’ பாடல் என்றும் நினைவில் நிற்கும் பாடலாகும். இதைத் தொடர்ந்து “மனிதன்’, “அண்ணா நகர் முதல் தெரு’, “ராஜா சின்ன ரோஜா” உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தார். மனிதன் படத்தில் வரும் வானத்தைப் பார்த்தேன், மனிதன் மனிதன், அண்ணா நகர் முதல் தெரு படத்தில் இடம்பெற்ற ‘மெதுவா மெதுவா’, சங்கர் குருவில் இடம் பெற்ற ‘காக்கிச் சட்ட போட்ட மச்சான்’, மக்கள் என் பக்கம் படத்தில் வரும் ‘ஆண்டவனைப் பாக்கணும்’ போன்ற பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை. வி. சேகரின் இயக்கத்தில் வெளிவந்த “நான் பெத்த மகனே” திரைப்படத்தில் இவர் கடைசியாக இசையமைத்திருந்தார்.
நடிகராக
அண்மைக்காலங்களில் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர் நாடகங்களிலும் நடித்து வந்தார். “கத்திக் கப்பல்’ படத்தில் இவரது நடிப்பு பரவலான பாராட்டுகளைப் பெற்றது. தற்போது “சூரன்’ என்ற படத்தில் நடித்து வந்தார். “மலர்கள்’, “திருப்பாவை”, உள்ளிட்ட பல தொலைக்காட்சி நாடகங்களில் இவர் நடித்துள்ளார்.
12 வயதிலேயே பாய்ஸ் நாடகக் கம்பெனியில் நடித்த இவர், கலைஞர் நடித்த மணிமகுடம், கலைஞரின் பராசக்தி நாடகம் ஆகியவற்றிலும் நடித்திருக்கிறார்.
இவர் இசையமைத்த சில திரைப்படங்கள்
இவர் இசையமைத்த சில புகழ் பெற்ற பாடல்கள்
இவர் பாடிய சில பாடல்கள்
மறைவு
நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி 2010 செப்டம்பர் 30 இல் இறந்தார். மறைந்த சந்திரபோசுக்கு இராஜகுமாரி, கீதா என்ற இரு மனைவிகளும், சந்தோஷ்,வினோத் சந்தர் என்ற இரு மகன்களும், கௌரி என்ற மகளும் உள்ளனர்.