இசையமைப்பாளர் அம்சலேகா | Music Director Hamsalekha

அம்சலேகா (Hamsalekha) 1951 ஜூன் 23 அன்று பிறந்த ஒரு இந்திய இசை அமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். 1980 களின் பிற்பகுதியிலிருந்து தென்னிந்திய சினிமா உலகில் குறிப்பாக, கன்னட திரைப்பட துறையில் பணிபுரிந்து வருகிறார். அவர் ஒரு திரைக்கதை எழுத்தாளர், உரையாடல் எழுத்தாளர், கருவி கலைஞர் மற்றும் ஒரு நடத்துனரும் ஆவார். 300 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார்.


அம்சலேகா பொதுவாக நாத பிரம்மா என்ற பெயரால் அழைக்கப்படுகிறார் இசையமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும், இளைய தலைமுறையினருக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தும் பாணியில் இசையமைத்து வருகிறார். அவர் நாட்டுப்புற ஒருங்கிணைப்பு மற்றும் மேற்கத்திய சினிமா உணர்வை பிரதான சினிமாவில் அறிமுகப்படுத்தினார். பல இசை திறமைகளை (பாடகர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்கள்) திரைப்படத்துறைக்கு அறிமுகப்படுத்தி அவர்களுக்கு அவர் அங்கீகாரம் பெற்றித் தந்துள்ளார்.


சிறந்த இசை இயக்குனர் பிரிவில் ஒரு தேசிய திரைப்பட விருது மற்றும் ஆறு ஃபிலிம்ஃபேர் விருதுகளை அம்சலேகா பெற்றுள்ளார், மேலும், ஏழு கர்நாடக மாநில திரைப்பட விருதுகள் – இசையமைப்பாளாரக நான்கு மற்றும் பாடல் வரிகளுக்காக மூன்றும் – பெற்றுள்ளார். பெங்களூர் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றவர்.


ஆரம்ப கால வாழ்க்கை


அம்சலேகா இந்தியாவின் மாண்டியாவில் கோவிந்தராஜு கங்கராஜு எனற இயற் பெயருடன் பிறந்தார். தனது தந்தையின் அச்சுக்கூடத்தில் பணியாற்றினார். பின்னர் அவரது சகோதரர் பாலகிருஷ்ணனின் இசைக்குழுவில் சேர்ந்தார். அவரிடம் கவிதை எழுதும் மற்றும் இசையை உருவாக்கும் ஒரு பெரிய திறமை இருந்தது. அவர் “அம்சலேகானி” என மறுபெயரிட்டுக் கொண்டார். ஏனெனில் அவரது குரு வாவனி நீலகண்டப்பா வழங்கிய “ஸ்வான்” என்னும் பேனாவை கன்னட மொழியில் எழுத பயன்படுத்தினார். பின்னர், அவரது ஆசிரியர் “அம்சலேகா” என்ற பெயரை மாற்றினார். திரைப்பட இயக்குனரான எம். என் .பிரசாத்தின் திரைப்படங்களில் அவர் அறிமுகப்படுத்தப்பட்டார், நடிகர் உதயகுமாரின் திரிவேணி (1973) திரைப்படத்திற்கான ஒரு பாடல் எழுத வாய்ப்பளித்தார். இசையாசிரியராக அவரது முதல் படம் “ரகுசந்திரா” வெளியிடப்படவில்லை. பின்னர் “நானு நன்னா ஹென்டத்தி ” (1985) படத்திற்கான உரையாடல் மற்றும் பாடலாசிரியராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் நடிகர் இயக்குனர் ரவிச்சந்திரன் உடன் பிரேமலேகா படத்தில் இணைந்த பிறகு அவரது புகழ் அதிகரித்தது. இது 1987 இல் வெளியிடப்பட்டது.


குடும்ப வாழ்க்கை


1990களில் பின்னணி பாடகரான லதாவை அம்சலேகா திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு அலங்கார் என்ற ஒரு மகனும், தேஜஸ்வினி, நந்தினி என இரண்டு மகள்களும் உள்ளனர். அலங்கார் நடிகர் மற்றும் இசைக்கலைஞராக படங்களில் பணிபுரிகிறார்.சுக்கி, தபோரி மற்றும் ரோஜா போன்றத் திரைப்படங்களில் தொடர்புடையவர். அவர் பெங்களூரு பல்கலைக்கழகத்திலிருந்து நாடகம் மற்றும் இயக்கத்திற்கான முதுகலைப் பட்டம் பெற்று அவரது தந்தை அம்சலேகாவுடன் பல நாடகங்களை இயக்குகிறார். இவரது மகள் நந்தினி தனது பின்னணிப் பாடலை சிக்சர் (2006) திரைப்படத்துடன் தொடங்கினார்.


குறிப்பிடத்தக்க படைப்புகள்


பிரேமலேகாவில் பணிபுரிந்த பிறகு, கன்னட திரைப்படத்தில் பல வெற்றிகளுடன் ஹம்சலேகா மிகப்பெரிய இசை இயக்குனர்களில் ஒருவராக ஆனார். மேற்கத்திய, பாப், ராக், ஹிப் ஹாப், இந்திய கிளாசிக்கல், நாட்டுப்புற, கஜல் , சூஃபி மற்றும் குத்தாட்டப் பாடல்கள் உள்ளிட்ட பல வகை இசை பாணிகளை அவர் அவ்வப்போது பயன்படுத்துகிறார். ஸ்பார்சா படத்திற்கு இசையமைத்த “சந்திரகிந்தா சாந்தா” என்ற கசல் பாடல் பெரிய வெற்றி பெற்றது. ஹாகுலு வெஷா படத்தில் அவரது இசை செயற்கைத் ஒலியைப் பயன்படுத்தாமல் கிராமிய மற்றும் நாட்டுப்புற உணர்வைக் கொண்டிருந்தது. 2010 ஆம் ஆண்டு திரைப்படமான நானு நன்ன கனசு என்றப் படம் அவரது இசை விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் அவர் இசையமைத்த புத்தக்கன ஹைவே படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.


டாக்டர் ராஜ் குமார், பி. பீ. ஸ்ரீநிவாஸ், பி. சுசீலா, கே. ஜே. அஸுதாஸ், எஸ். பி. பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம், எஸ். ஜானகி, கே.எஸ். சித்ரா,கவிதா கிருஷ்ணமூர்த்தி, மஞ்சுள குருராஜ், ராஜேஷ் கிருஷ்ணன், சோனு நிகம், ஹரிஹரன் மற்றும் சிரேயா கோசல் ஆகியோரால் பாடப்பட்ட பல பாடல்களுக்கு இவர் இசையமைத்திருந்தார்.


பிற இசை


அம்சலேகா மேடை நாடகங்களுக்கும் தனிப்பட்ட ஆல்பங்களுக்கும் இசையமைத்துள்ளார்.


எழுத்தாளராக


அம்சலேகா பல திரைப்படங்களுக்கு கதைகள், திரைக்கதை மற்றும் உரையாடல்கள் எழுதியுள்ளார்.


வழிகாட்டியாக


அம்சலேகா பல குறிப்பிடத்தக்க பாடகர்கள், இசை இயக்குநர்கள், பாடலாசிரியர், கன்னட திரைப்படத் துறையில் இயக்குநர்கள் ஆகியோர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார்.


வெளி இணைப்புகள்

இசையமைப்பாளர் அம்சலேகா – விக்கிப்பீடியா

Music Director Hamsalekha – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *